வெள்ளிமணி

அவன் தாள் பணிந்து!

29th Apr 2022 05:25 PM | தெ.சுமதி ராணி

ADVERTISEMENT

'செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்'

என்று ஆண்டவன் திருவடிகளே சரணம் என்று பாடிய ஆண்டாள் ஒரு  சிறுமி. தன்னை வளர்த்த பெரியாழ்வார் எதிரிலேயே ஸ்ரீரங்கனாதருடன் ஜோதியில் கலந்தவர் ஆண்டாள்.  
எப்போதும் இறைவனின் நினைவோடு வாழ்ந்து, பக்திப் பாடல்களையும் பாடி,  அவரைக் காணப் பெற்றிருக்கும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் போன்ற சிவனடியார்களே இதற்கு நல்ல உதாரணம்.
அந்த நாட்டில் ஒருமுறை 12 வருடங்கள் தொடர்ந்து மழை பொய்த்து விட்டது.  பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடியது. மனம் வருந்திய மன்னன், அமைச்சருடன் ஆலோசித்தபோது, 'முன்பொரு முறை இந்த நிலை ஏற்பட்டபோது,  ஒரு முனிவரை வரவழைக்க , அவர் காலடி நாட்டின் நிலத்தில் பட்டதும் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பின'  என்றார் அமைச்சர்.
மகிழ்ச்சியடைந்த மன்னன் ,  ஆன்றோர்களிடம் ஆலோசனைக் கேட்டார். அவர்கள் மகா ஞானி ஒருவர் பெயரைக் குறிப்பிட்டனர்.
ஞானியோ 48 நாள்கள் தொடர்ந்து யாகம் நடத்த வேண்டும் என்றும் இறுதி நாளில் நாட்டு மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
யாகமும் நடைபெற்றது.  கடைசி நாளில் வானில் சிறிதளவுக் கூட மேகம் இல்லை. மன்னர் கலங்கினார். மக்கள் முகத்தில் அவநம்பிக்கை. ஞானியின் முகத்தில் கவலை.
திடீரென சில்லென்ற காற்று வீசியது.  அனைவரும் அந்தத் திசையையே நோக்க , தூரத்தில் சிறுவன் ஒருவன் கையில் குடையுடன் ஓடிவந்து,  தனது நண்பர்களுடன் நின்றார்.
' டேய், எங்கேடா போனாய் ?  நீ எங்கே திடீரென்று காணாமல் போய்விட்டாய்' என்றான் மற்றொரு சிறுவன்.
' உங்களுடன்தான் கிளம்பி வந்தேன். திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.  யாகம் முடிந்ததும் மழை வரும் அல்லவா ?   அதனால்தான் திரும்பி ஓடிப் போய் வீட்டிலிருந்து குடையை எடுத்துக் கொண்டு வந்தேன் ' என்றான் அந்தச் சிறுவன்.
அவன் சொல்லி முடிக்கவும் அதிவேக மழை கொட்டவும் சரியாக இருந்தது.
ஒரு சிறுவனின் நம்பிக்கையின் ஆற்றல் மிக மகத்தானது. அதனால் தான் மழை பொழிந்தது. மனம் ஒன்றிய  வழிபாடு தான் முக்கியமானது. இறைவன்பால் அசையா நம்பிக்கையும், மன ஒருமைபாடும் இருந்தால் இறையருள் பெறுவது நிச்சயம். 
அழகான உதாரணங்கள் பல உண்டு.  ஸ்ரீ அனுமனும்-ஸ்ரீராமரும், சிவபெருமானும் - பூசலாரும், இப்படி பல பல மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை நிகழ்வுகள்.
இறைவனின் திருநாமத்தைச் சிந்தித்திருப்பாருக்கு துன்பமும் துயரும் நிச்சயம் நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 
' வீழ்ந்தெழலாம்  விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்தொழி  யாமால்  தொடங்கும் ஒருவர்க்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போற்றிடும் என்னும் புரிசடையோனே'
 

- திருமந்திரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT