வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் - 41: திருவாஞ்சியம்

ஜி.ஏ. பிரபா

"தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ- மஹாதாண்டவ- நடம்'

-செளந்தர்ய லஹரி

பிரளய காலத்தில் உலகமே அழிந்தபோது, அதில் தப்பிப் பிழைத்த திருத்தலங்களைப் பார்வையிட, இறைவன் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அச்சமயம், ஒவ்வொரு திருத்தலங்களையும் தேவியிடம் காட்டி, அதன் பெருமைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.

திருவாஞ்சியம் வந்தபோது ""இது காசியை விட பன்மடங்கு புண்ணியமான தலம். கங்கையை விடப் புனிதமான இங்குள்ள குப்த கங்கையில் நீராடிவிட்டு, இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தால் கைலாயத்தில் ஈசனின் சிவகணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்!'' என்கிறார்.

அப்பொழுது, திருவாஞ்சியத்தின் அழகில் மயங்கிய அம்பிகை, ஞான சக்தியாக இங்கேயே தங்க விரும்பினாள். இறைவனும் சுயம்புவாக மாறி, இங்கேயே எழுந்தருளினார். நம் மரண பயத்தை நீக்கி, அம்பிகை தன் பாத தரிசனம் தரும் திருத்தலமே திருவாஞ்சியம்.

இங்கு "ஸ்ரீவாஞ்சிநாதர்' என்ற பெயருடன் இறைவனும், "மங்களாம்பிகை' என்ற பெயரில் அம்பிகையும் அருளாட்சி புரிகிறார்கள். அம்பிகையை "வாழ வந்த நாயகி' என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கிறார்கள்.

வைகுண்டத்தில் மகாலட்சுமி, மகாவிஷ்ணுவுடன் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாமல் வாடிய மகாவிஷ்ணு, பூமிக்கு வந்து சந்தன மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்தார். அதில் மகிழ்ந்த ஈசன், திருமகளை மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார்.

திருமகளுடன், விஷ்ணு வாஞ்சையுடன் இணைந்த திருத்தலம் என்பதால் "திருவாஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது கோயில். பக்தர்கள் இங்குள்ள குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள விநாயகரை வணங்கி விட்டு, பின் தனிச் சந்நிதியில் உள்ள எம்தர்ம ராஜனை வணங்கிய பின்னரே, ஈசனையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.

இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் பாலாபிஷேகம் செய்தால் திருமணத் தடை விலகும் என்கிறார்கள் பலன் பெற்றவர்கள்.

காசியில் வந்து தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களை ஏற்கும் கங்கை, இங்கு வந்து தன் பாவங்களைப் போக்கிக் கொள்ள ஈசனால் உண்டாக்கப்பட்டதே குப்த கங்கை. ஆயிரம் கலைகள் கொண்டு காசியில் வாசம் செய்யும் கங்கை, தன் ஒரு கலையை அங்கு விட்டு விட்டு 999 கலைகளுடன் இங்குள்ள குப்த கங்கையில் ரகசியமாக வசிப்பதாக ஐதீகம்.

கோயில், கோபுரம், குளம் என்று எல்லையற்ற அழகுடன், மனதைக் கொள்ளை கொள்கிறது திருவாஞ்சியம்.

கார்த்திகை மாதத்தில் வந்து இத்தலத்து அம்பிகையைப் பூஜித்தால், அவள் நம் பயங்களைப் போக்கி நல் வாழ்வு தருவாள் என்பது நம்பிக்கை. கிரகண நேரத்தில் எல்லாக் கோயில்களும் அடைக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு மட்டும் கோயில் திறக்கப் பட்டு, ஈசனுக்கும், அம்பிகைக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.

அம்பிகை நின்ற கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறாள். அபயக் கரங்களுடன், புன்முறுவல் திகழ "நான் இருக்கிறேன்' என்று கண்கள் வழியே கருணை சிந்தக் கூறுகிறாள்.

தெற்கு நோக்கிய சந்நிதியில், யமன் நான்கு திருக்கரங்களுடன், இடக்காலை மடித்து, வலக்காலை தொங்க விட்டு அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷம் நீங்க வழிபட வேண்டிய திருத்தலம் இது. இக்கோயிலில் பிள்ளையாருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றுவது விசேஷமானது. பிரம்மாண்டமான வடிவில் மகிஷாசுரமர்த்தனியே துர்க்கையின் சொரூபமாக இங்கிருக்கிறாள்.

இத்தலத்தில், அம்பிகையையும், ஈசனையும் தரிசித்து, பிரார்த்தனை செய்தால் தம்பதிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தங்கள் குறை நீங்கப் பெற்றவர்கள் அம்பிகை, ஈசனுக்கு வேஷ்டி, புடவை, மங்கலப் பொருட்களை அளித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

காசியைப் போலவே இங்கும் காசிக் கயிறு அளிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் குப்த கங்கையில் தீர்த்தவாரி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வாழ வந்த நாயகி தன்னை நம்பி வந்தவர்களை மட்டுமில்லாமல், ஆழ்மனதில் தன்னையே நினைத்திருக்கும் பக்தர்களையும் தன்னிடம் வரவழைக்கிறாள்.

எமபயம் என்றில்லாமல் எந்த பயம் இருந்தாலும் அதை நீக்கி, தைரியம், துணிச்சல், "அம்பிகை இருக்கிறாள்' என்ற நம்பிக்கையை அருளும் தலம் திருவாஞ்சியம்.

"ஓ! லோகமாதா! நான் ஈட்டிய பொருட்கள் யாவும் உன் திருவடியுடையது ஆகும். என் மற்ற அனைத்து சாதனைகளையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். எந்தச் செயலுக்காக நீ என்னைப் படைத்தாயோ, அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு எப்போதும் காப்பேன்' என்கிறது தேவி மகாத்மியம்.

"அம்பிகே! உன்னை நினைத்தாலே போதும், வாழ்வின் கவலைகள், மட்டுமில்லாமல், இம்மை, மறுமை பற்றிய பயங்களையும் போக்குகிறாய். உன் கடைக்கண் பார்வை ஒன்றே சகல பிணிகளையும் போக்க வல்லது' என்கிறார் ஆதிசங்கரர்.

அன்னையும், அப்பனும் இணைந்திருக்கும் திருமணக் கோலத்தை மனதில் வைத்து, எப்போதும் அவர்களை நினைத்திருந்தால், காலன் வரும் நேரம் எமபயம் போக்கி, நம்மை அம்மையும், அப்பனும் ஆட்கொள்வார்கள் என்பது உண்மை.

காரணமில்லாமல் யாரும் இந்த உலகில் வந்து பிறப்பதில்லை. நம் பிறப்பின் அர்த்தம் உணர்த்தி, நம்மையும் இந்தப் பூமியில் வளமாக வாழ்விக்க வந்தவள் அன்னை "வாழ வந்த நாயகி!'.

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுத மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT