வெள்ளிமணி

நன்மையால் முடிசூட்டுவார்!

1st Jan 2022 04:58 PM | -முனைவர் தே.பால் பிரேம்குமார்

ADVERTISEMENT

 

பிறக்கும் புதிய ஆண்டு "2022' நம்மை வரவேற்கிறது. புத்தாண்டை நாமும் வரவேற்போம். வேதாகமம் கூறுகிறது: "பிறக்கும் புதிய வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகின்றீர்!' என்று இறைவனைப் பார்த்து சொல்லப்படுகிறது. ஆசீர்வாதப் புதிய ஆண்டை இறைவன் நமக்குத் தருவார்.

வேதாகமத்தில், எசேக்கிய ராஜா பிளவை என்னும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தார். தீர்க்கதரிசி ஏசாயாவிடம் தன் எதிர்காலம் குறித்து கருத்து கேட்க விரும்பினார். 

தீர்க்கதரிசி ஏசாயா கடவுளின் வார்த்தை பெற்று, அவரிடம் சென்று ""நீர் பிழைக்க மாட்டீர். இன்னும் மூன்று நாள்களுக்குள் மரித்து விடுவீர். அதற்குள் உன் வீட்டில் காரியங்களை ஒழுங்குபடுத்தி விடுங்கள்!'' என்றார். 

ADVERTISEMENT

எசேக்கிய ராஜா மிகவும் மனம் கசிந்து அழுது, ""தேவரீர்! என்னைப் பாரும். என் விண்ணப்பத்தைக் கேளும். என் கண்ணீரைக் காணும். நான் உமக்கு உத்தம பக்தனாக இருந்தேன். தொழுகையில் மிகவும் ஈடுபாடு கொண்டேன். அந்நிய தெய்வங்களை அழித்து, மக்களை மெய் தெய்வமாகிய உம்மையே தொழச் செய்தேன். உமது இறை வாக்குப்படி என்னை சுகம் ஆக்குங்கள். இன்னும் 15 ஆண்டுகள் ஆயுள் தாருங்கள்!'' என்று விண்ணப்பம் செய்து மன்றாடினார். 

இறைவன் அவர் விண்ணப்பத்தை ஏற்று, ஆயுள் 15 வருடங்களை நீட்டித்துக் கொடுத்தார். 

சூரிய கடிகாரத்தில் 10 பாகை சூரியனை திரும்ப வரச்செய்து, எசேக்கிய ராஜா ஆயுள் பெற்றதற்கு அடையாளமாகத் தந்தார் (11 இராஜாக்கள் 20.1-10). எசேக்கிய ராஜாவின் பிளவை நோய் குணமாக அத்திப்பழ அடையைக் கட்டி முற்றிலும் குணமாக்கினார். 

விண்ணப்பமும், கண்ணீர் ஜெபமும் எசேக்கிய ராஜா 15 ஆண்டுகள் மேலும் உயிர் வாழ அருள் புரிந்தது. நமது கஷ்டம், கண்ணீர், வறுமை, நோய், தீயச் செயல்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகட்டும் என்று இறைவனின் அருளை வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிக்கிறவர். 

நமது உயர்வு, நன்மை, புகழ், செல்வம், கீர்த்தி அனைத்தையும் தருபவர். புத்தாண்டை நன்மையால் முடிசூட்டுவார். வரும் ஆண்டில் அற்புதங்கள், அதிசயங்கள் காணச் செய்வார். நம் குடும்பத்தைக் காப்பார். நம் தேசத்தை இவ்வுலகில் முதன்மையாக நிலவ அருள்புரிவார். வறுமையோ, நோய்த்தொற்றோ  நம்மை நெருங்காமல் காத்தருள்வார். என்றும் இறையருள் நம்மோடு! 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT