வெள்ளிமணி

இரணியூரில் நவ துர்க்கை வழிபாடு!

21st Jan 2022 03:02 PM

ADVERTISEMENT

 

சக்தி வழிபாடு மிகவும் தொன்மையானது. நமக்கு வேண்டியதை அருளும் சக்தியை துர்க்கையாக, திருமகளாக, கலைமகளாகப் போற்றி வழிபடுகிறோம். தமிழகத் திருக்கோயில்களில் சக்தி வழிபாடு சிறப்பிடம் பெற்று விளங்குவதைக் காண்கிறோம்.

சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் போற்றும் இலுப்பைக்குடி, இளையாத்தங்குடி, வயிரவன்கோயில், மாத்தூர், நேமம், சூரக்குடி, பிள்ளையார்பட்டி, வேலங்குடி, இரணியூர் ஆகிய ஒன்பது கோயில்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. 

இவற்றில் இரணியூரில் கோயில் கொண்டு விளங்கும் இறைவன் "ஆட்கொண்ட நாதர்' என்றும், "ஆட்கொண்ட ஈஸ்வரமுடைய நாயனார்' என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி "சிவபுரந்தேவி' என்ற பெயருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.

ADVERTISEMENT

தல வரலாறு: இரணியன் எனும் அசுரனை அழிக்க திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தில் மனித உடலும், சிங்கத் தலையையும் கொண்டிருந்தார். இரணியனை கூரிய நகங்களால் கிழித்து அழித்தார். மிகவும் உக்கிரமாக இருந்த காரணத்தால் பிரகலநாதன் இனிய பாடல்கள் பாடி அவரை வழிபட்டான். இரணியனை வதம் செய்த தோஷம் நீங்க, இத்தலத்தில் சிவபெருமானை நரசிம்மர் வழிபட்டார் என்பது வரலாறு. 

அஷ்டலட்சுமி: இக்கோயிலின் நுழைவுவாயில் முன்பாக அமைந்துள்ள மண்டபம் "லட்சுமி மண்டபம்' என அழைக்கப்படுகிறது. இங்குள்ள தூண்களில் ஆதி லட்சுமி, தனலட்சுமி, கஜலட்சுமி, செüபாக்ய லட்சுமி, வரலட்சுமி, தான்ய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், இம்மண்டபத்து விதானத்தில் செல்வ வளம் அளிக்கும் "சங்கநிதி', "பதுமநிதி' வடிவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதையும் காணலாம். 

ராஜகோபுரத்தின் சுவர்ப் பகுதியில் தெய்வ வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சக்தியின் அம்சமான காளி, மகிஷாசுரமர்த்தினியின் சிற்ப வடிவங்கள் காட்சி அளிக்கின்றன.

துர்க்கையின் பல்வேறு வடிவங்கள்: கோயிலுனுள்ளே இறைவன் சந்நிதிக்கு முன்புறம் இறைவி சிவபுரந்தேவி சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் முன்பாக நவதுர்க்கை மண்டபம் அமைந்துள்ளது. இங்கே தூண்களில் துர்க்கையின் பல்வேறு வடிவங்களைக் கண்டு வழிபடலாம். ருத்ர துர்க்கை, ஸ்தூல துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, விஷ்ணு துர்க்கை, நவதுர்க்கை, மகாதுர்க்கை, ஜல துர்க்கை, சூலினி துர்க்கை ஆகிய ஒன்பது வடிவங்களைக் காணலாம்.

சக்தியின் வடிவமான நவ துர்க்கை வடிவங்களையும் இக்கோயிலில் ஒரே இடத்தில் கண்டு வழிபடுவது சிறப்பு. மேலும் ஒவ்வொரு சிற்பத்தின் கீழே அதன் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வழகிய சிற்பங்கள் 1935}ஆம் ஆண்டு நாட்டரசன்கோட்டை பொன்னுசாமி ஆச்சாரியின் மேற்பார்வையில் இங்கு செய்து அமைக்கப்பட்டவை என்ற குறிப்பும் காணப்படுகிறது.  

சக்தி வழிபாட்டுச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இரணியூர் திருக்கோயில் சென்று வழிபட்டு செல்வவளம் அனைத்தும் அடைவோம். 

அமைவிடம்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் திருத்தலம் அமைந்துள்ளது.

-கி. ஸ்ரீதரன் 

ADVERTISEMENT
ADVERTISEMENT