வெள்ளிமணி

புண்ணியம் தரும் புற்று வழிபாடு

தினமணி

இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக புற்று வழிபாடு உள்ளது. புற்றில் குடி கொண்டிருக்கும் நாக வழிபாட்டையே குறிப்பதானாலும் சில தலங்களில் அம்பிகையின் வழிபாடாகவும் அமைந்திருக்கிறது.  புற்றுகள் கவசமாக விளங்க,  அவற்றில் மறைந்திருந்த சுயம்பு லிங்கங்கள் வெளிப்பட்டன என்று பல தலப் புராணங்கள் கூறுகின்றன. 

திருவலம் என்ற தலத்தில் வில்வ வனத்தின் ஒரு பகுதியில் பசு புற்றின் மீது பாலைச் சொரிந்து புற்று மண் கரைய அங்கே சுயம்புலிங்கம் வெளிப்பட்டது.  திருவாரூரில் இறைவன் புற்றிலிருந்து வெளிப்பட்டார். இவருக்கு வன்மீக நாதர்  (வன்மீகம் என்றால் புற்று),  புற்றிடங்கொண்ட நாதர் என்றொரு திருநாமமும் உண்டு. 

ராமாயணத்தை நமக்குத் தந்த வான்மீகி முனிவர் தவம் செய்தபோது அவரைச் சுற்றி புற்றுகள் ஏற்பட்டு அவரையே மூடிவிட்டதாகவும்,  அதிலிருந்து மீண்டு வந்ததால் அவருக்கு வான்மீகி (புற்றிலிருந்து வந்தவர்)  என்று பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. 

ஸ்ரீ ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரமாக வைணவர்களால் போற்றப்படுவதும்,  ஆந்திர மாநிலம் } கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வேதாத்ரி என்ற இடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலில் நரசிம்மர் புற்று வடிவில் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளிடக் கரையையொட்டி அமைந்துள்ள துறையூர் ஸ்ரீ விஷமங்களேஸ்வரர் கோயிலுக்கு முன் உள்ள புற்றை விஷ்ணு அம்சம் எனப் போற்றுகின்றனர். காளிங்க நாகதேவதை "சங்கமவல்லி நாகதேவதை' எனும் திருநாமத்துடன் அருள்பாலிப்பதாகத் தெரிவிக்கின்றனர். 
பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர நாளில் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு}கேது தோஷம் நீங்கி, நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

எல்லா தெய்வங்களுமே நாகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் சக்தியின் வடிவாக நாகங்கள் போற்றப்படுகின்றன.  உடலிலும் குண்டலினி சக்தி நாக வடிவாகவே இருப்பதாக யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.  தேவி  கருமாரி அம்மன் நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்துவரும் திருவேற்காட்டில், பெரிய புற்றுக் கோயில் உள்ளது. 

புன்னைநல்லூர் மாரியம்மன் புற்றாக இருப்பதால் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய புற்றாக வணங்கப்படுகிறாள். இந்தப் புற்று வடிவம் கொண்ட அம்மன் வளர்ந்து கொண்டே வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

சிவன் குறித்து மாரியம்மன் நீண்ட காலம் தவம் செய்தபோது,  அவளைச் சுற்றி புற்று மூடிக் கொண்டதாகவும், அவள் இடுப்பிலிருந்து வேப்பமரம் தோன்றி அவள் உடலைத் துளைத்து வளர்ந்ததாகவும், அவளுக்கு கோட்டை அமைப்பது போல் அது படர்ந்து வளர்ந்ததாகவும் மாரியம்மன் கதைப் பாடல் கூறுகிறது. 

மாரியம்மன் கோயிலுக்கு உள்ளே அல்லது வெளியே அமைந்த புற்றை புற்று மாரியம்மன் என்று வழிபடுகின்றனர்.   புற்றின் துவாரத்தின் வழியே படமெடுத்து நிற்கும் பாம்பை தரிசிப்பது என்பது தெய்வ தரிசனம் கிடைத்தது என்றே கருதுகின்றனர். 

பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும்,  அவற்றை வழிபடுவதால் செல்வ வளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.  
செவ்வாய்,  வெள்ளி ,  ஆடி மாத வளர்பிறை பஞ்சமி (நாக பஞ்சமி),  ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தி (நாக சதுர்த்தி) நாள்களில் புற்றுக்கு இருவேளையும் பால் வைத்து, விளக்கேற்றி சூடம் ஏற்றி மிகுந்த பயபக்தியுடன் விழாவாகவே மக்கள் கொண்டாடுகின்றனர். 

புற்றை யாரும் சிதைப்பதில்லை. குடும்ப,  உடல் நலன்களுக்காகப் புற்று வழிபாடு செய்கின்றனர். குறைப்பிரசவம் உண்டாகாமல் தவிர்க்கவும், நோயின் தாக்குதல் தணியவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் புற்று வழிபாடு துணை புரிகிறது.   நினைத்தது நிறைவேற மஞ்சள் நூலால் புற்றைச் சுற்றி கட்டியும் புடவை சாற்றியும் வழிபடுகின்றனர். 

நாகர்கோவில், சங்கரன்கோவில் போன்ற பல தலங்களில் புற்றுமண்ணே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் மாருதி நகரில் ராஜநாகலக்ஷ்மி அம்மன் குடிகொண்டிருக்கும் புற்றையே அம்மனாகக் கருதி, ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

புற்று மண் பிரசாதம் தெய்வத் தன்மையும், மருத்துவக் குணமும் கொண்டது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி.  

-ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT