வெள்ளிமணி

மங்களம் நல்கும் கல்யாண விநாயகர்

26th Aug 2022 06:00 PM

ADVERTISEMENT

 

குத்தம்பாக்கம் என்னும் ஊரில் இருந்து ரிஷியார் கோத்திரத்தைச் சேர்ந்த முத்துசாமி முதலியார் என்பவர் குடும்பமொன்று குடியேறி சென்னை ராயப்பேட்டையில்  வசித்து வந்தனர். அவர் வசித்து வந்த தெரு அவர் பெயராலேயே முத்து (சாமி) முதலி தெரு என வழங்கப்படுகிறது. அவரது மகன் கந்தசாமிக்கு  நெடுநாள்கள் சந்தான பாக்கியம் வாய்க்காததால் துன்பமுற்றனர். ஒரு நாள் ஒரு  துறவி  வீடு வீடாகப் பிச்சை ஏந்திக் கொண்டே வந்தார்.  முதலியார் வீடு  வந்ததும் இந்த இடத்தில் ஒரு தெய்வம் குடியேறி அருளும். கல்யாண விநாயகர் வந்து அமர்ந்து வம்சம் விருத்தியாக்கப் போகிறார். ஊரே இங்கு வந்து வணங்கப்போகிறது  என நல்வாக்குக்  கூறி பிச்சைகூட பெறாமல் சென்று விட்டார். அவர் கூறியதை சிவனே கூறியதாக எடுத்துக் கொண்டு கல்யாண விநாயகருக்கு   ஒரு சந்நிதி அமைக்க முடிவு செய்தனர்.  
                                                    
கல்யாண விநாயகர் வரலாறு
பிரம்மனுக்கு அவன் படைப்பில் குறைபாடுகள் தென்பட்டன. நாரதரைத் தேடி விநாயகரை வணங்க  காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்றார்.தனது படைப்புகளில் குறை இருப்பது குறித்து தெரிவித்து நிவர்த்திக்க வழி கேட்டார். விநாயகரும்  பிரம்மன் வேண்டுகோளை ஏற்று  தன்னிடம் இருக்கும் ஞானம், கிரியை ஆகிய இரு சக்திகளை வணங்கி படைப்புத் தொழிலை மேற்கொள்ள பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனின் முன்பாக  அந்த இருசக்திகளும் சித்தி, புத்தி ஆகிய இரு பெண்களாகத் தோன்றினார்கள். அவர்களை  வணங்கிய  பிரம்மன். "என்  படைப்புத் தொழிலுக்கு சித்தி, புத்தி ஆகிய  இருவரும்  துணையாக இருந்து காப்பதோடு இருவருமே என்  புத்திரிகளாக அவதரிக்க வேண்டும்'' என்று வேண்டினார்.  அவ்வாறே நடந்து தன் பணி செவ்வனே செய்து வந்தார்.

இருவரும் திருமணப் பருவத்தை  அடைந்ததும் நாரதரைக் கலந்தாலோசிக்க, ஒரே மாப்பிள்ளையாகப் பார்க்க   பிரம்மனின் ஒப்புதலோடு நாரதர் கயிலாயத்தில்  விநாயகரைக் கண்டு தொழுதார்.  உங்களை  மணந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் சகோதரிகள் இருவர் காத்திருக்கிறார்கள். உலகை உய்விக்க அவர்களை மணக்க வேண்டும் என வேண்டினார். விநாயகரும் சிரித்தவாறே   மணக்க ஒப்புக்கொண்டார்.  திருமணத்துக்கு பார்வதி}பரமேஸ்வரர், லட்சுமி}மகாவிஷ்ணு முதல் எல்லா தேவர்களும் குழுமியிருக்க சித்தி, புத்திக்கும்  விநாயகருக்குமான  தெய்வீகத்  திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

தத்துவ தெய்வம்

ADVERTISEMENT

பிரம்மனிடம்  விநாயகர் "சித்தி, புத்தி இருவருமே என் சக்தி அம்சங்கள்தான்! படைப்புத் தொழிலின் குறை நீங்க இரு சக்திகளையும்  பின்னர்  உங்கள் வேண்டுதல்படி தொழில் விக்னம் இல்லாமல் நடந்ததும், பிறகு இச்சக்திகளே உனக்குப் புத்திரிகளாகப் பிறக்க வேண்டும் என கேட்டதால் உங்களுக்கு மகளாகப் பிறந்தனர் வளர்ந்தனர். உரிய பருவத்தில் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளனர்.

கிரியா சக்தியின் வடிவம் சித்தி. இச்சா சக்தியின் வடிவம் புத்தி .  இச்சையும் கிரியையும் இணைந்து ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தைச் செய்ய முடியும். இந்தத் தத்துவத்தின் விளக்கமாகவே ஞான  வடிவான கணபதி  ஆகிய நான் சித்தி, புத்தி தேவியர்களுடன் இருந்து அருளுகிறேன் என்றார். அது முதல் சித்தி புத்தி விநாயகரின் இவ்வடிவம் கல்யாண விநாயகர் எனப்பட்டார்.  இது மக்களை  தெய்வங்கள் அரசாண்ட காலத்தில் நடந்த வரலாறு ஆகும்.

இந்த  வரலாற்று அடிப்படையில்   ராயப்பேட்டை  முத்து முதலித் தெருவின் வீட்டில்  ஒரு தகுதியான இடத்தைத் தேர்வு செய்து அதனில் சந்தி அமைத்து சித்தி புத்தி உடனுறை கல்யாணக்கோல விநாயகரை தம்பதி சமேதராய் பிரதிஷ்டை செய்து வணங்கி அதற்கு உரிய சீரோடும் சிறப்போடும் பூஜை முதலியவற்றை செய்யத் துவங்கினர்.    நற்பலன்களும் வாரிசும் உருவாயிற்று. அன்னை சொர்ணாம்பிகையும்  இறைவன்  சுந்தரேஸ்வரரை லிங்கவடிவிலும் பிரதிஷ்டை செய்தனர்.

துவங்கப்பட்ட  தர்ம காரியங்கள் தொடர்ந்து நடைபெற, ராயப்பேட்டை, புதுப்பாக்கம்,  அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டியுள்ள வீடு, சொத்துகளை எழுதி வைத்து தர்மங்கள் தடையின்றி நடக்க முத்துசாமி ஏற்பாடு செய்தார்.
   
கோயிலின் முன்புறம் மூல வாயிலின் எதிரில் சித்தி புத்தி விநாயகர் சந்நிதியும் உள்ளே சுந்தரேஸ்வரர்,  சொர்ணாம்பிகை அம்பாளும், வள்ளி தேவசேனா உடனுறை கதிர்காம வேலரையும்  நடராஜர் உடனுறை சிவகாமவல்லி, மாணிக்கவாசகர், ஐயப்பன், சந்நிதிகள்   வள்ளலார், அறுபடைவீடு சுதைகளும்  அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம், காரிய சித்தி, வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை நீங்குதல்,  வெற்றி வேண்டி வழிபடுதல் ஆகியவையுடன் பிள்ளைப்பேறு வேண்டுதலுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும்  தலமாகவும் கோயில் விளங்குகிறது. 

சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயில் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு எதிர்புறம்  சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, முத்து முதலித் தெருவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. 

விவரங்களுக்கு 04428351928; 9389966670.

- இரா.இரகுநாதன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT