வெள்ளிமணி

வேண்டுவதை அருள்பவர்!

24th Sep 2021 06:07 PM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் ஏற்றமுடைத்து, வேதத்திலும், உபநிஷத்திலும், இதிகாச புராணங்களிலும் உயர்த்திக் கூறப்பட்டுள்ளது ஸ்ரீ நரசிம்ம அவதாரமேயாகும். கிருதயுகத்தில் பாலன் பிரகலாதனைக் காக்க நொடிப் பொழுதில் நடந்து முடிந்த நரசிம்ம அவதாரத்தை, தாங்களும் கண்டு களிக்க எண்ணங்கொண்டு முனிவர்களும், ரிஷிகளும், தவசிரேஷ்டர்களும், கடுந்தவம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் இந்த அவதாரக் கோலத்தைத் தரிசித்து மகிழ்ந்ததோடு அல்லாமல், பாமர மக்களாகிய நமக்கும் அருள்புரியுமாறு நரசிம்மரிடம் விண்ணப்பித்தனர். 

அவ்வகையில் எம்பெருமான் அர்ச்சாவதார திருமேனிகொண்டு ஸ்ரீ நரசிம்மனாய் கோயில் கொண்டு அருள்புரியும் திருத்தலங்கள் பல இடங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் உள்ள "கீழப்பாவூர்' திருத்தலம். 

தல வரலாறு:  தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோயில். இக்கோயிலின் சிறப்பு, கிழக்குப் பகுதியில் ஸ்ரீநிவாசப் பெருமாளும், மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மரும் தனிச் சந்நிதி கொண்டு அருள்வதாகும். கற்றளியாக சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இவ்வாலயம். 

ADVERTISEMENT

நரசிம்மர் எழுந்தருளிய தலம்: பிரகலாதனின் தாத்தா காஸ்யப மகரிஷி சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம ரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி, தவம் இருந்தார். அவருடன் வருணன், சுகோஷன் போன்ற முனிவர்களும் தவமிருந்தனர். 

அப்போது தெய்வ அசரீரியின்படி, பொதிகை மலை மணிமுத்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து வடக்கே சென்று சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடர்ந்தனர். 

ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாக இரண்ய சம்ஹார கோலத்தில் 16 திருக்கரங்களுடன் அவர்களுக்கு காட்சியளித்தார். ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களுக்கு அருள்புரிய, அதே கோலத்திலேயே அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டார். 

ஸ்ரீநிவாசர் கோயில் கொண்ட நிகழ்வு: அதன் எதிரொலியாக, தினமும் அந்தி நேரத்தில் சிங்க கர்ஜனை ஒலித்துக் கொண்டே இருந்தது. வனப்பகுதியாக இருக்கவே இதனால் அஞ்சிய மக்கள் நரசிம்மரிடமே உபாயம் வேண்டி வழிபட்டனர். 

அவர்களுக்கு அசரீரியாக அருளியபடி, ஸ்ரீநிவாசனாக, போகஸ்தான மூர்த்தியாக இங்கு ஸ்ரீ தேவி பூதேவியுடன் அலமேலு பத்மாவதி என்ற பெயருடைய உபயநாச்சிமார்களுடன் எழுந்தருளி மக்களைக் காத்து வருவதாக ஐதீகம்.

புஷ்கரணியின் புனிதம்: இங்கு நரசிம்மர் சந்நிதி முன்பாக அவரது அருட்பார்வையில் அவரது உக்கிரகத்தை தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. "கங்கா - நர்மதா - ஸ்ரீ நரசிம்மப் புஷ்கரணி' எனச் சிறப்பித்து அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டால் மனச்சாந்தி கிட்டும் என்று சொல்லப்படுகிறது. 

வரலாற்றுச் சிறப்பு: மன்னர்கள் காலத்தில் இவ்வூர் "க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், பெருமாளுக்கு "முனை எதிர் மோகர் விண்ணகர்' என்ற பெயருண்டு என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் படைத்தலைமை இடமாக விளங்கிய ஊர். விக்கிரம பாண்டிய மன்னன் இக்கோயிலுக்கு நிலங்களை வழங்கிய செய்தியும் உள்ளது. 

புரட்டாசி விசேஷம்: இவ்வாலயத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் இரண்டு பெருமாள் சந்நிதிகளிலும் சிறப்புத் திருமஞ்சனமும், சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

திருமலை வேங்கடவனின் சாந்நித்யமும், அஹோபிலம் ஸ்ரீ நரசிம்மரின் சாந்நித்யமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றுள்ள இவ்வாலயத்திற்கு நாமும் ஒரு முறை சென்று வருவோம்.

தொடர்புக்கு: 94423  30643.

Tags : vellimani what you wanted
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT