வெள்ளிமணி

அன்னைக்கு திதி கொடுக்கும் அபூர்வ திருத்தலம்!

எஸ். எஸ். சீதாராமன்

"சிரத்தையோடு நம் முன்னோர்களை நினைவு கூரும் நாளை சிராத்தம்' என வழிபடுகிறோம். மகரிஷி யாக்ஞவல்கியர் இதனை எப்படி செய்வது என்று வழிவகுத்துத் தந்துள்ளார். 

தர்ம சாஸ்திரத்தில் "சிராத்த பிரகரணம்' என்ற ஒன்றுள்ளது. அதில் சிராத்தத்தைப்பற்றிக் கூறும்போது ""தம் முன்னோர்களுக்கு சிராத்தம் (திதி) செய்வதைக் காட்டிலும் மனிதனுக்கு நன்மையைக் கொடுக்கக்கூடியது வேறு ஒன்றுமில்லை'' என்று குறிப்பிடுகிறது.

ஆகையால் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் நன்மை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள்; நமக்கு விதிக்கப்பட்டுள்ள பித்ரு கடன்களைத் தவறாமல் ஆற்றவேண்டும்.

"கஜச்சாயை யோகம்' என்பது புரட்டாசி மாதத்து கிருஷ்ண பக்ஷத்தில் வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மஹாவிஷ்ணுவிற்கு உகந்த மாதமான புரட்டாசியில் மஹாளய அமாவாசை வருவதால் அன்று தர்ப்பணமாவது கட்டாயம் செய்யவேண்டும். 

இதுவே "பித்ரு பக்ஷம்', "மஹாளய பக்ஷம்' என அழைக்கப்படுகிறது. "மனுஸ்ம்ருதி', "தைத்திரிய பிராமணம்' ஆகிய வேத நூல்களில் புரட்டாசி மாதத்து கிருஷ்ண பக்ஷத்தில் வருகிற மக நட்சத்திரத்தில், பித்ருக்களை அழைக்கும் விதி கூறப்பட்டுள்ளது. 

இந்த குறிப்பிட்ட நாட்களில் சிராத்தம் செய்தால் பலமுறை சிராத்தம் செய்த பலன் கிடைக்கும். "மறந்ததை மஹாளயத்தில் செய்!' என்று சனாதன தர்மம் கூறுகிறது. 

நம் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுக்கு எப்படி திதி கொடுக்கிறோமோ, அதுபோல் தாய் மற்றும்  தாய்வழி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கென்றே ஒரு தலம் உள்ளது. அனைவராலும் அறியப்படவேண்டிய இத்தலத்தின் மாட்சிமையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்!

தாயாருக்காக பிண்டமிட ஒரு தலம் குஜராத் மாநிலம், சித்பூர் என்ற ஊரில் "மாத்ரு கயா' என்ற பெயரில் உள்ளது. இந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் அம்பாஜியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கங்கை மற்றும் சரஸ்வதி நதிகள் இங்கு சங்கமிப்பதாக இவ்வூர் தலவரலாறு கூறுகிறது. 

இங்கு "பிந்து சரோவர்' என்ற அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய படிக்கட்டுகள் நிறைந்த திருக்குளமும், அதன் அருகே "பிந்து மாதவர்' திருக்கோயிலும், பெரியதோர் கோசாலையும் உள்ளது. 

ரிக் வேதத்தில் இவ்வூர் "தாசு' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு "தத்யாங்கா' என்ற மகரிஷி, உடலை வருத்திக் கொண்டு, தன் ஒவ்வொரு எலும்பையும் இந்திரனுக்கு யாகத்தில் இட்டதால், அவனே நேரில் வந்து மகரிஷிக்கு அருளியதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோன்று, மகா தபஸ்வியான ஸ்ரீகபில்தேவ் என்பவர் இறையனாரை வேண்டி, தன் தாயார் மோக்ஷம் அடைய சிராத்தம் செய்ததாகவும், தந்தையின் சொல்படி, தாயின் தலையைக் கொய்ததால் பெரும் துயரமுற்ற பரசுராமன், தன் தாயாருக்கு இங்கு வந்து பிண்டம் சமர்ப்பித்து அவரை மோக்ஷமடையச் செய்ததாகவும் இத்தல வரலாறு கூறுகிறது.

அதைப்பின்பற்றி, தாயாருக்கு மட்டும் "மாத்ரு கயா' என்றழைக்கப்படும் சித்பூரில் திதி கொடுப்பதை அனைவரும் வழக்கமாகச் செய்து வருகின்றனர். மாதாவிற்குப் பின் பிதாவையும், குருவையும் கூறிச் சிராத்தம் செய்து, கடைசியில் தெய்வத்தை தரிசிக்கச் செல்கிறார்கள். 

"அன்னைக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது' என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக, இவ்வூரில் தாயாருக்கு மட்டுமே 24 பிண்டங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. 
இதனை நான்காய்ப் பிரித்து "பால்ய', "குமார', "யவன', "விருத்த' - என ஒவ்வொன்றிற்கும் 6 பிண்டங்களாய் வைத்து, ஒரு மகனானவன் தன் தாய்க்கு சமர்ப்பிக்கிறான் என்று பொருள்படும். 

இந்த ஆண்டு "மஹாளய பக்ஷம்' செப். 21 -ஆம் தேதி தொடங்கி, அக். 6 -ஆம் தேதி மஹாளய அமாவாசையுடன் முடிவடைகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்களுக்கு "பிதுர் யக்ஞம்' என்று அழைக்கப்படும் நாம் செய்ய வேண்டிய பித்ரு கடமையை அருகிலுள்ள புனித நீர்நிலைகளில் செய்வோம்; மனத்துயர் நீங்கி நிம்மதியுற்று, அனைத்துப் பேற்றினையும் பெறுவோம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT