வெள்ளிமணி

தேடி வந்து அருளும் தாடிக்கொம்பு பெருமாள்!

1st Jan 2022 05:13 PM | -  பனையபுரம் அதியமான்

ADVERTISEMENT

 

பாண்டியர்,  விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்த கோயில் -  சைவ,  வைணவ சிலா வடிவங்கள்  அமைந்த கோயில் - மதுரை அழகர்மலை கள்ளரின் மறுவடிவாக பெருமாள் அருளும் தலம் - சக்தி மிக்க பைரவர் சந்நிதி கொண்ட  ஆலயம் -  திருமண வரம் பெற உதவும் மன்மதன் - ரதி சிற்பங்கள் உடைய திருத்தலம் எனப் பல்வேறு சிறப்புகளையுடைய திருக்கோயிலாகத்  திகழ்வது,  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "தாடிக்கொம்பு செளந்தரராஜப்  பெருமாள்' ஆலயம்.   

தல வரலாறு: தெலுங்கில் "தாடி' என்பதற்குப் "பனை‘  என்றும், "கும்பு' என்பதற்குக் "கூட்டம்' என்றும் பொருள்படும்.  பனை மரங்கள் கூட்டமாகக் காணப்பட்டதால்,  இவ்வூர் "தாடிக்கும்பு'  என்று அழைக்கப்பட்டது.  நாளடைவில் இப்பெயர் மருவி, "தாடிக்கொம்பு'  ஆனது.  "தாளம்' என்பது பனையைக் குறிக்கும் மற்றொரு சொல்.  இதனால் இவ்வூர் தாளபுரி, தாளமாபுரி, தாளைவன க்ஷேத்திரம், புறமலை என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. இக்கோயிலில் அமைந்த  பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டில்  "புறமலை தாடிக்கொம்பு'  என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 

வைகுண்ட நாதர்

இத்தலத்தின் மேற்கே குடகனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் மண்டூக முனிவர்  கடுந்தவம் இயற்றினார்.  இவருக்குத் தாளசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்தான்.  இதனால் மண்டூக முனிவர் அழகர்கோயில் அழகரை நோக்கி வேண்டினார்.  அவரின் உதவியால் தவம் இடையூறின்றி  நிறைவுபெற்றது.  இதனால் மகிழ்ந்த முனிவர், இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்திடுமாறு அழகரிடம் வேண்டினார். அதன்படி பக்தர்களை நாடி வந்து, இங்கு பெருமாள் காட்சி தருவதால், இவருக்கு "அழகர்' என்ற மற்றொரு பெயரும் உள்ளது. 

ADVERTISEMENT

மன்னன் சந்திரகுமார பாண்டியனுக்கும், சேர மன்னனுக்கும் போர்  மூண்டது. விஜயநகர மன்னர் அச்சுத தேவராயனார்  பாண்டியனுக்கு  உதவியதால்,  எளிதில் வெற்றி பெற்றான்.  பாண்டியன் மற்றும் அச்சுத தேவராயரின் தம்பி ராமதேவராயன் தாடிக்கொம்பு பெருமாள் ஆலயத்தைக் கட்டி முடித்து, குடமுழுக்கு செய்ததாகத் தல வரலாறு தெரிவிக்கிறது. 

கிழக்கு நோக்கிய கோபுர வாயிலில் நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம்  அடுத்து ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே எட்டு கால், நான்கு கால் மண்டபங்கள் அமைந்துள்ளன.  அதனையடுத்து  தீபம் ஏற்றும்  விளக்குத் தூண்கள்  காணப்படுகின்றன. விஸ்வக்சேனர்,  தும்பிக்கையாழ்வார், ஹயக்கிரீவர்,  தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர்,  சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், கருடாழ்வார்  சந்நிதிகள் அமைந்துள்ளன.

சிற்பக் கலைக்கூடம்: கல்யாண செüந்தரவல்லித் தாயார் சந்நிதியின் எதிரே இரு யானை சிற்பங்கள், ஏழு தூண்கள் ஒவ்வொன்றும் வெகு நேர்த்தியாக கலைநயத்தோடு அமைந்துள்ளன.  சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்துவதாண்டவர், நரசிம்ம இரண்ய யுத்தம், மன்மதன், ரதி, வேணுகோபாலர், இரண்ய சம்ஹாரம், அகோர வீரபத்திரர்,  உலகளந்த பெருமாள்,  தில்லைக்காளி,  மகாவிஷ்ணு என பதினான்கு பிரமாண்ட கலைத்தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன.

பரிகாரத் தலம்: திருமணம்  ஆகாதவர்கள் வியாழக்கிழமைகளில்,  மன்மதன் ரதி  சிலைக்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இரண்டு மாலைகள், மஞ்சள்பொடி,  அர்ச்சனையுடன் வேண்டுதல் முடித்து மலர் மாலையினைத்  தங்கள்  கழுத்தில் அணிந்து கொண்டு உள்பிரகாரத்தினைச் சுற்றி வந்து பெருமாளைத் தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
உற்சவர் மண்டபத்தினையொட்டி, மகாமண்டபம் மற்றும் அர்த்தமண்டபத்தின் நடுவே இரண்டு இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். 

மகாவிஷ்ணு - கருடன்

கள்ளழகர் உற்சவங்கள்: 
மதுரை கள்ளழகர் இங்கு எழுந்தருள்வதான ஐதீகம் உள்ளதால், கள்ளழகர் உற்சவங்கள் அனைத்தும் இங்கும்  நடத்தப்பட்டு வருகின்றன. ஆடியில் பிரம்மோற்சவம்,  ஆடிப்பூரத்தில் திருக்கல்யாணம், சித்ரா பெüர்ணமியன்று குடகனாற்றில் இறங்குதல் என இங்கு நடைபெறும் விழாக்களுக்குப் பஞ்சமில்லை.

ஜெய, விஜய துவாரபாலகர்கள் காவல்புரிய, கருவறைக்குள் செüந்தரராஜப் பெருமாள்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். உள்பிரகாரத்தில்  நான்கு மூலைகளிலும் மகாவிஷ்ணு,  யோக நரசிம்மர், மணவாள மாமுனிவர், ராமாநுஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

சங்கநிதி, பத்மநிதியுடன், கருவறைக்குள் இறைவி கல்யாண செளந்தரவல்லித் தாயார் எழிலாகக் காட்சியருள்கிறார்.  முன்மண்டபத்தில் விநாயகர், விஷ்ணு துர்க்கை,  நின்றகோலத்தில் காட்சி தருகின்றனர். 

இக்கோயிலில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலலாம். 
 
அமைவிடம்: திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT