வெள்ளிமணி

கேட்டல் ஞானம் கேடறு கேடயம்!

14th Jan 2022 06:15 PM | -மு. அ. அபுல் அமீன்

ADVERTISEMENT


கற்று அறிஞராகும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டாது. எட்டி நின்று கேட்டு, எட்டிய அறிவால் எட்டா உயரத்தைத் தொட்டவரும் உண்டு. கேட்டு பெறும் அறிவு, கேடு வராமல் தடுக்கும் கேடயம் ஆகும். கரோனா கட்டுப்பாடுகள் காணொலியிலும், வானொலியிலும் பாடம் பயிலுவதைக் கட்டாயமாக்கி விட்டது. கேட்டல் ஞானத்தின் சிறப்பைக் கூட்டி விட்டது. 
"அழகிய கேள்வி அறிவை வளர்க்கும்!' என்ற கருத்து பத்ஹுல் பாரி இப்னு ஹஜர் என்னும் நூலில் 138 -12 -ஆம் எண்ணில் பதிவாகி உள்ளது. அழகிய என்னும் சொல் அழுத்தமான ஆழமான பொருத்தமான பதிலைப் பெறும் கேள்வியைக் குறிக்கிறது. 
"எதனால் உங்களுக்கு உயரிய அறிவு ஞானம் கிடைத்தது?' என்று இப்னு அப்பாஸ் (ரலி ) அவர்களிடம் கேட்டனர். 
"பயனுள்ள கேள்விகளை அதிகமாகக் கேட்ட என் நாக்கினாலும், எல்லா செயல்களையும் உன்னிப்பாக கவனித்து, உள்ளத்தில் பதித்து, உதித்த உணர்வுகளை, உருவான ஐயங்களை உரிய அறிஞர்களிடம் கேட்டுப் பெற்ற தெளிவினாலும் கிடைத்தது தீர்க்கமான அறிவு!' என்று பதில் கூறினார்கள்.
சங்கை மிக்க குர் ஆனையும் சாந்த நபி ( ஸல் ) அவர்களின் நன் மொழிகளையும் படித்து பயனுள்ள கேள்விகளைக் கேட்டு நயமான பதில்களைப் பெற்று உலகை உற்று நோக்கி சற்றே சிந்தித்தால், சாத்தியமாகும் சத்திய அறிவு. 
கேள்வி கேட்டு தெளிவு பெற கேண்மை நபி (ஸல்) அவர்கள் தோழர்களைக் தூண்டினார்கள். அவ்வாறு கேட்பதற்கு முன்னுதாரணமாக முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் வானவர் ஜிப்ரயீல் அவர்களிடம் அதிக கேள்விகள் கேட்டார்கள். "சுருக்கமான கேள்வி கேட்டு நெருக்கமான செய்திகளை நிறைய அறிந்தனர் அருமைத் தோழர்கள்.
தெரியாததைத் தெரியாது என்று கூறி கேள்வி கேட்டு விளக்கம் பெற்று இலக்கை எட்டத் திட்டமிட்டு வெற்றி பெற்றவர்கள் பெருமானார் நபி ( ஸல் ) அவர்களின் நற்றோழர்கள்!' என்று நவில்கிறது புகாரி நூல் வரிசை எண் 103-இல்.
எதிர்கேள்வி கேட்டு பதிலைப் புரிய வைத்து உரிய முறையில் வாழ்க்கையை அமைத்து கொள்ள அறிவுறுத்தினார்கள் அண்ணல் நபி (ஸல் ) அவர்கள். நூல் - புகாரி 3488.
 குழந்தைகளிடம் பண்பான கேள்வியைப் பக்குவமாய் கேட்கும் பாங்கை வளர்க்க வேண்டும். அதன் பயன் அவர்களின் வாழ்வில் பரிணமிப்பதை அவர்கள் வளர்ந்து வாகை சூடுகையில் வாகாய் காணலாம். 

Tags : velliamani
ADVERTISEMENT
ADVERTISEMENT