வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 192

29th Apr 2022 03:43 PM

ADVERTISEMENT

1463-இல் பராக்கிரம பாண்டியர் விண்ணுலகெய்தியபோது, எந்தத் திருக்கூட்டத்தில் இவர் கலந்திருக்கக்கூடும் என்பது பற்றி, புலவர் ஒருவர் பாடினார்  அப்பாடல் வருமாறு:

கோதற்ற பக்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன்னம்பலத்தோ
வேதத்திலோ சிவலோகத்திலோ  விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே 

விச்வநாதருக்குக் கோயில் எழுப்புவித்தது மட்டுமன்றி, விச்வநாதர் பெயராலேயே ஏரி ஒன்றையும் இம்மன்னர் தோற்றுவித்தார். 'நவமாகக் கண்ட விச்வநாதப் பேரேரி' என்றே இது குறிக்கப்பெற்றுள்ளது.   

அந்தணர்களுக்கு அளிப்பதற்காக பராக்கிரம பாண்டியர் தோற்றுவித்த ஊர்கள், 'அகரம்' என்று வழங்கப்படலாயின. அகரம் என்னும் சொல்லுக்கு வீடு, அக்ரஹாரம் ஆகிய பொருள்கள் உண்டு. அந்தணர்களுக்கான குடியிருப்புகள் என்பதால் இவை 'அகரம்' ஆயின. அகரங்கள் அமைக்கப்பட்ட ஊர்களில் ஒன்று விந்தனூர்; இவ்வூருக்குப் பராக்கிரம பாண்டியச் சதுர்வேதி மங்கலம் என்றும் ஒரு பெயர் வழங்கியுள்ளது. அகரங்களில் மற்றொன்று, தென்காசிக்கும் திருக்குற்றாலத்திற்கும் இடையில் அமைந்த (அதாவது தென்காசிக்கு மேற்கில்) மேலகரம். மேலகரத்தில் பிறந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர். 

ADVERTISEMENT

'தென்காசியின் கற்கள்கூட கதை சொல்லும்' என்று பெருமிதம் கொள்கிறார் ரா. பி. சேதுப் பிள்ளை. தென்காசி - குற்றாலம் மார்க்கத்தில் அடிபட்டான் பாறை என்றோர் இடம். இந்தப் பாறையை இறைவனுடைய திரு எல்லையாக மக்கள் வணங்கினர். குற்றாலம் நோக்கிச் செல்லும்போது, குற்றால மலையையே குற்றாலநாதரின் வடிவம் என்று கருதியதால், இப்பாறைக்கு அப்பால் குதிரைமீதோ வேறு விலங்குகலின்மீது பயணித்தோ செல்லமாட்டர். புனித இடம் என்பதால், தாமே நடந்து, அவ்வப்போது பணிந்து வணங்கிச் செல்வர். பெரும் செல்வந்தன் ஒருவன். தன்னுடைய குதிரைமீதேறி இப்பாறையைக் கடக்க முற்பட்டான். பலரும் தடுத்தனர். ஆணவமிக்க அவன் செவி மடுக்கவில்லை. எல்லோரையும் வைதுவிட்டு, குதிரையை ஓட்டினான். சடுதியில் பாய்ந்த குதிரையின் நான்கு கால்களும் பாறையில் ஒட்டிக் கொண்டு நகர மறுத்தன. குதிரை சரிந்தது; ஆணவக்காரனும் வீழ்ந்தான். 

ஆசார ஈனத் தருக்கன் குதிரை அடியொட்டுப் பாறை 
அடி ஒட்டினாற்போலும்....

என்று இந்தக் காட்சியைக் குறவஞ்சி வர்ணிக்கிறது. அடியொட்டுப் பாறை என்பது காலப்போக்கில் அடிபட்டான் பாறை ஆகிவிட்டது. 

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய பிற்காலப் பாண்டியர்கள் அனைவருமே தமிழ் வல்லுநர்களாகவும் சிற்பநூல் வித்தகர்களாகவும் இருந்தனர் என்று தோன்றுகிறது. சகோதரர்களும் சகோதரர் மகன்களுமாக இவர்கள் அடுத்தடுத்தும் மாறிமாறியும் ஒரே சமயத்தில் தென்காசியைச் சுற்றிய வெவ்வேறு பகுதிகளையும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்த வரிசையில், 1564 முதல் 1604 வரை ஆட்சி புரிந்தவர் நெல்வேலிமாற அரசரின் மகனாரான சடையவர்மன் அதிவீரராம பாண்டியர். ஹர்ஷர் வடமொழியில் இயற்றிய நைஷதம் என்னும் நூலை (நிஷத நாட்டு வரலாறும் கதையும்) தமிழில் நைடதம் என்றே இவர் பாடியுள்ளதைத் தமிழுலகம் நன்கறியும். அழகன் சீவலவேள் என்றும் அழைக்கப்பெற்ற இவர், லிங்கபுராணம், கூர்மபுராணம், வாயு ஸம்ஹிதை, நறுந்தொகை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். அதிவீரராம பாண்டியரின் ஆட்சிக் காலத்திலேயே, தென் பாண்டி நாட்டின் இன்னொரு மன்னராக, கரிவலம்வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் அபிராம சுந்தரேஸ்வரனான வரதுங்கராம பாண்டியர். சேர மன்னரோடு போரிட்டு வென்றவர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிற இவரும் தமிழ்ப் பண்டிதர். கருவை கலித்துறை அந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி, பிரமோத்தரகாண்டம் ஆகியவை இவர் யாத்த நூல்களாகும். அதிவீரராமருக்கு சுவாமிதேவரும் வரதுங்கராமருக்கு வேம்பத்தூர் ஈசானனரும் ஆசிரியர்களாக இருந்தனர். 

தென்காசியில் காசிமேசபுரம் என்றொரு பகுதி உண்டு. இப்பகுதி உருவான வரலாற்றை சேதுப்பிள்ளை விளக்குகிறார். பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாகவே, ஏதொவொரு துறவி இப்பகுதியில் தங்கியிருந்தாராம். மக்கள் இவரைப் பரதேசி (ஊர் பேர் தெரியாதவர் என்னும் பொருளில்) என்று சுட்டினார்கள்; இவர் இருந்த பகுதியைப் பரதேசிக் குகை என்றும் குறித்தார்கள். காலப் போக்கில் துறவி காணாமல் போனார்; பரதேசிக் குகை மட்டும் இருந்தது. பிரிட்டிஷாரின் காலத்தில், காசா மேஜர் என்றொரு வணிகர் இங்கு வந்தார். பரதேசிக் குகைப் பகுதியில் தம்முடைய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். பாரடைஸ் எஸ்டேட் என்று பெயர் சூட்டினார். இந்த வணிகருக்குத் தம்முடைய பெயரால் ஏதேனுமொரு பகுதி வழங்கப்படவேண்டும் என்பதில் பேரவா. தாம் வாழ்ந்த இடத்திற்குக் காசா மேஜர் புரம் என்று பெயர் சூட்டச் செய்தார். காசாமேஜர்புரம், மெல்ல மெல்ல, காசிமேசபுரம் ஆகிவிட்டதாம். 
தென்காசித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு விசுவநாதர் என்று திருநாமம். அம்பிகை, அருள்மிகு உலகம்மை. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோயிலுக்குச் சென்றவர்கள், வருத்தமுடன் தான் வெளியில் வருவார்கள்; காரணம், நெருப்புக்கு இரையாகிச் சிதிலமடைந்து கண்களையும் கருத்தையும் வருத்தத்தில் தள்ளிய கோயில் கோபுரம். 

பராக்கிரம பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்படத் தொடங்கி, பின்னர் குலசேகர பாண்டியரால் பூர்த்தி செய்யப்பெற்ற கோபுரம், 1480 வாக்கில் கட்டுமானம் நிறைவுற்று, 1505-இல் முழுமையடைந்து குடமுழுக்கு கண்டது. எனினும், 19-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றால் தீக்கு இரையாகி, வெடித்துச் சிதறி, சிகரமிழந்து, வாய் பிளந்து நின்றது. காண்பவர் மனங்களைத் துயருறச் செய்து, மொட்டைக் கோபுரமாகவே நின்றது. 

1960-களில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு, 180 அடிக்கு உயர்ந்தோங்கியுள்ள அழகிய கோபுரம் கட்டப்பட்டு, 1990-இல் ராஜகோபுர சாசனம் நடைபெற்றது. பராக்கிரமப் பாண்டியர் மனசாந்தியோடு பார்த்திருந்திருப்பார். 

கோயில் கோபுர வாயிலில், எந்நேரமும் காற்று அள்ளும். கோயில் கட்டியவர்களின் அன்பும், திருப்பணி செய்தவர்களின் கரிசனமும், அருள்மிகு உலகம்மை உடனாய அருள்மிகு விசுவநாதரின் பேரருளும் காற்று வடிவில் அன்பர்களை ஆதரிக்கின்றன போலும்! 
- தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT