வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: 55 - தில்லைக் காளியம்மன்

ஜி.ஏ. பிரபா

"நிமே-ஷாந் மேஷாப்யாம் ப்ரலய-முதயம் யாதி ஜகதீ தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர- ராஜந்ய-தநயே'

-செளந்தர்ய லஹரி 

லோகமாதாவான பராசக்தி தன் கண்களை மூடித் திறப்பதாலேயே இவ்வுலக உயிர்கள் அழிந்து, மீண்டும் பிறக்கின்றன. காலத்தின் மாறுதல்கள் அவள் கண் அசைவிலேயே உண்டாகின்றன. ஒரு விரல் அசைவிலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஆட்டுவிக்கும் சக்தி அவள். துஷ்டர்களை அழிக்கும் அவள் "காளி' என்று அழைக்கப்பட்டாலும், சகல செளபாக்கியங்களை அருளும் "மகா சக்தி'யாக விளங்குகிறாள். 

ஒருமுறை சிவனுக்கும், பார்வதிக்கும் தங்களில் யார் சக்தி மிக்கவர்கள் என்று  வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் கோபமுற்ற சிவன், பார்வதியை கோர வடிவம் கொண்ட உக்கிர காளியாக மாறுமாறு சபித்து விடுகிறார்.மனம் வருந்திய காளி, சாப விமோசனம் கேட்க, "பூமியில் அரக்கர்கள் மனிதர்கள், தேவர்களைத் துன்புறுத்துகிறார்கள். நீ உக்கிர காளியாகச் சென்று அவர்களை அழித்து விடு!' என்று கூறுகிறார். 

அதன்படி காளி, பெரும்பற்றப்புலியூர் என்றும், தில்லைவனம் என்றும் அழைக்கப்பட்ட சிதம்பரத்தின் எல்லையில் தவம் செய்கிறாள். அப்போது ஈசன், பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதரின் கோரிக்கையை ஏற்று ஊர்த்துவத் தாண்டவம் என்ற பெயரில் உக்கிர நடனம் ஆடினார். 

நடனப் போட்டிக்கு காளியையும் அழைக்க, அவளும் வந்து ஆடினாள். மிக உக்கிரமான நடனம். ஒரு கட்டத்தில் காளியை ஜெயிப்பதற்காக ஈசன் தன் ஒரு காலைத் தூக்கி ஊர்த்துவத் தாண்டவம் புரிந்தார். "இதைப்போல் காளியால் ஆட முடியுமா?' என்று சவால் விட்டார்.

பெண்மைக்குரிய நாணம் தடுக்க, காளியால் அம்மாதிரி ஆட முடியவில்லை. இதனால் அதிக கோபம் கொண்ட காளி, தில்லை எல்லையில் போய் அமர்ந்து விட்டாள். 

அவளின் கோபத்தைத் தணிக்கும் விதத்தில் அவளைப் பிரம்மா, "வேத நாயகி' எனப் புகழ்பாடி நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அவ்வாறே இத்தலத்தில் காளியம்மன் நான்கு முகங்களுடன் காட்சி தருகிறாள்.

பிற்கால மன்னர்களால் இத்தலத்தில் கோயில் உருவானது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும், வலது பக்கம் நர்த்தன விநாயகரும், இடது புறம் முருகனும் கிழக்கு திசை நோக்கிக் காட்சி அளிக்கிறார்கள்.

ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியில், உக்கிர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லைக் காளியாகவும், மேற்கு நோக்கிய சந்நிதியில் சாந்தமான நான்முக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சி தருகிறாள். காளிக்கு எதிரில் உள்ள சுவரில் சோழ மன்னர்கள் காளியை வணங்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

சிதம்பரம் செல்பவர்கள் இவளைத் தரிசித்த பின்பே நடராஜரைத் தரிசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவள் தில்லைக்காளி, தில்லையம்மன் என்றும், பிரம்ம வித்யாம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். மூலவர் சந்நிதிக்கு அருகில் வீணை வித்யாம்பிகையும், தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தட்சிண ரூபிணியாகவும் காட்சி அளிக்கின்றனர். 

கல்வியில் சிறந்து விளங்க, வியாழக்கிழமைகளில் தட்சிண ரூபிணிக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். தில்லைக் காளிக்கு தினமும் காலையில் நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகிறது. மேனி முழுவதும் குங்குமக் காப்பிட்டு, வெள்ளைப் புடவை சார்த்தி, கண்கள் மட்டும் கருமை நிறம் தீட்டப்பட்டுக் காட்சி அளிக்கிறாள்.

 தில்லைக் காளி, பில்லி, சூனியம், பிசாசு போன்ற பயங்களைப் போக்கி, சினம், பகை, கொடிய வியாதிகள் போன்றவற்றை அழித்து, அருள் செய்கிறாள். சாந்தமான சாமுண்டீஸ்வரி அம்மன் கல்வி, ஐஸ்வர்யம், வீரம், அமைதி, மன உறுதி, தைரியம் ஆகியவற்றை அருள்கிறாள்.

பண்டைய காலங்களில் மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்னரும், வெற்றி பெற்று வந்த பின்னரும் காளியை வழிபடுவது வழக்கமாக இருந்தது. காளியை வேண்டிக் கொண்ட படையினர், தங்கள் வெற்றிக்கு காணிக்கையாக தானம் செய்யும் வழக்கமும் இருந்தது. 

ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு நேரத்தில் காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாள்களில் அருகிலுள்ள ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் அன்னையைத் தரிசிக்க வருகிறார்கள்.

அன்னைக்கு புடவை சாற்றி, மாவிளக்கு ஏற்றி, நெய் தீபம் இட்டு வணங்கினால் எப்படிப்பட்ட நோயும் தீரும், திருமணத்தடை அகலும், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் உண்டாகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நூலில் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்றும் 
கூறுகிறார்கள்.
காளிதேவி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் கர்மவினைகள் தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும் வேண்டுதல் செய்யலாம். தோஷங்கள் அகல, குடும்பப் பிரச்னைகள் தீர, இங்கு காளிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

"தாயே! கோர உருவம் எடுத்து அரக்கர்களை அழிக்கிறாய்; உன் அன்பெனும் கருணையால் பக்தர்களை அரவணைக்கிறாய். நான் விரும்பியதைத் தரும் நீயே, எனக்கு வேண்டும் நல்லன எல்லாம் தருகிறாய். உன் கருணையைப் புகழ்ந்து பாட, இந்த எளியனால் முடியவில்லையே!' என்று ஏங்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

பொருள் மீதான் பற்று ஸ்திரமில்லாதது. அன்னையின் மீதான பற்று நிலையானது; என்றும் அழிவில்லாதது. நம் புறக்கண்ணிலும், அகக்கண்ணிலும் என்னேரமும் அம்பிகையின் தரிசனத்தைக் காண வேண்டும். "அவளின் நாமத்தைத் தினசரி சொல்லி வந்தால், தோன்றாத் துணையாய் நம்முடன் இருப்பாள்!' என்கிறார்கள் பக்தர்கள்.

""தாயே! காளி!'' என்று அழைத்தால் தாவியே ஓடி வருவாள். அதற்கும் முன்பே அவளின் சூலம் நம்மைக் காக்க பறந்தோடி வரும் என்பது நிச்சயமான உண்மை. 

அமைவிடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் ஸ்ரீநடராஜர் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT