வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் 71: ஆனைமலை ஸ்ரீ மாசாணி அம்மன்

29th Apr 2022 05:18 PM

ADVERTISEMENT


ஸ்வத: ச்வேதா காலா குருபஹூலஜம்பாலமலினா
ம்ருணாலீலாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா
- செளந்தர்யலஹரி 

தேவியின் வடிவங்கள் எத்தனை எத்தனை?
அவள் தன் குழந்தைகளுக்காக ஏராளமான வடிவங்கள் எடுக்கிறாள்.
சமுத்திரம் ஒன்றுதான். ஆனால் அத்தனை நதிகளும் கடலில் சென்றுதான் சேருகின்றது. அதேபோன்று அம்பிகையின் அனைத்து வடிவங்களும் முடிவில் அவளிடமே ஒடுங்குகின்றன. சூரியன் ஒன்றுதான். ஆனால் தெறிக்கும் நீர்த்துளியில் ஆயிரம் சூரியன்கள் போலத்தான் அந்தப் பரம்பொருளும் அடியார்களின் தேவைகளைப் பொறுத்து ஒவ்வொரு வடிவம் எடுக்கிறாள். 
அம்பிகையின் வடிவத்தில் அனைத்து தெய்வங்களும் அடக்கம். அவளை வணங்குவதன் மூலம் அனைத்து நல்ல குணங்களும் நமக்குள் குடி புகுகின்றன. அதுதான் ஆனந்தம்.  
ஜீவன்கள் ஆசைகளால் பின்னப்பட்டவர்கள். ஆசைகளே பாபத்தில் தள்ளுகிறது. அதற்காக நாம் எடுக்கும் தீர்மானங்களே துக்கத்தைத் தருகின்றன. அது நிறைவேறுமா என்ற குழப்பமே பயத்துக்குக் காரணமாகிறது. பயமே பல பாபச் செயல்களுக்குத் தள்ளுகிறது.
அம்பிகையின் மீதான தியானமே அவைகளை நமக்குள்ளிருந்து நீக்கி, அமைதியும், நிம்மதியும் தருகிறது. நம் லெளகீக ஆசைகளை நிறைவேற்றி, அமைதியும், நிம்மதியுமான வாழ்க்கையைத் தரமே அன்னை பலவித ரூபங்கள் எடுக்கிறாள். அதில் நினைத்ததும் ஓடி வரும் அருள் மழையாக இருப்பது மாரியம்மன், காளி வடிவங்கள்.
பொள்ளாச்சி ஆனைமலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாசாணி அம்மன் அத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் கொண்டாடப் படுகிறாள். மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள அன்னையின் சக்திக்கு இணை இல்லை. அம்மனைப் பற்றி நிறையக் கதைகள் சொன்னாலும் ஒன்று மிகச் சிறப்பு.
ஆனைமலைப் பகுதியை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தபோது ஒருநாள் துறவி ஒருவர் மன்னனைச் சந்திக்க வருகிறார். மன்னனின் விருந்தோம்பலில் மகிழ்ந்த துறவி ஒரு மாங்கனி ஒன்றை அவருக்கு பரிசளிக்கிறார்.
"மன்னா, இது தெய்வத் தன்மை வாய்ந்த கனி. என் குருநாதர் எனக்குப் பரிசளித்தார். உன் உபசாரத்தால் மகிழ்வுற்ற நான் இதை உனக்குத் தருகிறேன். இத உண்டபின் இதன் கோட்டையை ஆற்றில் விட்டுவிடு. இல்லை என்றால் இது ஆபத்தாக முடியும்' என்கிறார்.
ஆனால் அதை உண்டு அதன் சுவையில் மயங்கிய மன்னன் துறவியின் வார்த்தையை அலட்சியம் செய்து கொட்டையை தனது நந்தவனத்தில் ஆற்றோரமாக நட்டு காவலர்கள் மூலம் பராமரித்து வந்தான். அந்தக் கனியை யாரானும் சாப்பிட்டால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தான்.
அப்போது மீண்டும் வந்த துறவி "மன்னா, இந்த மரத்தில் ஒரு கனி மட்டுமே பழுக்கும். அதை நீங்கள் சாப்பிட்டால் இந்த தேசம் அழிந்து விடும். ஒரு தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார்' என்கிறார். அவரின் வார்த்தையை அலட்சியம் செய்து விடுகிறான் மன்னன்.
மன்னனின் படைத் தளபதி கோசர் என்பவருக்கு சயணி என்று அழகு வாய்ந்த ஒரு பெண் இருந்தாள். அவளுக்குப் பொருத்தமான மகிழன் என்ற வீரனைத் திருமணம் செய்து வைத்திருந்தார். சயணி திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே கர்ப்பம் ஆனாள். வளைகாப்பு முடித்து எட்டாவது மாசம் தந்தை வீட்டுக்கு வந்த சயணிக்கு மாம்பழங்கள் என்றால் உயிர். தந்தை மகளுக்கு வித விதமான மாம்பழங்கள் வாங்கித் தருகிறார்.
ஒருநாள் தன் தோழிகளுடன் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது ஆற்றில் மிதந்து வந்த நன்னன் தோட்டத்து மாம்பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விடுகிறாள் சயணி. அதை அறிந்த நன்னன் கர்ப்பிணி என்றும் பார்க்காமல், மகிழன், கோசர் வேண்டுகோளை ஏற்காமல் சயணிக்கு மரண தண்டனை நிறைவேற்றி விடுகிறான். மகிழன் நன்னனைக் கொன்று தானும் உயிர் துறக்கிறார்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றதாலதான் ஊரில் மழை இல்லை, பஞ்சம் என்று நினைத்த மக்கள், சயணிக்கு மண்ணில் சிலை செய்து வழிபட ஆரம்பித்தார்கள். அதன் பின்னர், ஊரில் மழை  பெய்து, செழிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து அம்மன் மாசாணி அம்மன் என்று அழைக்கப் படுகிறாள்.
சிறிய அளவில் துவங்கிய வழிபாடு இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அம்மனின் பல்வேறு வடிவங்களில் மாசாணி அம்மனும் ஒன்று. அன்னை செய்த அற்புதங்கள் ஏராளம். உக்கிர தெய்வமான இவர் தன்னை நம்பியவர்களைக் கை விட்டதில்லை. இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குறைகளை எழுதி பூசாரியிடம் தர, அதை அவர் அம்மன் பாதத்தில் சமர்பிக்கிறார் . அன்னை அந்தக் குறைகளை நிவர்த்தி செய்கிறாள்.
உக்கிர தெய்வமான மாசாணி அம்மன் பில்லி, சூனியம் போன்ற அமானுஷ்ய சக்திகளிடம் இருந்தும் நம்மைக் காக்கிறாள் என்கிறார்கள் பக்தர். அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது.தலை முதல் பாதம் வரை பதினைந்து அடி ஆகும். இதன் ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளது. கருவறையின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் சுயம்புவாக உள்ளார்.
காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார். பேச்சியம்மனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. தெற்கே தலை வைத்துப் படுத்திருக்கும், அவளுடைய, திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம், ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜ்வாலா மகுடத்துடன் மேல் நோக்கிப் நீட்டிப் படுத்தபடி காட்சி அளிக்கிறாள் அன்னை. இவளைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகள் தீரும்.
இங்கு தீமிதித் திருவிழா மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் இருபத்தி நாலு கி.மீ தொலைவில், ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், மிளகாய் அரைத்துப் பூசும் நேர்த்திக்கடன் மிகப் பிரசித்தி பெற்றது.
தாங்க முடியாத துன்பம்,  நம்பிக்கைத் துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசினால் திருடு போன பொருட்கள், கிடைக்கிறது. துரோகம் செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறாள். அம்மனுக்கு இங்கு வந்து பொங்கல் இடுகிறார்கள்.
இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதமாகப் பெண்களுக்கு தரப்படுகிறது. பெண்கள் இதை உண்டு, கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், தீவினைகள் அகன்று. குழந்தைப் பேறு கிடைக்கிறது. 
யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என்றும், சங்க இலக்கியத்தில் உம்பற்காடு என்றும் குறிக்கப் படுகிறது. இராமாயணத்தில் சீதையை மீட்கச் செல்லும் இராமர் இதன் வழியாகச் செல்கிறார். அப்போது இங்குள்ள மயானத்தில் அன்னை பராசக்தி மாசாணி அம்மன் வடிவத்தில் இருப்பதை அறிந்து மயான மண்ணைக் கொண்டு சயன உருவமாகச் செய்து வழிபட்டுச் சென்றார் என்றும் கூறுகிறார்கள்.
தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்மனுக்கு புடவை, எண்ணெய்  காப்பு சாற்றுகிறார்கள். மாங்கல்யம், தொட்டில் கட்டுதல், ஆடு, சேவல், கால்நடைகளை காணிக்கையாகச்,செலுத்தி, அங்கப்பிரதட்சிணம் செய்கிறார்கள். முடி காணிக்கை செலுத்தி, குண்டமும் இறங்குகிறார்கள். 
மாசாணி அம்மனை பல்வேறு பாடல்கள் மூலம் தொழுகிறார்கள். நான் செய்த பாக்கியம் அல்லவா, உன் அருள் கிடைத்தது' என்று உருகுகிறது ஒரு அம்பிகை பக்தரின் பாடல். நமக்கு நீதி, நியாயம் கிடைக்க, அம்மனின் நூற்று எட்டு போற்றிகளைக் கூறி வழி படுகிறார்கள்.
அன்பின் உருவே, அகிலம் ஆள்பவளே, அக்கினி ரூபமே, ஆணைமலைத் தெய்வமே, என்று அவளை பலவாறு துதிக்கிறார்கள் பக்தர்கள். அன்னை ஆனந்தத்தை அருளுகிறாள். ஆதியும், அந்தமும் அவளாகவே இருக்கிறாள். அவளைத் துதித்தே எந்தக் காரியத்தையும் துவங்குகிறார்கள் இப்பகுதி மக்கள். நம் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானம் அருளும் தேவி அவள். 
அன்னையை நம்பி அவள் பாதார விந்தத்தில் சரணடைந்து விட்டால், அவளோடு நம்மை ஐக்கியமாக்கி விடுவாள். அவளிடம் நம் பிரார்த்தனை அன்னையே நீ எப்போதும் என்னுடன் துணையாய் இரு என்று கேட்பதே.  
தீயவர்களை நீக்கி, நம்மைச் சுற்றி நல்லவர்களையும், நல்லதையும் மட்டுமே பரப்பும் சக்தி மாசாணி அம்மன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT