வெள்ளிமணி

உள்ளே இருக்கும் உண்மை!

11th Feb 2022 04:11 PM

ADVERTISEMENT

 

அக்காலத்தில் அளவுக்கதிகமான தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள், முத்துக்கள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை தாங்கள் சம்பாதித்ததையும், மற்றவர்களிடமிருந்து அபகரித்தவற்றையும் யாருக்கும் தெரியாமல் வீட்டிலோ, நிலத்திலோ, பாறைக்கு அடியிலோ புதைத்து வைப்பார்கள். 

நீண்ட நாள்களுக்குப் பிறகு பல்வேறு சூழ்நிலைகளால் வைத்த இடம் மறந்து போய்விடும். இது யாரும் கண்டறியாத புதையலாக மாறிவிடும். 

அப்படிப்பட்ட ஒரு புதையல் ஒரு விவசாயக் கூலிக்காரருக்கு கிடைத்து செல்வந்தர் ஆகிறார். இயேசு சொன்ன உவமைக் கதைகளில் ஒன்று இது: 

ADVERTISEMENT

அவர் ஒரு பெரும் செல்வந்தர். அவரது முன்னோர்களும் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். அவர்களுக்குத் தேவைக்கு மேல் நிறைய செல்வம் இருந்தது. அதைப் பாதுகாத்து பத்திரமாக வைத்திருக்க ரகசியமான இடம் தேடி புதைத்து வைத்திருந்தனர். 

அவ்வாறு பூமிக்குள் புதைத்து வைத்த ரகசியம் பிற்காலத்தில் மறந்து போனது. அந்த செல்வந்தரின் புதல்வர் தமது நிலத்தில் உழுவதற்கு ஒரு பணியாளிடம் கூலிக்கு ஓர் ஏரும் இரண்டு மாடுகளையும் பேசி மண்ணைப் பண்படுத்த உழச் செய்தார். 

பணியாள் ஏர் உழுது வரும்பொழுது பாறையில் சிக்கி, புதைத்து வைத்திருந்த புதையல் பாத்திரத்தில் ஏர்க்கலப்பை சிக்கிக் கொண்டது. பணியாள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்...? புதையல் மூடி திறந்து இருந்தது. 

அதில் பெரும் தங்கம், வெள்ளி, வைரம், முத்துக்கள் இருந்தன. அந்தப் பணியாள் அதனைச் சட்டென மூடிப் புதைத்து விட்டார். பிறகு, தம்மிடம் உள்ள எல்லா உடமைகளையும் விற்று காசாக்கினார். அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, ""ஐயா! தங்கள் நிலத்தில் பாறைகள் நிறைய உள்ளன. அதனால் உழ முடியவில்லை. நிலத்தை எனக்கு விற்று விடுங்கள். நான் நல்ல விலைக்கு வாங்கி, அதில் ஜீவனம் செய்து கொள்கிறேன்!'' என்றார். 

அதில் புதையல் இருப்பதை அறியாமல் செல்வந்தரும் விற்று விட்டார். "பாறை நிலத்தை இவ்வளவு அதிக விலைக்கு முட்டாள் வாங்கினான்!' என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். 
வெளிப் பார்வைக்கு அது பாறை நிலம். உள்ளே புதையல் இருக்கும் உண்மை வாங்கியவருக்கு மட்டும்தானே தெரியும். 

நிலத்தை வாங்கியவர் இரவோடு இரவாக புதையலைத் தேடி எடுத்து, பெரும் செல்வந்தர் ஆனார். தமக்கு உண்டான உடைமை யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கியது அவருக்கு மிகப் பெரும் செல்வத்தைத் தந்தது. அப்படித்தான் கடவுளின் வார்த்தையும். 

ஏழ்மை மனிதர்களை செல்வச் செழிப்பாக மாற்றும். இறைவனின் வார்த்தைகளைப் பெரும் செல்வம் என மதித்து ஏற்றுக் கொள்வோம். இறையருள் நம்மோடு! 

-முனைவர் தே.பால் பிரேம்குமார் 

ADVERTISEMENT
ADVERTISEMENT