வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 162

டாக்டா் சுதா சேஷய்யன்

வ. உ. சி. மற்றும் சிவா ஆகியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்த உணர்வுகள்தாம், ஆஷ் கொலைவரை நீண்டன. வ. உ. சி. சிறையிலிருந்து மீள்வதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்ட இச்சம்பவம் குறித்து சற்றே பின்னர் பார்க்கலாம்.

அதற்கு முன்னர், பொருநையாளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, கடலரசனோடு அவள் சங்கமமாகும் பகுதியிலிருந்து மேற்கு நோக்கி உல்லாசமாக நடை போடலாம். சின்னச் சின்ன, ஆனால், சுவாரசியமான தகவல்களை நதிப் பெண்ணாள் நல்கிக் கொண்டே வருகிறாள்: 

சாத்தான்குளம் பகுதியில் குளங்களிலிருந்தும் நீரோடைகளிலிருந்தும் தொடங்குகிறது கருமேனியாறு; கருமணியாறு என்றும் அழைக்கப்பட்ட இச்சிறு நதி, மணப்பாடு அருகே கடலில் கலக்கிறது. ஆண்டில் பெரும் பகுதி, இதன் நீர் வரத்து குறைவாகவே இருக்கும்.

கருமேனியாற்றுச் சங்கமப் பகுதியின் தென்கரையில் இருக்கும் மணப்பாடு என்னும் ஊர், புனித பிரான்சிஸ் சேவியர் வருகை புரிந்த ஊர்களில் ஒன்றாகும். 

கருமேனியாற்றின் சங்கம வடகரையில் இருக்கும் குலசேகரப்பட்டினம், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள்வரை, முக்கியமான துறைமுக ஊராகத் திகழ்ந்தது. தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து வந்த கப்பல்களுக்கு, குலசேகரப்பட்டினமே, முதல் கிழக்குத் துறைமுகம். மேற்குக் கரைக்கு அனுப்பப்படவேண்டிய பொருட்களும் சரக்குகளும், இங்கே சேகரிக்கப்பட்டுப் பின்னர் கப்பல்கள் வாயிலாக மேற்குக் கரைக்கு அனுப்பப்படும். பிற நாடுகளுடனான வணிகப் போக்குவரத்து அதிகப்படத் தொடங்கியவுடன், குலசேகரப்பட்டினத்தின் முக்கியத்துவம் குறைந்து, தூத்துக்குடி முக்கியத்துவம் பெற்றது. 

திருச்செந்தூருக்கு மேற்காக இருக்கும் மெய்ஞானபுரம், துணிகளில் செய்யப்படும் நூல்தையல் (எம்ப்ராய்டரி) வேலைப்பாடுகளுக்குப் பெயர் போனது. இந்தப் புகழ், ஐரோப்பிய நாடுகள்வரை பரவியிருந்தது. 

நாசரேத் என்னும் ஊர், 1803-இல், தஞ்சாவூர் கிறித்தவர்களுக்கான குடியிருப்பாக, ஜே.சி.கோலாஃப் என்னும் பாதிரியாரால் வாங்கப்பட்டது. "முதலூர்' என்பதுதான் இக்குடியிருப்பு கிராமத்திற்கு வழங்கப்பட்ட முதல் பெயர். சற்றே தெற்கில் இருக்கும் பகுதிக்கு "முதலூர்' என்னும் பெயர் தொடர (சில சமயங்களில், தெற்கு முதலூர்), வடக்கில் இருக்கும் கிராமப் பகுதிக்கு "நாசரேத்' என்னும் பெயர் வழங்கப்படலானது. 

திருச்செந்தூரிலிருந்து திருவனந்தபுரம் வரையான பாதையாகத் திகழ்ந்த, பழையகால "மங்கம்மாள் சாலை',  சாத்தான்குளம் வழியாகச் சென்றது. 

காயல் பட்டினத்தின் பழைய பெயர் "சோனகர் பட்டினம்' என்பதாகும். 

நம்மாழ்வாரின் மேன்மையால் "ஆழ்வார் திருநகரி' என்றழைக்கப்படும் திருக்குருகூருக்கு, ஒருகாலத்தில் "ஸ்ரீநகரி' என்னும் பெயர் வழங்கியது; இதுவே, தமிழில் "திருநகரி' என்றானது. ஆரம்பக்கால பிரிட்டிஷ் பதிவுகளில், "திருநகரி' என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, "ஆழ்வார் டின்னவேலி' என்றே இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. 

டச் வணிகர்கள் இப்பகுதிகளில் குடியேறியபோது, அவர்களின் முக்கிய வணிக மையமாக ஆழ்வார் திருநகரி இருந்தது. 1795-இல், டச்சுக்காரர்கள் இவ்வூரை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். கேப்டன் ஹாமில்டன் என்றொரு டச்சுக்காரர் வாழ்ந்துள்ளார். இவரின் பெயர் (என்ன காரணம் என்று தெரியவில்லை) ஒருசில கடைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. "ஹாமில்டன்' என்னும் பெயர் சிதைந்து, இக்கடைகளின் பெயர் "அம்பால்டன் சாவடி' ஆகிவிட்டது. 

போர்த்துகீசியர்கள், இப்பகுதிகளுக்கு வந்தபோது, முதன்முதலில் அவர்கள் குடியேறிய இடம் புன்னைக்காயல் ஆகும். பொருநையாளின் முகத்துவாரத்தில் மண் வண்டல் படியப் படிய, மெல்ல மெல்ல, இப்போர்த்துகீசியர்கள் தூத்துக்குடிக்கு நகர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. 

பண்டைய கிரேக்கர்கள், மன்னார் வளைகுடாவை, "கொல்கை' (கொற்கை) வளைகுடா என்றே அழைத்துள்ளனர். 

காயல் என்னும் ஊரை (இப்போதைய பழைய காயல்), மார்கோ போலோ "கெய்ல்' என்றழைக்க, வேறு சில வரலாற்றாசிரியர்கள் "கவல்', "கஹிலா', "கேய்ல்' என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். 

பாளையங்கோட்டையில் வணிகம் செய்துகொண்டிருந்த போர்த்துகீசிய வணிகரான சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால், "சாயர்புரம்' என்னும் ஊர் வழங்கப்படுகிறது. 1843-இல், ஜி.யு.போப் இங்கே தேவாலயம் ஒன்றை எழுப்பினார். 

ஊமைத்துரை மற்றும் அவருடனிருந்த பிற போராளிகளை எதிர்த்துப் போரிட, ஸ்ரீவைகுண்டம் திருக்கோயிலில் படை ஒன்றை பிரிட்டிஷார் நிறுத்தியிருந்தனர். பாளையப்பாகப் போராளிகளோடு போரிடுவதில், "ஸ்ரீவைகுண்டம் பகோடா' (ஸ்த்ரீ வைகுண்டம் என்றெழுதுகிறார்) எதிர்ப்பார்ப்புக்கு மேலாகவே பங்களித்ததாக கர்னல் வெல்ஷ் பதிவிடுகிறார். 

தூத்துக்குடி என்னும் பெயர் "தூர்த்து+குடி' என்பதாக உருவாகியிருக்கக்கூடும். நீர் வற்றிப் போன பள்ளங்கள் நிரப்பப்பட்டு (தூர்க்கப்பட்டு), குடியிருப்புகள் உருவாயினவாம். சிறிய மரக்கலங்களை நகர்த்துவதற்கும் நிறுத்துவதற்கும், புன்னைக் காயலைக் காட்டிலும் இப்பகுதி வசதியாக இருந்ததால், போர்த்துகீசியர்கள் இங்குக் குடிபெயர்ந்தனர். 

1543 வாக்கில், போர்த்துகீசிய ஆளுநரின் தலைமையிடமாகவும் இவ்வூர் மாறியது. 1658 வாக்கில் தூத்துக்குடியைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள், 1784 வரை இவ்வூரைத் தங்கள் வசம் வைத்திருந்தனர். 

19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷாருக்கும் டச்சுக்காரர்களும் ஏற்பட்ட மோதல் காரணமாக, பலவிதமான அரசியல் பாதிப்புகளைத் தூத்துக்குடி சந்தித்தது. 

பாஞ்சாலக்குறிச்சியைக் "கலகக்காரர்களின் ஜிப்ரால்டர்' என்று பிரிட்டிஷார் அழைத்தனர். 

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளின் கருமணல்தான், பொருநைக் கரையின் "கரிசல் காடு'என்னும் பெயருக்குக் காரணம். 

எட்டையபுரம் என்பதற்கும் எட்டப்பன் என்பதற்குமான பெயர்க் காரணத்தை, உள்ளூர்க் கதைகளின் வழியாக ஹெச்.ஆர்.பேட் பதிவுசெய்கிறார். விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சியின்போது, சந்திரகிரியிலிருந்து வந்த குமாரமுத்து எட்டப்ப நாயக்கர், மதுரையில் அடைக்கலம் நாடி, பின்னர் தென்பகுதி கிராமங்களுக்குத் தலைவராக்கப்பட்டார். சில காலம் கழித்து, இவருடைய வழித்தோன்றல்கள், எட்டையபுரப் பகுதியைத் தங்களின் தலைமையிடமாக ஆக்கிக் கொண்டனர். இவ்வாறு செய்யும்போது, தங்களின் மூதாதையும் தென் மண்டலம் ஏற்படுத்திக் கொடுத்தவருமான குமாரமுத்து எட்டப்பருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஊருக்கு "எட்டையபுரம்'என்று பெயர் சூட்டினராம். 

சரி, இவருக்கு ஏன் "எட்டப்பர்' என்னும் பெயர் வந்தது? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT