வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 177

டாக்டா் சுதா சேஷய்யன்


இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், அமெரிக்கா போன்ற இடங்களில், தேசிய போராட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இப்படிப்பட்ட கூட்டங்களில், வெறும் தகவல்களோடு நில்லாமல், குண்டுகள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல், வீரக் கலைகள் போன்றவற்றில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 

சியாம் கிருஷ்ண வர்மா, வ. வே. சு. ஐயர், ரேவாபாய் ராணா, வீர் சாவர்க்கர், பிகாய்ஜி காமா அம்மையார் உள்ளிட்ட பலர் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கின்றனர். 

1908-ஆம் ஆண்டின் கடைப்பகுதியில், லண்டன் கேக்ஸ்டன் ஹாலில் ஆற்றிய உரைகளைக் கேட்டு, இங்கிலாந்து மக்களின் பொது அபிப்ராயமும் பிரிட்டிஷாருக்கு எதிராகவே வலுத்துள்ளது. 

இதே காலகட்டத்தில், வெளிநாடுகளில் பிரசுரித்து வெளியிடப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்டத்தைப் புகழ்கிற இதழ்களையும், கையேடுகளையும் இந்தியாவிற்குள் கொணர்ந்து, பலருக்கும் விநியோகிக்கும் முயற்சிகளும் நிரம்ப நடந்தன. 

புதுச்சேரியில் வெளிவந்த "இந்தியா', "சூர்யோதயா', "விஜயா' போன்ற இதழ்களை ரகசியமாகப் பெறுவதிலும், வாசிப்பதிலும் பரிமாறிக் கொள்வதிலும் பாரத மாதா சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த இதழ்கள் யாவும் அநேகமாகச் சுட்டிக் காட்டிய தகவல்கள் இவைதாம்: 

பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் பலனாக, இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது;

வணிகம் செய்ய வந்தவர்கள், இந்தியர்களின் வாழ்வை நசித்துத் தங்களுக்கு லாபம் தேடிவிட்டனர்; 

ஒவ்வோர் ஆண்டும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வத்தை இந்தியாவிலிருந்து பல்வேறு வழிகளில் இவர்கள் (பிரிட்டிஷாரும் அவர்களின் முகவர்களும்) கொள்ளையடிப்பதாலேயே நாம் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்; 

8 கோடி விவசாயிகள் நிரந்தரப் பட்டினியில் தவிக்கிறார்கள்; 40,000-க்கும் மேற்பட்டோர் பிளேக் நோயில் இறந்துபட்டனர்; 15 லட்சம் பேர் மலேரியாவில் மாண்டனர். ஆனால் (பிரிட்டிஷ்) அரசாங்கம் இன்னமும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டிவிட்டு, கடைசியாக இந்த எழுத்துகளும் உரைகளும் மக்களுக்கு கூற விரும்பிய செய்தி இதுதான்: 

"நம்முடைய வேளாண் பொருள்களின் பெரும் பகுதியை இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படவேண்டும். நம்முடைய மக்களிடமிருந்து வரியாகவும் பிறவாகவும் வசூலிக்கப்படும் பணத்தை ஐரோப்பிய அதிகாரிகளின் சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் செலவழிப்பதையும் பிரிட்டிஷ் ராணுவத்திற்காகச் செலவழிப்பதையும் நிறுத்தவேண்டும். 

இவற்றைச் செய்தால்தான், நம்முடைய பொருளாதாரம் உயரும். இதற்கெல்லாம் என்ன வழி? 

நம்முடைய தேசவீரர்கள் நமக்கிடையே வர இயலாமல், சிறைக்குள் வாடுகிறார்கள். பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் என்று ஏதேதோ சொல்கிற பிரிட்டிஷார், இந்தச் சீர்திருத்தங்கள் எதற்கு? அடிப்படை வாழ்வுரிமை இல்லாமல் சீர்திருத்தம் எதற்கு?' 

இவ்வாறெல்லாம் பல்வேறு வகையில் தேசியச் சிந்தனைகள் இங்கும் அங்கும் பரவிக்கொண்டிருக்க, புதுச்சேரிப் பத்திரிகைகள் பிரிட்டிஷ் பகுதிகளுக்குள் வருவதும் தடை செய்யப்பட்டது. பாரத மாதா சங்கமும் ஏறத்தாழ செயலற்றுப் போனது. 

இத்தகைய நிலையில்தான், 1910 ஏப்ரலில் தென்காசி வந்த எருக்கூர் நீலகண்டன் (பிற்காலத்தில் இவரே நீலகண்ட பிரம்மசாரி; பேட் குறிப்பிட்டுள்ள தஞ்சாவூர் நீலகண்டனும் இவரே), பாரத மாதா சங்க இளைஞர்களுக்குப் புத்தூக்கம் கொடுத்தார். 

1910 ஏப்ரல் 10-ஆம் நாள், தென்காசியில், மடத்துக் கடை சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் நடந்த கூட்டத்தில், நெல்லையின் அதிகாரிகள் நடந்துகொள்கிற தகாத முறைகள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீரர்கள் சந்தித்த இன்னல்கள் ஆராயப்பட்டன. 

மித்னாப்பூர் மற்றும் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்குகள், வங்காளத்தில் பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை, தேசியவாதி இளைஞர்கள் பலரும் தூக்கிடப்பட்டிருந்தமை போன்ற செய்திகள், இளைஞர்களின் செவிகளைத் தொட்டவுடன், அவர்களின் உள்ளங்களும் உலைக்கலன்கள் ஆகின. 

ஆங்கிலேயரை நாட்டைவிட்டு விரட்டவேண்டும் என்று அனைவரும் எண்ணலாயினர். கூட்டம் முடிந்ததும், அனைவருமாகச் சேர்ந்து பூஜை செய்தவர்கள், குங்கும ஆரத்தியெடுத்து, தேசப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாகச் சூளுரைத்தனர். 

நீலகண்டன், கடையநல்லூர் சங்கர கிருஷ்ண ஐயர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, ஒட்டப்பிடாரம் "வந்தேமாதரம்' சுப்பிரமணியம், தூத்துக்குடி கே. வி. ஆறுமுகம் பிள்ளை போன்றோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வாஞ்சி இருந்ததாகத் தெரியவில்லை. 

1910 ஜூன் மாதம், பாரத மாதா சங்கத்தின் உறுப்பினரும் சங்கரகிருஷ்ண ஐயரின் உறவினருமான வாஞ்சியைச் சந்தித்தார். ஜூலை மாதத்தில், செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர், வேம்பு, ஹரிஹர ஐயர் ஆகியோரும், சுந்தரபாண்டியபுரம் ராமசாமி ஐயரும், ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையும், வாஞ்சி, சுப்பையாப் பிள்ளை, முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை, கே. வி. ஆறுமுகம் பிள்ளை ஆகியோரும் தூத்துக்குடியில் சந்தித்தனர். இதன் பின்னர், 1910 செப்டம்பரில், காட்டிலாகாவில் புனலூரில் பணியில் சேர்ந்தார் வாஞ்சிநாதன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT