வெள்ளிமணி

பொன்மொழிகள்!

14th Jan 2022 06:10 PM | சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT

 

தவத்துக்கு உரிய செயல்களில் முயற்சி செய்து வாழ்வது சிறந்த நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் என்பது முன்னதைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையாகும். "கிடைக்காது' என்று தெரிந்ததும் பொருள் ஆசையால், தனது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது மற்ற இரண்டையும்விடக் கீழான நிலை ஆகும்.    
 -நாலடியார், பன்னெறி - 5

குளத்தின் நீர் அளவிற்கு அல்லி மலர் வளர்ந்திருக்கும். அதுபோல் ஒருவன் கற்ற நூலின் அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கும்.             
-அவ்வையார்

நாம் பயப்பட வேண்டியவைக்கு பயப்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கக் கூடாது. நீதி வழங்குவதில் ஒரு பக்கம் சாயக் கூடாது. நேர்மையானவர்களின் செயல்களில் சந்தேகம் கொள்ளக் கூடாது.  
-நீதி சாஸ்திரம்

ADVERTISEMENT

உலகமே மாயை, எதுவும் நிலையானதல்ல. செல்வமோ சுகபோகமோ, மனைவி மக்களோ எதுவுமே நிலையானதல்ல. இதை மனிதன் உணரவில்லையே!    
-பட்டினத்தார்

பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் சிவபெருமானே! உன்னை என்றும் மறவாமை வேண்டும்.
-பெரிய புராணம் (காரைக்காலம்மையார்)

""பக்தி வளர வேண்டும்'' என்று நீ இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது, அதோடு, ""பிறரைக் குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டும்!'' என்றும் பிரார்த்தனை செய்துகொள்.    
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

ஆத்மாவை யார் அனுபூதியில் உணர்கிறானோ, அவன் மட்டுமே ஆத்மாவை அடைகிறான். அவன் அனைத்தையும் அறிபவனாக, அனைத்துமாக ஆகிறான்.
-பிரச்ன உபநிஷதம் 4.10

அத்தியந்த உற்சாகத்துடன் ஆன்மிக சாதனையில் முயற்சி செய்யும் யோகிக்கு சமாதி விரைவில் கைகூடும்.  
- பதஞ்சலியோக சூத்திரம்

வேரில் நெய்யையும், பாலையும் ஊற்றினாலும் கூட வேப்பமரம் இனிப்பாக ஆகாது. அது போல கெட்டவனுக்கு, எந்தவிதமான உபதேசங்கள் செய்தாலும், அவன் நல்லவனாகத் திருந்தமாட்டான்.        
 -சாணக்கிய நீதி

வளம் நிறைந்த இந்தப் பெரிய உலகில் வாழும் மக்களிடம் இருக்கும் செல்வமும் நிலையற்றது. இளமையும் நிலையற்றது.         
  -சிலப்பதிகாரம்

சிறந்த ஆன்மிகக் கல்வியைக் கற்பதாலும், உயர்ந்த தவம் செய்வதாலும், ஜீவாத்மா ஆகிய நமது ஆத்மா தூய்மைப்படுத்தப்படுகிறது.
 -சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

எங்களுடைய தெய்வம் ஒன்றாகவும், உங்களுடைய தெய்வம் ஒன்றாகவும்  ஆக மொத்தம் இரண்டு தெய்வங்கள் இருக்குமோ? இருக்காது.    
-சிவ வாக்கியர் 

உலகில் போகங்கள் தரும் அழியும் இன்பம் வறண்டுபோய் முடிவடையும். பரமாத்மா தரும் அழியாத இன்பமோ, முடிவு பெறாத சுவையுடன் வளர்ந்துகொண்டே இருக்கும்.            
 -சுவாமி ராம்சுக்தாஸ்

மனதில் சற்றும் ஈவு இரக்கமின்றி கொடியவர்கள் சிலர், பிற உயிர்களைக் கொல்லத் தொடங்கும் போதெல்லாம் நான் பயந்தேன்.        
 -வள்ளலார்

இளமையில் உழைத்தவன், முதுமையில் வளமாக வாழ்வான். உழைப்பால் உயர்ந்தவனை உலகமே வணங்கிப் போற்றும்.
 -ராமகீதை (ஸ்ரீராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை).

 நண்பன், தன்னை நம்பியவன், அன்னம் இட்டவன், தங்க இடம் கொடுத்தவன் ஆகியவர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.
 -வியாச பாரதம், வன பருவம் (யுதிஷ்டிரர் கூறியது).

பெருஞ் செல்வம், அறிவு, அதிகாரம் ஆகியவற்றை அடைந்தபோதிலும் அடக்கத்தோடு இருப்பவர்கள் விவேகிகள் ஆவார்கள்.         
-விதுரநீதி

களவு வேண்டாம், கொலை வேண்டாம், பொய் சொல்ல வேண்டாம், கோபம் வேண்டாம், பிறரிடம் அருவருப்பு கொள்ள வேண்டாம், தற்புகழ்ச்சி வேண்டாம், மற்றவர்களைத் திட்ட வேண்டாம்  இதுதான் அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆகும். இதுவே சிவபெருமான் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு உரிய வழியாகும்.
-பசவண்ணர் (கர்நாடக மாநிலம்)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அது போன்று நல்லொழுக்கம் உடையவர்கள் வறுமை வந்த காலத்திலும் தீய செயல் செய்ய விரும்பமாட்டார்கள்.        
-குமரகுருபரர்

 இந்த உலகத்தில் தானத்தைப் போன்ற செல்வம் வேறு இல்லை; திருப்தியைப் போன்ற சுகம் வேறு இல்லை; ஒழுக்கத்தைப் போன்ற ஆபரணம் வேறு இல்லை; ஆரோக்கியத்தைப் போன்ற லாபம் வேறு இல்லை.
  -பஞ்சதந்திரம்

சத்தியம் பூமியை தாங்குகிறது; சத்தியத்தால் சூரியன் ஒளி வீசுகிறான்; சத்தியத்தால் காற்று வீசுகிறது; எல்லாமே சத்தியத்தால்தான் நிலைபெற்றிருக்கிறது.        
  -சாணக்கிய நீதி

ஸ்ரீ ராமச்சந்திரா! நான் மாயை நிறைந்த இந்த சம்சாரம் என்ற சுழலில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இருக்கும் என்னை, நீ எப்படித்தான் காப்பாற்றப் போகிறாயோ? எனக்குத் தெரியவில்லை.    
 -மகான் தியாகராஜர்

உயர்ந்த கல்வியை கற்றுணர்ந்து அடக்கத்துடன் வாழ்வது அறிஞர்களுக்கு அழகு சேர்க்கும்.        
-நறுந்தொகை -14.

முற்பிறவியின் கர்மவினைப்பயன் நம் யாரையும் விட்டுவிடுவதில்லை; இது பிரம்மதேவன் வகுத்த சட்டம்.
-வியாதகீதை

*கங்கை நதி சொர்க்கத்திலிருந்து சிவன் தலையிலும், அங்கிருந்து இமயத்திலும் விழுகிறது. பிறகு உயர்ந்த இமயத்திலிருந்து பூமியில் இறங்கி ஓடி அலைந்து, இறுதியில் உப்புக்கடலில் கலந்து தனது உயர் தன்மையையும், தூய்மையையும் இழந்து படிப்படியாகத் தாழ்மையை அடைகிறது. இதுபோல கீழ்நோக்கிச் செல்லும் அவிவேகிகளும் பல வகையில் தாழ்மையை அடைகின்றனார்கள்.    
 -பர்த்ருஹரியின் நீதி சதகம், 10.

*பக்திநெறி, ஆத்மஞானம் அடைவதற்கான வழிகளைக் கூறும் சிறந்த ஒரு நெறியாகும். பகட்டிற்காக, "பிறர் புகழ வேண்டும்' என்பதற்காகச் செய்யும் செயல்கள் உண்மையான பக்தியாவதில்லை.
 -தாசிமய்யா (கர்நாடக மாநிலம்) 

ADVERTISEMENT
ADVERTISEMENT