வெள்ளிமணி

ஆனை காத்த நாயனார்

30th Dec 2022 04:10 PM | ஆர்.அனுராதா

ADVERTISEMENT

 

இந்திரத்துய்மன் என்ற பாண்டிய மன்னர் ஒருநாள் பூஜையில் ஆழ்ந்திருந்தபோது,  அங்கு வந்த அகத்திய முனிவரை கவனிக்க முடியவில்லை. இதனால் வெகுண்ட  அகத்தியர்,  மன்னரை யானையாகப் பிறக்கும்படி சாபமிட்டார்.  நிலை உணர்ந்த மன்னர், முனிவரை பணிந்து மன்னிப்பு கேட்டார். "முதலை உன் காலைக் கவ்வும்போது திருமால் தோன்றி உனக்கு விமோசனம் அளிப்பார்'  என்று அகத்தியர் அருளினார்.

ஒரு கந்தர்வன் ஆற்றில் குளிப்பவர்களின் கால்களை விளையாட்டாகப் பிடித்து இழுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.  ஒருநாள் நீராடிய முனிவர் ஒருவரின் காலையும்  கந்தர்வன் பிடித்திழுக்க, முனிவர் வெகுண்டு அவனை முதலையாகப் பிறக்குமாறு சாபமிட்டார். கந்தர்வன் சாப விமோசனம் கேட்டான். "கஜேந்திரன் என்ற ஒரு யானை  காலை நீ கவ்வ திருமாலின் சக்கரத்தால்  உனக்கு சாப விமோசனம் கிட்டும்' என கூறிட அவனும்  முதலையாக உருமாறி,  தடாகத்தில் வந்து வாழ்ந்தான். 

கஜேந்திரன்  யானையாக வனப் பகுதியில் அலைந்து  பொதிகை மலைக்குச் சென்றது. அங்கு  சிவமது கங்கையில் நீராடி திருக்குற்றாலநாதரை வணங்கியவுடன் திருமாலை வணங்க தாமிரவருணிக் கரையோரமாகவே வந்து வழியில் இருந்த திருமாலை மலர் வைத்து வணங்க விரும்பியது.

ADVERTISEMENT

தாமரைகுளத்தில் இருந்து  பூக்களை பறிக்க இறங்கியவுடன் முதலை வடிவ கந்தர்வன், கஜேந்திரனின்  காலை கவ்வியது. யானை முயன்றும் முதலை பிடியை விடவில்லை. யானை துதிக்கையில் தாமரையை ஏந்திக்கொண்டு, "ஆதிமூலமே!'  என அலறியது. திருமால் கருடவாகனத்தில் வந்து சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு அருள் செய்தார் . இதன் காரணமாக இந்த தலம் "ஆனையைக் காத்த தலம்' என்று அழைக்கப்படுகிறது. அத்தியாகிய யானையைக் காப்பாற்றியதால் "அத்தாளநல்லூர்'  என்று பெயர்பெற்றது. 

அத்தாளநல்லூர் கல்வெட்டுகளில்  "ஆனைக் காத்தருள் செய்த பிரான்' எனவும் கொல்லம் வருடம் 662}க்கான  திருப்புடைமருதூர் கல்வெட்டில் இத்தலத்தை "ஆனைக் காத்த நயினார் கோயில்' எனவும் குறிப்பிடுகிறது. "அத்தாணி நல்லூர்', "கரிகாத்தபுரம்', "பொய்மாம் பூம்பொழில்' என்றும் இறைவனை "ஆனைகாத்தருளிய பிரான்'  எனவும் குறிக்கின்றன.  பாரதநாட்டில் சுமார் 24 தலங்கள் ஆனைக்கு அருளியவை எனப்பட்டாலும் ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கஜேந்திரன் மோட்சத்துக்குச் செல்வதற்கு முன், திருமாலைப் போற்றிப் பாடிய கஜேந்திர துதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இதைப்  படிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் அழிந்து சகல நலன்களும் உண்டாகும் என்றும் மரண தருவாயில் சுய நினைவுடன் மோட்சத்தை அடைவார்கள் என்றும் ஸ்ரீ மத் பாகவதம்  குறிப்பிடுகிறது. 

தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள பரிகாரத்தலமாகும். "ஆனை காத்த நயனார் கோயில்',   "கஜேந்திரவரதர் கோயில்' என  எனப்படுகிறது.

தாமிரவருணி, விஷ்ணு பாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம் ஆகியவற்றை தீர்த்தமாகவும் நெல்லியை தலமரமாகவும் கொண்டுள்ள மூலவர் கருவறையில் ஆதிமூலப் பெருமாள் நின்ற கோலத்தில்,  4  திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.  பூமா தேவியும், ஸ்ரீ தேவியும் சேர்ந்து பிருகு மார்க்கண்டேய ரிஷிகளுடன்  காட்சித் தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய கஜேந்திர வரத பெருமாள் எனவும் வழிபடப்படுகின்றார்.

ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக  கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக  வழிபடப்படுகிறது. இந்த நரசிம்மர் "ஸ்தம்ப நரசிம்மர்' எனப்படுகிறார், தாமிரவருணி நதியில் முழுகி அங்கிருந்து வந்து சத்தியப்படிகள் என அழைக்கப்படும் படிகள் வழியாக ஏறி வந்து சத்தியம் செய்வது பழக்கத்தில் இருந்தது. இவை "பொய் சொல்லா மெய்ப்படிகள்' எனப்பட்டது. இந்தத்தூணுக்கு சந்தனம்,  மல்லிகை மலர்களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்படுகிறது.

மூலவர் சந்நிதியின் வலப்புறம்  அமைப்பாலும் , கலை அம்சங்களாலும் சிறப்புக் கொண்ட பழைய கோயில் எனப்படும் பரமபதநாதர் சந்நிதி முற்கால பாண்டியர்களால் 8} ஆம் நூற்றாண்டு  கல் விமானத்துடன் அமைந்துள்ளது, பிரகாரத்தில் தெற்கு நாச்சியாரும், வடக்கு நாச்சியாரும் காணப்படுகிறார்கள். 

கி.பி.1160}இல் பாண்டிய மன்னன் முதல் வீரபாண்டியன் திருப்பணி செய்ததை "மாதலங்காத்த முதல் வீரபாண்டியர்' எனக்கூறும் கல்வெட்டு  குறிக்கிறது. கி.பி. 1250}இல் கோநேரின்மை கொண்டான் சுந்தர பாண்டிய நரசிங்கதேவர் தீயிலே நின்று பொன்சேவை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.  கோயில் கட்டடம் விஜய நகர மன்னர் காலத்தில்  கட்டப்பட்டுள்ளது. 

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு  நடைபெற்று, 10 நாள்கள்  திறந்திருக்கும். 10}ஆம் நாள் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தொடர்புக்கு  8489400137,  9566339717.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT