வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் 69: மேலூர்  ஸ்ரீ திரிபுர சுந்தரி!

DIN

விசாகேந்த்ரோ பேந்த்ரைஃ சசிவிசத கர்ப்பூர சகலா 
விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலாஃ 

- செளந்தர்யா லஹரி 

வாழ்க்கை நன்றி உணர்வால் மட்டுமே நிறைந்திருக்கிறது. அன்றாடம் நாம் கண் விழிப்பதிலிருந்து, இரவு உறங்கச் செல்லும் வரை, உறக்கத்தின் போதும் நம் மனம் இந்தப் பிரபஞ்சத்திடம் நன்றி செலுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

கண் விழித்து வைகறையைப் பார்ப்பது முதல், நம் சுவாசக் காற்று, உண்ணும் உணவு, நீர், நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்வில் நிறைந்துள்ள ஆனந்தம், நம் உடல் வலிமை, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், வாழும் முறை, வாழ்க்கை நமக்கு அளித்துள்ள அற்புதமான வரங்களை நினைத்து நன்றி செலுத்த வேண்டும்.

நாம் விரும்பும் அனைத்தையும் அடைந்தே தீர வேண்டும் என்பது அம்பிகையின் சித்தம். மனதில் ஆசைகளை உண்டு செய்யும் அவளே, இதில் எது நல்லது, எது நல்லது, அல்லாதது எது என்பதை நம் அறிவின் மூலம் உணர்த்துகிறாள்.

அவளையே நினைப்பதன் மூலம், பக்தி என்ற பிடியை விடாமல் இருப்பதன் மூலமே அவளை நாம் நினைக்கிறோம். நல்ல எண்ணங்கள், செயல்கள், பண்புகள், குணங்கள் என்று அளித்துள்ள அம்பிகைக்கு நன்றியுடன் இருப்பது மிகவும் அவசியம். 

பக்தி செலுத்துவதன்  மூலம், நாம் அம்பிகைக்கு நன்றியை ஒவ்வொரு கணமும் செலுத்திக் கொண்டே இருக்கிறோம். அந்த நன்றி உணர்வில் மகிழ்ந்து மேலும், மேலும் நன்றி சொல்லும் விஷயங்களை நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறாள்.

இந்தப் பிரபஞ்சம் முழுக்கப் பரவி இருக்கும் அம்பிகையின் சக்தியை ஈர்க்கும் இடங்களாகக் கோயில்கள் திகழ்கின்றன. அது முழுதாக அவளின் வீர்யத்தை ஈர்த்து நமக்கு அளிக்கிறது. எல்லாக் கோயில்களும் அம்பிகையின் சக்தி மையங்கள் என்றாலும், அவற்றில் ஒரு சில மட்டும் அதன் அம்பிகையின் அபாரமான சக்தியால் சிறப்பானதாகத் திகழ்கிறது.
இச்சா சக்தியாக திருவுடையம்மன் அருள் புரியும் தலம் மேலூர் அம்பிகையின் சக்தியால் புகழ் பெற்று விளங்குகிறது. அன்னை திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப் படுகிறாள். ஆலயத்தில் நுழைந்ததும், வலது புறத்தில் தெற்கு நோக்கி அம்பாளின் சந்நிதி அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் பாசாங்குசமும், கீழிரு கரங்களில் அபயவரத முத்திரை காட்டி ஜொலிக்கும் அன்னையின் கண்களில் கருணை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

என்னை நாடி நீ வந்து விட்டாய். உன்னைக் காப்பது என் கடமை என்று சொல்லாமல் சொல்கிறது அவளின் கண்கள். ஆனந்தம் அள்ளி வழங்கும் அருள் நிறைந்த புன்னகை, நன்மைகளை எல்லாம் அள்ளித் தரும் அருளாட்சி என்று அரசு புரியும் இவளை மங்களநாயகி என்றும் அழைக்கிறார்கள். 
அம்பாளின் திருமுன் சிம்மமும், பலி பீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. அம்பாளின் சந்நிதிக்கும், கோடி மரத்துக்கும் இடையில் உள்ள மண்டபம் மிளகு மாற்றியான் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. 

ஒருமுறை மிளகு வியாபாரி மாட்டு வண்டியில் மிளகாய் ஏற்றிக் கொண்டு இந்தக் கோயில் அருகே வந்தார். அப்போது மன்னர்கள் காலத்தில் மிளகுக்கு வரி செலுத்த வேண்டும். எனவே வியாபாரி மூட்டையில் உள்ளது பயிறு என்று கூறினார். அன்னையின் தீவிர பக்தரான அதிகாரி மூட்டையைச் சோதனையிட்ட போது அதற்குள் பயிறு இருந்தது. வியாபாரி தான் சொன்ன பொய்யை நினைத்து, மனம் வருந்திக் கதறி அழுதார். தன் தவறுக்குப் பிராயசித்தம் வேண்டி இந்த ஆலயத்திற்கு பதினாறு கால் மண்டபம் கட்டிக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. அம்பிகையின் உருவம் உருவானதற்கும் ஒரு கதை கூறப்படுகிறது.

பாண்டிய மன்னன், ஒரு சிற்பியிடம் அம்மனின் உருவத்தை வடிக்கச் சொல்கிறான். சிற்பியும் அதற்கான கல்லைக் கண்டுபிடித்து மலையிலிருந்து நகர்த்தி வரும்போது கல் இடறி மலையிலிருந்து விழுந்து மூன்று பகுதிகளாக உடைந்து விடுகிறது.

சிற்பி பயந்து போகிறார். அப்போது பராசக்தி அசரீரியாக, அந்த மூன்று கல்லிலும் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று மூன்று அம்மன்களை உருவாக்கச் சொல்கிறார். சிற்பியும் அவ்விதமாகவே செய்ய, அதில் இச்சாசக்தியே திருவுடையம்மன். ஞானசக்தியாக வடிவுடையம்மன், கிரியாசக்தியாக கொடியிடை அம்மனைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். இந்த மூன்று சக்திகளையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகச் சிறப்பு.

ஒருமுறை கயிலாயத்தில் ஈசன் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, அன்னை பார்வதி விளையாட்டாக அவர் கண்ணை பொத்த உலகமே இருளில் மூழ்கியது. முத்தொழிலும் முடங்கியது. கோபம் கொண்ட ஐய்யன், உன் சக்தி மூன்றாகப் பிரிந்து, பூலோகத்தில் முடங்கட்டும் என்று சாபம் அளிக்கிறார். அன்னை மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, நீ மூன்று சக்தியாக இருந்தாலும், பெüர்ணமி அன்று என்னை நினைத்து நீ தவம் செய்தால் அந்தச் சக்திகள் அன்று ஒன்றாகும். நான் திருமணங்கீஸ்வரராக வந்து உன்னை ஆட் கொள்வேன் என்கிறார். அதன்படி அம்பிகை தவம் இருந்து ஈசனை அடைகிறாள்.

எனவே இங்கு அம்மனை வேண்டி வழிபட்டால், திருமணத் தடைகள் அகலும், சகல நன்மைகளும் அளிப்பாள் என்கிறார்கள் பக்தர்கள். 
திருவுடையம்மனை தரிசித்து, குங்கும அர்ச்சனை செய்து, மஞ்சள் காப்பிட்டு, ஆடை அலங்காரம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். பெüர்ணமி அன்று திருவுடையம்மனைக் காலையிலும், வடிவுடையம்மனை மதியமும், கொடியிடையம்மனை மாலை வேளையிலும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

முன்பு இவ்விடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அருகில் கிராமத்தில் இருந்து நிறைய மாடுகள் அங்கு மேய்ச்சலுக்கு வரும். அதில் ஒரு மாடு சுகந்த வனம் என்ற பகுதிக்குச் செல்லும் பசு, அங்குள்ள சரக்கொன்றை மரப் பகுதியில் அருகே இருந்த புற்றுப் பகுதியில் பாலைச் சொரிந்து வந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட நாகம் ஒன்று அந்தப் பாலைக் குடித்தது.

இதைத் தொடர்ந்து கவனித்து வந்த உரிமையாளர் அந்தப் புதர்களை விலக்கிப் பார்க்க, இறைவன் அங்கு சுயம்புவாக காட்சியளித்தார். நதிக்கு ஊர்மக்கள் அங்கு ஓர் ஆலயம் அமைத்தனர். சுகந்த வனத்தில் காட்சி அளித்ததால் இறைவன் சுகந்தீச்வரர் என்றும், கொன்றை மலர்கள் சிவலிங்கம் மீது விழுந்து நறுமணம் வீசியதால் திருமணங்கீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன், இந்த ஆலயத்தின் பெருமை அறிந்து இங்கு சில நாட்கள் தங்கி பூஜை செய்து வந்தான். சக்தி இல்லாமல் சிவன் மட்டும் இருப்பதை அறிந்து, அம்பிகையின் சிலையை உருவாக்கச் சொல்லி அம்பிகையை பிரதிஷ்டை செய்கிறான்.

அம்பிகையின்  கருவறைக்கு வெளியே, மேற்கில் புற்று உள்ளது. அதில் உள்ள நாகத்திற்கு இன்றளவும், பால் வைக்கப்படுகிறது. அதை ஒட்டி அர்த்த மண்டபம் உள்ளது. அம்பிகையைப் பார்த்தால் மெய்மறந்து போகிறோம். அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எந்த அணிகள், ஆபரண, ஜொலி, ஜொலிப்பும் இல்லை என்றாலும் அவள் தன் கருணை வழியும் கண்கள் மூலம் நம்மை ஆட் கொள்கிறாள். அம்பிகையின் சந்நிதியில் பெண் பக்தர்கள் லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறார்கள். இதனால் தங்களுக்கு அளவற்ற நன்மை கிடைப்பதாக அவர்களின் நம்பிக்கை.

நம், இரு வினைகளையும் தீர்த்து தன் பாதார விந்தங்களில் சரணடைய வைப்பதே அவளின் சிறப்பு.
அசுரர்களின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காக்கவே அம்பிகை குமாரஸ்வாமியை அளித்து தன் சக்தி ஆயுதத்தையும் தந்து வெற்றி பெற வைக்கிறாள்.அம்பிகையின் அருள் ஒன்றினாலேயே இந்த உலகில் எவரும் தங்கள் முயற்சியில் வெற்றி அடைகிறார்கள் என்று கூறுகிறார் சங்கரர்.

கடாக்ஷ கிங்கரி பூத கமலாகோடி சேவிதா என்றும்,  "தாம்பூல பூரிதமுகீ' என்றும் துதிக்கிறது லலிதா சஹஸ்ரநாமம். ஆதித்தன், குபேரன், அமரர்கோன், பிரமன், பொதியமுனி, கந்தன், கணபதி, காமன் முதல் எண்ணற்ற புண்ணியர் தேவியை பூஜித்தே சாதித்தனர் என்கிறார் அபிராமி பட்டர். அவளை மனதில் நினைத்தாலே போதும் தன் கருணை மழையை அள்ளி வழங்குவாள் அம்பிகை. கை கூப்புவது மட்டுமே நம் வேலை. 

திரிபுர சுந்தரியாக விளங்கும் திருவுடையம்மன் முழு மனதாக சரணடைந்து, அவள் அருளால் சகல செüபாக்கியங்களைப் பெற்று அவளின் பரிபூரண கடாக்ஷத்தை அடைகிறார்கள் பக்தர்கள். 

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT