வெள்ளிமணி

கார்த்திகை தீபத்தின் பெருமை!

2nd Dec 2022 06:07 PM | புலவர் தி. வே. விஜயலட்சுமி

ADVERTISEMENT

 

பொதுவாக, தமிழ் மாதங்களின் பெயர்களே பெரும்பாலும் அந்த மாதம் பெளர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்களின் பெயரிலேயே அமைந்திருக்கும். இல்லையென்றால் அந்த நட்சத்திரத்துக்குரிய வட சொல்லிலே இருந்து பிறந்திருக்கும்.  பெரும்பாலும் பெüர்ணமிகள் திருவிழா நாள்களாகவே அமையும். 

சித்திரை பெüர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம் என்று பட்டியல் நீளும். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் வரும் பெüர்ணமி கார்த்திகை பெüர்ணமி.  நீண்ட நெடுங்காலமாகக் கொண்டாடப்படும் திருநாள். 
பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம்} இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவது தான் தீபத் திருவிழா. சிவனுக்கும், நெருப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

"அழலாட அங்கை சிவந்ததோ அழகால் அழல் சிவந்த வாறோ' என்பது திருவாக்கு. காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதியில், அழல் ஏந்தி ஆடுவதால் சிவனது அங்கை சிவந்து போனதா? அல்லது சிவன் கையில் பிடித்து ஆடுவதால் தீ சிவந்த நிறத்தைப் பெற்றதா? என்று வியக்கிறார்.

ADVERTISEMENT

"குன்றின் மேல் இட்ட தீபம்போல் பிரகாசிக்கிறது'  என்பது பழமொழி. இது திருவண்ணாமலை தீபத்தைத் தான் நினைவூட்டுகிறது.  அன்று கார்த்திகை பெüர்ணமி, சிவாலயத்தில் ஒரு எலி இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. வானில் சந்திரன் ஒளி விடத் தொடங்கிய அந்த நேரத்தில் சிவ சந்நிதியில் இருந்த தீபத்தின் திரி தூண்டப்பட்டதும் தீப ஒளி மங்கத் தொடங்கியது. விளக்குக்கு இருபுறமும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த இந்த எலி, தன்னை அறியாமல் விளக்குத் திரியை மேல் நோக்கித் தள்ளியது.

அவ்வளவுதான் மீண்டும் தீபத்தின் சுடர் மிளிரத் தொடங்கியது. அறியாமல் செய்த இந்தச் செயலுக்கு அந்த எலி அடைந்த பேறு எது தெரியுமா? மறு பிறவியில் மகாபலம் பொருந்திய மஹாபலி சக்கரவர்த்தியாக அவதரித்தது. புல்லாய், பூண்டாய் என்ற பிறப்பின் வரிசை இல்லாமல் நேரடியாக மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறந்தது. அது இறைவன் கருணை மட்டுமல்ல, அந்த நாள் கார்த்திகை பெüர்ணமியும், தீபத் திரு நாளாகவும் அமைந்தது மகிமை.

நிறைந்த கார்த்திகை பெüர்ணமி தினத்தில்தான் இறைவன் அடிமுடி காண முடியாத அக்கினிப்  பிழம்பாக நின்றார். இதே நாளில் தான் ஈசன் முப்புரத்தையும் எரித்தார். இறைவனை ஜோதி வடிவமாய்க் காண்பது ஞானத்தின் உயர்நிலை அதை நினைவு கூர ஆலயங்களில் தீபம் ஏற்றுகிறோம்.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார். அதை உணர்த்தவே அந்தத் தளத்தில் இருக்கும் அனைத்து சிவாலய நந்திகளும் கருவறை நோக்கியிராமல் மலையை நோக்கியே அமர்ந்திருக்கும். மலையே இறையான அந்தத் தளத்தில் திருக் கார்த்திகை தினத்தன்று ஏற்றப்படும் பிரம்மாண்ட சுடரைக் காணும்போது அந்தக் கயிலைநாதனையே தான் அதில் தரிசனம் செய்கிறோம். 

கார்த்திகை தீபத்தின் மகிமை குறித்து காஞ்சி மகா பெரியவர் சொல்லும் போது,  "இந்த கார்த்திகை தீபத்தை எந்த ஜீவன் பார்த்தாலும் அதற்கு நித்யச்ரேயஸ் உண்டாகும்'  என்று சாத்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லி இருக்கிறார்.

இது ஆலயங்களில் ஏற்றப்படும் தீபங்களைத் தரிசனம் செய்வதால் மாத்திரம் அல்ல, நம் வீடுகளிலும் சிவ நாமம் சொல்லிக் கொண்டே நாம் ஏற்றி வைக்கும் ஒவ்வொரு தீபத்துக்கும் பொருந்தும்.

இந்த பெüர்ணமி தினத்தில் இறைவனை நினைத்து ஒரு விளக்காவது ஏற்றி ஒளி பெருகச் செய்வதன் மூலம் பெரும் பலன்களை அடையலாம் என்கின்றன புராணங்கள். 

அருணகிரிநாதர் முருகன் புகழில், "தீப மங்கள ஜோதி நமோ நமோ'  என்று தீப ஜோதிக்கு வணக்கம் அளித்துள்ளார். 

திருவண்ணாமலை தீபத்தின் தத்துவமே இந்த தீப சோதியில்தான் அடங்கியுள்ளது.  பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களை மூடினாள் என்பது புராணம். அந்தக் கண்களை, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை - மூடியதும் உலகமே இருண்டு விட்டது எதிர்பார்க்கக் கூடியது தானே! 

சிவனுக்குப் பரஞ்சுடர் என்ற ஒரு பெயருமுண்டு. திருவண்ணாமலை மட்டுமல்ல, சகல சிவாலயங்களிலும் கார்த்திகை பெüர்ணமி அன்று சோதி வணக்கம் நிகழும்.

சர்வாலய தீப நாளில் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். இதைக் காணும்போது இறைவனிடம் சரணாகதி அடைந்து ஆணவம் அழித்தால் மனதில் மகிழ்வும், பகையற்ற வாழ்வும் நமக்கு சித்திக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு கார்த்திகைத் தீபத்திருநாள் டிசம்பர் 6}ஆம் தேதி  வருகிறது. அன்று இல்லத்தில் அனைவரும் தவறாமல் விளக்கேற்றி, அனைத்து அறைகளிலும் வைக்க இறைவனின் பேரருள் வீடு முழுவதும் பரவி நிலைக்கும் என்பது உறுதி. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT