வெள்ளிமணி

அரங்கேற்ற ஐயனார்!

எஸ். வெட்கட்ராமன்

கயிலையில் தன் அணுக்கத் தொண்டராய் வாழ்ந்த ஆலால சுந்தரரை மண்ணுலகில் பிறக்கச் செய்து தனது தோழராக உலாவரச் செய்து, தம்பிரான் தோழராக சுந்தரமூர்த்தி சுவாமிகளை இறைவன் ஆட்கொண்டு திரும்பி கயிலாயத்துக்கு அழைத்துக் கொண்டது ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் கூடிய நாளாகும். 

இதே நாளில் சுந்தரருடன் இறைவன் திருவடியை அடைந்த மற்றொருவர் அறுபத்து மூவரில் கழற்றறிவார் என்று போற்றப்படும் சேரமான் பெருமாள் நாயனார். முன்னவர் வெள்ளை யானை மீதேறியும், பின்னவர் குதிரை மேலும் ஏறி கேரளத்தில் உள்ள மலை நாட்டு தேவாரத் திருத்தலமான  திருஅஞ்சைக்களம்  என்ற இடத்திலிருந்து திருக்கயிலை சென்றதாக வரலாறு.  
ஒவ்வொரு ஆண்டும் சைவ சமய அடியார்கள் ஆடி சுவாதி குருபூஜையை ஆலயங்களிலும், மடங்களிலும், பிற இடங்களிலும் சிறப்பாக நடத்துகின்றனர். இவ்வாண்டு குரு பூஜை ஆகஸ்ட் 5-இல் நடைபெறுகிறது.

திருக்கயிலை (வழி) திருஅஞ்சைக்களம்:  18  ஆண்டுகளே வாழ்ந்த சுந்தரர் 11 தல யாத்திரைகளைச் செய்தவர்.  அதில் கடைசியாகச் செய்ததே திரு அஞ்சைக்களம் - திருக்கயிலை யாத்திரையாகும்.  அவர் கயிலைக்குச் சென்றபோது,  இறைவன் திருவருட் கருணையை வியந்து பாடிய  "தானெனை முன் படைத்தான்'  என்று தொடங்கும் இன்னிசை திருப்பதிகந்தனை வருணன் திருஅஞ்சிக்களத்திலே உய்த்து தெரிவித்தான் என்பார் சேக்கிழார். அதுவே இத்தலத்துக்கு உரிய தேவாரப் பதிகமாகக் கருதப்படுகிறது.

கோவையிலிருந்து சேக்கிழார் திருக்கூட்டம் அடியார்கள் குழு பெருமளவில் பங்கேற்று சுந்தரர் திருக்கயிலை சேரும் விழாவை  ஆடி சுவாதி தினத்தன்று அஞ்சைக்களத்தில் சிறப்பாக நடத்துக்கின்றனர். (இவ்வாண்டு 88-ஆம் ஆண்டு).  தொடர்புக்கு: 9363063779.

அரங்கேற்ற ஐயனார்: 'திருக்கயிலாய ஞான உலா' பதினோராம் திருமுறையில் இடம் பெற்ற நூல்களில் ஒன்று.  சேரமான் பெருமாள் நாயனார் (சேரநாட்டு மகோதைய புரத்து மன்னன், சிறந்த சிவனருட் செல்வர்) பாடிய இந்த உலா நூல் 'ஆதியுலா' எனப் போற்றப்படுகிறது.  உலா இலக்கியத்தில் முதல் நூலானதாலும், ஆதி எனப்படும் கயிலாய நாதன் உலா வருவதைப் பாடியதாலும் அக்காரணப் பெயர் ஏற்பட்டது.

சுந்தரருடன் கயிலை சென்ற சேரமான் பெருமாள், கயிலையில் இறைவன் திருமுன்னர் அரங்கேற்றிய திருக்கயிலாய ஞான உலாவை உடனிருந்து கேட்ட மாசாத்தனார் (ஐயனார், சாஸ்தா) சிவபெருமான் ஆணைப்படி அத்தெய்வப் பனுவலை உளத்துட்கொண்டு சோழநாட்டின் திருப்பிடவூரிலே வெளிப்படச் சொல்லி வழங்கச் செய்தார் என சேக்கிழார் தனது வெள்ளானைச் சருக்கத்திலே குறிப்பிடுகின்றார்.

திருப்பிடவூர் என வழங்கப்படும் தலம் திருச்சி அருகேயுள்ள திருப்பட்டூரே ஆகும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவில் சிறுகனூருக்கு அருகில் உள்ளது. இங்கு உள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இந்தியாவிலேயே பிரம்மாவிற்கு அமைந்துள்ள ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று.

இக்கோயிலுக்குச் செல்லும் முன் அமைந்துள்ளது அருள்மிகு அரங்கேற்ற ஐயனார் ஆலயம்.  மூலஸ்தானத்தில் பூர்ணா, புஷ்களையுடன் சாஸ்தா சந்நிதி கொண்டுள்ளார். சாஸ்தா இடது கையில் கருங்கல்லில் வடித்த ஓலைச் சுவடியைக் கொண்டுள்ளார். அந்தச் சுவடி ஞான உலா நூல் எனப்படுகிறது. இதைத்தவிர மகாகாளி, கருப்பண்ண சுவாமி, பிள்ளையார், வள்ளி தேவானையுடன் முருகர், சப்த கன்னிகைகள், நாகர், மதுரை வீரன், சுந்தரர், சேரமான் பெருமாள் சந்நிதிகளும் அமைந்துள்ளன. 

கல் யானை உருவத்துடன் அரங்கேற்ற மண்டபமும் உள்ளது. இங்கு தான் கயிலை ஞான உலா நூல் அரங்கேற்றப்பட்டதாக ஐதீகம். அதனால் தான் மூலவருக்கு அரங்கேற்ற ஐயனார் என்று திருநாமம். 

ஒவ்வொரு ஆடி சுவாதியன்றும் (ஆகஸ்ட் 5) காலை பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து சுந்தரர்,  சேரமான் உற்சவ திருமேனிகள் அபிஷேக அலங்காரங்களுக்குப் பிறகு மதியம் யானை , குதிரை வாகனங்களில் பவனியாக ஐயனார் கோயிலை வந்தடையும். அங்கு திருக்கயிலாய ஞான உலாவிலிருந்து பதிகங்கள் பாடப்படும். தீபாராதனைக்குப் பிறகு சாஸ்தா, சுந்தரர், சேரமான் பெருமாள் உற்சவ திருமேனிகள் அலங்காரமாக திருப்பட்டூரில் திருவீதி உலா வரும், கண்டு தரிசிக்க வேண்டிய விழா. 

தொடர்புக்கு:  8870684772.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT