வெள்ளிமணி

மாசித் தேரில் வராகர்!

11th Feb 2022 03:36 PM

ADVERTISEMENT

 

இவ்வுலகம் வராக க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு  முன்பாகவே கட்டியம் கூறுவது போல் வராகப்பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி இருந்தார். ஆதலால் இவரை ஆதிவராகப் பெருமாள் என போற்றி வணங்கும் வழக்கம் உண்டானது. இத்தலத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜப் பெருமாள், ராஜகோபாலப் பெருமாள் ஆகிய எல்லோருக்கும் முன்பாகவே வராகப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருந்தார் என்பது வரலாறு. 

இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமி தேவியை பாதாள உலகிற்கு எடுத்து சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி பூமாதேவி திருமாலிடம் வேண்ட, திருமால் வராக அவதாரமாக பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். அவரே ஆதிவராகர் என அழைக்கப்படும் வராகப்பெருமாள் ஆகும்.

ஜெய, விஜயர்கள்: ஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால் யோக நித்திரையில் பள்ளி கொண்டிருந்தபோது, ஜனகாதி முனிவர்கள் வைகுண்ட லோகத்தில் திருமாலின் சயனக் கோலத்தை வணங்க விரும்பினர். வாயிற்காவலர்களான  ஜெய, விஜயர்கள், பகவானைத் தரிசிக்க அது உரிய நேரம் அல்ல எனக் கூறினர். அனந்தனின் மீது அறிதுயிலில் இருந்த ஸ்ரீநாராயணன், வைகுண்ட துவாரத்தைத்  திறந்து சனகாதி யோகிகளுக்கு தரிசனம் அருளினார். அவர்களும் பகவானைத்  தரிசித்து மிகவும் மகிழ்ந்தனர். 

ADVERTISEMENT

ஆனால் சனகாதி யோகிகள் ஜெய, விஜயர்களின் பணியைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அசுரர்களாகும்படி சாபமிட்டனர். 

துயருற்ற அவர்கள் நாராயணனை வணங்கி  சாபம் போக  வழி கேட்டனர். அதற்கு நாராயணன், உங்கள் புகழ் சிறக்க  மூன்று யுகங்களிலும் மூன்று முறை ராட்சதர்களாகப்  பிறந்து, அதன் பின்னர் எனது கையினால் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் வந்து எனக்கு சேவை புரிவீர்கள் எனக் கூறினார்.

முதல் யுகமான கிருத யுகத்தில் இரண்யாட்சன், இரணியகசிபு எனும் அரக்கர்களாக பிறந்தனர். இரண்யாட்சகன் என்னும் ராட்சசன் இந்த பூமி இருந்தால்தானே யாகங்கள், தானங்கள் செய்து தேவர்களுக்கு சக்தி உண்டாகிறது. அதனால் இந்த பூமியையே மறைத்து விட்டால் யாகங்கள், தானங்கள் மற்றும் தெய்வ வழிபாடுகள் நடைபெறாது என்கிற எண்ணத்தோடு பூமியை எடுத்துச் சென்று நீரில் மறைத்து விட்டான்.  அப்போது பூமி முழுவதும் உள்ளும் புறமும் நீராகச் சுற்றியிருந்தது. பக்தர்களும், தேவர்கள் அனைவரும், நாராயணனை வைகுண்டத்தில் வேண்டி, ஒரு நல்வழி காட்டும்படி கேட்டனர். 

நாராயணன் வராக ரூபமாக அவதரித்து இரணியனைக் கொன்று நீரில்  மூழ்கிக் கிடந்த பூமியை தனது கோரைப் பற்களால் சுமந்துகொண்டு வெளி வந்தார். 

நீருக்கடியில் இருந்து பூமியை மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று ரிஷப லக்னத்தில் மேலே கொண்டு வந்ததால், இக்கோயிலைப் பொருத்தவரை மாசிமாதம் மக நட்சத்திர நாள் ஒரு முக்கியமான நாளாக விளங்கத் தொடங்கியது.

வராக புஷ்கரணி: ராட்சசன் ஒளித்து வைத்திருந்த பூமியை மேலே கொண்டு வந்த இடம் குழிந்து, நீர் சூழ்ந்து இருந்ததால் "ஸ்ரீ வராக புஷ்கரணி' என்று அழைக்கப்பட்டது. தேவர்கள் வராகப் பெருமாளையும், பூமாதேவி தாயாரையும் வணங்கி, இந்த உலகம் உள்ளவரை இங்கேயே, இதே கோலத்துடன் இருந்து சேவை சாதித்து அருள வேண்டுமென வேண்டினர் என்று கும்பகோணம் ஸ்தல மகாத்மியம் 57 }ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

பூமியை மேலே கொண்டு வந்த வராக உருவிலிருந்த பெருமாளுக்கு,  ஸ்ரீஆதி வராகர் எனவும், பூமிப் பிராட்டியாருக்கு ஸ்ரீஅம்புஜவல்லி என்றும் திருநாமங்கள் உண்டாகி, அனைவரும் வணங்கத் தொடங்கினர்.

வராக தீர்த்தத்தில் குளித்து ஆதிவராகப் பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்கள் விலகி பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. காஸ்யப முனிவர் இந்த குளத்தின் கரையில் அமர்ந்து தவம் செய்து வராகப் பெருமாளை வழிபட்டார் என்று அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் குளித்து, ஆதிவராகப் பெருமாளை வழிபடுபவர்கள் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. 

கல்யாண வராகர்: பூமாதேவியை மீட்டு இத்தலத்தில் திருமால் திருமணம் செய்து கொண்டதால், இத்தலத்தில் பெருமாளுக்கு ஸ்ரீகல்யாண வராகர் எனவும் பெயருண்டு. இவரை வேண்டி அர்ச்சனை செய்து, வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமணம் சீக்கிரம் கைகூடும்; பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பதும் ஐதீகமாகும்.

இவர் அனைத்து பெருமாளுக்கும் மூத்தவராக இவ்வூரில் விளங்குவதால் இவரை வழிபட்டு விட்டு, மற்ற கோயில்களுக்குச் செல்வது என்பது மரபாக உள்ளது.

கருவறையிலேயே ஆதிவராகர் பூமா தேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறார். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் மேன்மை ஆகியவற்றுக்காகவும் இந்த வராகப் பெருமாளை வணங்கி, பலன் பெறுகிறார்கள்.

பூமியில் இருந்து வந்த பெருமாள் ஆதலால் பூமிக்கு கீழே விளையும் கிழங்கை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. அமர்ந்த கோலத்தில் இருக்கும் அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர் தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மேல் வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக வராக சாளக்கிராமம் உள்ளது. இதில் சங்கு சக்கர ரேகை உள்ளது. தினமும் இதற்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

மாசி மாதத்தில் பூமியுடன்  வெளிவந்த பெருமாளாதலால்  ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். கொடியேற்றி, காலை மாலை அலங்காரம் மற்றும் வாகனங்களில் புறப்பாடு நடக்கும். மாசிமகத்தன்று திருத்தேரில் பவனி மற்றும் தீர்த்தவாரி கண்டு  பக்தர்களுக்கு அருள் செய்கிறார். அது முடிந்து 3 நாள்கள் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி 9}ஆம் தேதி காலை கொடியேற்றம், தொடர்ந்து 12}ஆம் தேதி இரவு கருட சேவை, 13}இல் அனுமந்த வாகனம், 14 }இல் யானை வாகனம், 16 }இல் காலை வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனம், 17}ஆம் தேதி மாசி மகத்தன்று திருத்தேரும், தொடர்ந்து தீர்த்தவாரியும், சாற்றுமுறையும் நடைபெறும். 18 }இல் சப்தாவரணம் நடக்க உள்ளது. மாசிமகத்தேர் மற்றும் தீர்த்தவாரியை காண்போர் அல்லல் அனைத்தும் நீங்கி நலம் பெறுவர் என்பது வழக்கு.

அமைவிடம்: கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு:  99419 26758 ; 94422 26413.  
-ஆர். அனுராதா

ADVERTISEMENT
ADVERTISEMENT