வெள்ளிமணி

பூவாலைக்குடி ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்!

12th Aug 2022 05:36 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பொன்னமராவதி வட்டத்தில் வையாபுரி வழியாகவும், செவலூர் விலக்கில் இறங்கி கோவனூர் வழியாகச் செல்லும் அரசமலைச் சாலையில் 3 கி.மீ. தூரம் வடக்காகச் சென்றால் பூவாலைக்குடி உள்ளது.  இந்த  ஊரின் தென்புறமுள்ள சிறிய பாசன ஏந்தலின் மேற்கிலுள்ள வனப் பகுதிக்குள் உள்நுழைந்து குன்றின் மீது உள்ள புஷ்பவனேஸ்வரர் என்ற பூவாலைநாதர் கோயிலை அடையலாம்.  கோயில் சுமார் 10 அடி உயரமுள்ள சிறிய குன்றை குடைந்து உருவாக்கப்பட்ட சிவன் கோயிலாகும். 

சுவாமி கோயில்
கோயிலில்  சிறிய கருவறையும்,  கருவறைக்கு முன்பாக முன் மண்டபமும் இயற்கை மலைப் பாறையில் குடையப்பட்டுள்ளது.  முன் மண்டபத்தை பிற்காலத்தவர் கருங்கல் கட்டுமானத்தால் விரிவுபடுத்தி மகா மண்டபமும் மகா மண்டபத்துக்கு முன்பாக தூண்களை நிறுத்தி உத்தரம் ஆகியவைகளைக் கொண்டு முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

படிக்க:அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

ADVERTISEMENT

கோயிலுக்கு தென்புறத்தில் அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றோடு அம்பாள் கிழக்குப் பார்த்து அமர்ந்துள்ளார். பூவாலைநாதர் கோயிலின் கருவறையின் பின்புறம் கருவறைக்கு வடக்கில் உள்ள பாறையில்,  முருகன் கோயில் கருவறை முன் மண்டபம் ஆகியவற்றோடு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். 

பைரவர் சன்னதி 
சுவாமி கோயிலின் வட கிழக்கில் பைரவருக்கு கருங்கல்லால் கட்டப்பட்ட தனிக் கோயிலில் பைரவர் தெற்கு பார்த்து சமபங்க ஸ்தானத்தில் நின்று காட்சி தருகிறார்.  கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்தாலும் புதுக்கோட்டை கோயில்களின் நிர்வாகத்தில் இருக்கிறது.  

சுந்தரவள்ளியம்மன் கோயில் மேல்புறம் சுவர்க் கல்வெட்டு கி.பி. 1467}ஆம் ஆண்டு கல்வெட்டு பூவாலைக்குடி நாயனாக கோயில் பண்டாரத்தார் சுந்தரசோழபுரத்து அரசூருடையான் இந்தக் கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை உருவாக்கியமைக்காகவும் திருவாதிரை மார்கழி உற்சவம் 10 நாள் நடத்தும் திருவிழாவில் அரசூருடையான் மதுரைச் சக்கரம் பதினைந்து கொடுத்தமைக்காக அந்தக் கோயிலில் தீர்த்தம் திருநீறும் பிரசாதமும் கொடுக்கப்பட்டதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமையைத் தெரிவிக்கிறது.

சுந்தரவள்ளியம்மன் கோயில் வடபுறம் சுவர் கல்வெட்டு கும்பகோணம் கோதண்ட நட்டுவன் மகள் செண்பகச் செல்வியை புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு தேவரடியாராக மேற்படி பண்டார (கருவூல) காரியஸ்தர்களும் மடபாதியம் ஆவமுத்த முதலியாக அத்தேவரடியாரை மூன்றாவது  பங்குதாரராக ஆக்கியதைத் தெரிவிக்கிறது. 

கல்வெட்டுச் செய்திகள் 
கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு அமரூன்றி முத்தரையன் ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கிறது.  கி.பி. 7 அல்லது 8}ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் குடையப்பட்டிருக்கலாம். அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்து கோயிலாகும். சுப்பிரமணியர்,  பைரவர் 17, 18}ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கோயிலாகும். 

புஷ்பவனேஸ்வரர் கோயில் தென்புறம் சுவரிலுள்ள கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திர சோழரின் 5}ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும்.  கோயில் தென்புறம் சுவரிலுள்ள கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு பூவாலைக்குடி கோனாட்டின் கூடலூர் நாட்டு ஊராக இருந்ததைத் தெரிவிக்கிறது.

பரிகாரத்தலம் 
பாறையில் இருக்கும் சுப்பிரமணியரை தைப்பூசத்தன்று வணங்கினால் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.  
தொடர்புக்கு 7094649989.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT