வெள்ளிமணி

வேண்டிய வரம் அருளும் வெள்ளலூர் தேனீசுவரர்!

தினமணி


சோழன் எழுப்பிய திருக்கோயில். அந்நியப் படையெடுப்பில் சிதைந்து, அடியார்களால் உயிர்ப்பெற்ற சிவாலயம். கொங்கு நாட்டின் பழம்பெரும் திருத்தலம். "வேண்டிய வரம் அருளும் இறைவன்' எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட திருக்கோயிலாகத் திகழ்வது, கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளலூர் சிவாலயம்.
இப்பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள், பட்டயங்கள் இதன் தொன்மையையும், சிறப்புக்களையும் கூறுகின்றன.
தொன்மை: சங்க இலக்கியங்களில் புகழப்படும், காஞ்சியாறு எனும் நொய்யலாற்றின் கரையோரத் திருத்தலமாக வெள்ளலூர் விளங்குகிறது.
இவ்வூர் வெள்ளை என்ற பெயர் கொண்ட பழங்குடித் தலைவனால் ஆளப்பட்டதாகவும், அதனால் "வெள்ளையூர்' என்று பெயர் பெற்று நாளடைவில் "வெள்ளலூர்' ஆனதாகவும் கூறப்படுகிறது. இருகூர் செப்பேட்டிலும் "வெள்ளலூர்' என்ற பெயரே காணப்
படுகிறது. ஆனால், வெளியூர், தென்னூர், தேனூர், வள்ளலூர், தென்னூர்ப்பாடி, அன்னதானச் சிவபுரி என்பவை இவ்வூரின் பழைமையான பெயர்களாக இருந்ததை அறிய முடிகிறது.
வெள்ளலூரில் கிடைத்த அறுநூறுக்கும் மேற்பட்ட ரோமானிய நாணயங்கள், இத்தலத்தின் தொன்மையை கி.பி. முதலாம் நூற்றாண்டிற்கு அழைத்து செல்கின்றன. இதன் மூலம் நம் நாட்டு வணிகர்கள், ரோமானியர்
களோடு வாணிபம் நடத்தியதை அறியமுடிகிறது.
கரிகால் சோழன் தனக்கு ஏற்பட்ட விமர்த்திதோஷம் நீங்க கொங்கு நாட்டில் எழுப்பிய கோயில்களில் ஒன்றாகத் திகழ்வது "வெள்ளலூர் சிவாலயம்' என்று தலவரலாறு கூறுகிறது.
கி.பி. 14 -ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பில் இவ்வாலயம் சிதைக்கப்பட்டது. பல ஆண்டுகள் வழிபாடின்றி இருந்த இவ்வாலயம் சிவனடியார்களின் பெருமுயற்சியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
கல்வெட்டுகள் - செப்புப்பட்டயங்கள்: 1910 -ஆம் ஆண்டைச் சார்ந்த தொல்லியல் ஆய்வறிக்கையில் எட்டு கல்வெட்டுகள் வெள்ளலூரில் கண்டறியப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இவை கோயிலின் மண்டபத்தூண்களிலும், கிழக்குவாசலிலும் அமைந்துள்ளது.
இவற்றின் வாயிலாக, கால்நடைகள், நிலங்கள், தானம் அளித்த செய்திகளை அறிய முடிகிறது. இன்றைய வெள்ளலூரை "அன்னதானச் சிவபுரி' என விக்கிரம சோழதேவனின் கி.பி.1291 -ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.
கொங்கு நாட்டின் உட்பிரிவு நாடான வாயறைக்கால் நாட்டிற்கு உட்பட்ட ஊராக, வெள்ளலூர் விளங்கியிருக்கின்றது. இருகூர் செப்பேட்டில் (கி.பி.11-ஆம் நூற்றாண்டு)வெள்ளலூர் ஆறை நாட்டுக்கு உட்பட்ட பேரூர் நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் வெற்றிலை விளையும் நிலமாக இருந்ததையும், அதனை அந்தணர்கள் சோழமன்னனுக்கு, வெற்றிலையோடு சில பொருள்களைச் சேர்த்து வழங்கியதாகவும், அதற்கு பதிலாக பல்வேறு கொடைகளை மன்னன் அளித்ததாகவும் கூறப்பட்டுகிறது.
தேனீசுவரர்: இறைவன் தன்னை உள்ளன்போடு வழிபடுவோரின் பெயரையே தன் பெயரில் ஏற்று அருள்தருவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் காமதேனு வழிபட்ட இறைவன், தேனுவின் பெயரால் தேனுபுரீசுவரரர் என்று அழைக்கப்படுவதாக தலவரலாறு கூறுகிறது. அதேசமயம், கொங்கு விக்கிரம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இறைவன் பெயர் "தென்னூர் ஆண்டார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரூர், வெள்ளிமலை, மருதமலை, முட்டம் ஆகிய தலங்களில் இறைவனை காமதேனு வழிபட்டதை "பேரூர் புராணம்' குறிப்பிடுகிறது.
ஆலய அமைப்பு: கிழக்கு முகமாக திருக்கோயில் அமைந்துள்ளது. முதல் சுற்றில், கல்யாண விநாயகர், இரண்டாம் சுற்றில், ராஜகோபுரத்திற்கு மாற்றாக எளிய நுழைவு வாயிலில் சுதையாலான பெரிய சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இடதுபுறம்,ஜோதிலிங்கேசுவரர், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இவரை சித்திரை முதல் நாளில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் வழிபடுவதால், "பாஸ்கர ஷேத்திரமாக'வும் போற்றப்படுகிறது.
கருவறையில் தேனீசுவரர் வட்ட வடிவ ஆவுடையாரில் எளியவராக அருள்காட்சி வழங்குகிறார். இறைவனின் இடதுபுறம், சுவாமியைப் போலவே எளியவளாக வலக்கரத்தில் நீலமலர் தாங்கியும், இடது கரத்தை எழிலாகத் தொங்கவிட்ட நிலையிலும் அம்பிகை காட்சியளிக்கிறாள்.
கருவறைச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன், துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் காட்சி தருகின்றனர். வடமேற்கில் முருகப்பெருமான் சந்நிதி, கால பைரவர், சனீசுவரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
விழாக்கள்: பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன.
அமைவிடம்: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கி.மீ.தொலைவில் வெள்ளலூர் திருத்தலம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT