வெள்ளிமணி

பொன்மொழிகள்!

11th Feb 2022 03:56 PM

ADVERTISEMENT


கோடைக் காலத்தில் சூரியனின் கிரணங்கள் தண்ணீரை வற்றச் செய்கின்றன. அது போலவே இரவும் பகலும் மாறி மாறிச் சென்று, உலகிலுள்ள உயிர்களின் ஆயுளை அபகரித்துச் செல்கின்றன.
-ஸ்ரீராமபிரான்

மனிதர்களில் எவன் ஒருவன் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு லட்சியங்களில் ஒன்றைக்கூட அடையவில்லையோ, அவன் இறப்பதற்காகவே 
பிறக்கிறான்.
-சாணக்கிய நீதி
மாதா, பிதா, குரு ஆகியோரைத் சந்தோஷப்படுத்துவதே மிகவும் உக்கிரமான தவம், பரம விரதம், மேலான தர்மம்.
-காசி காண்டம்

ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது. சிற்றின்ப நாட்டம் இல்லாதவனுக்கு தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆசை இருக்காது. பேச்சில் கள்ளம், கபடம் இல்லாதவனிடம் வஞ்சனை இராது.
-பஞ்சதந்திரம்

கோடி நூல்களால் எது சொல்லப்படுகிறதோ, அதை அரை சுலோகத்தில் கூறுகிறேன்; "பிரம்மம் சத்தியம், உலகம் மித்யை (பொய்), ஜீவன் பிரம்மமே, வேறன்று.'
-ஸ்ரீ ஆதிசங்கரர் 

ADVERTISEMENT

அழுக்கடைந்த உடைகளிலோ, ஆடம்பரங்களிலோ, திருநீற்றிலோ, தலையை மொட்டை அடித்துக்கொள்வதிலோ, கொம்புத் தப்பட்டை முழக்குவதிலோ பக்தி இல்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு அடையாளம்.
-குருநானக் 
பிற பெண்களைத் தாயாகவும், பிறர் பொருளை மண் போலவும், பிற உயிர்களைத் தன்னுயிர் போலவும் பார்ப்பவனே, சரியாகப் பார்க்கிறவன்.
-மகாபாரதத்தில் நகுலன் கூறியது.

உண்மையில் கடவுளும் குருவும் ஒருவரேதான்; வெவ்வேறானவர்கள் அல்ல; ஓர் உருவமானவரே. இவர்களில் நீ யார் ஒருவரைத் தேடினாலும், நீ நம்புவதைக் காட்டிலும் அதிகமான கவலையுடன் அவர் உன்னைத் தேடுகிறார் என்று நம்பு.
-ஸ்ரீ ரமண மகரிஷி

படகு விடுகிறவன் இரவும் பகலும் தண்ணீரில் இருக்கிறான். அவன் பவித்திரனாவானா? அதுபோல தெய்விகச் சிந்தனைகளால் தன்னை உயர்த்திக்கொள்ளாத மனிதன்
நூற்றுக்கணக்கான தடவை நீராடினாலும் சுத்தனாகமாட்டான்
கழுதை சாம்பலில் புரள்கிறது. அது பவித்திரமாகிறதா?

சுத்த அந்தக் கரணத்துடன் விபூதி தாரணம் செய்தால், அது உடனே பவித்திரமாக்குகிறது.
இந்த உலகில் எவனுடைய இதயம் நிர்மலமாக இருக்கிறதோ அவன் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி, எல்லா அசுத்தங்களிலிருந்தும் விடுபட்டு, நூற்றுக்கணக்கான யக்ஞங்கள்     செய்த பலனை அடைகிறான்.
-பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (உத்தவகீதை)

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT
ADVERTISEMENT