வெள்ளிமணி

சர்ப்ப தோஷம் விலக...

12th Sep 2021 05:30 PM | - பழங்காமூர் மோ.கணேஷ்

ADVERTISEMENT

 

அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகா பத்மன் ஆகிய எட்டு நாகராஜாக்களும், வலிமை - தலைமைப் பதவி - தீர்க்காயுள் ஆகிய வரங்களை வேண்டி, முதலில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக சிவ பூஜை செய்துள்ளனர். ஆனால், சர்ப்ப இனத்தவர்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டும் பொருட்டு, இந்த எட்டு நாக ராஜாக்களும் ஒருநாள் ஒன்றிணைந்தனர்.  

பிச்சிப்பூ மரங்கள் நிறைந்த பிச்சி வனத்தினிடையே ஆதியில் சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீ பிச்சீஸ்வரப் பெருமானை அனுதினமும் பிச்சி மலர்களால் பூஜை புரிந்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, சர்ப்பங்களின் அநேக கோடி பாபங்களையும் போக்கி, அவர்களுக்கென தனி நாக லோகத்தையும் அருளிச்செய்தார். 

அதன் நன்றிக்கடனாக இன்றும் பல நாகங்கள் இங்கு உலாவுவதைக் காணலாம். சோழர் காலத்தில், இத்தல சிவலிங்கம் புற்றால் மூடியிருந்ததாகவும், அதைப் பெயர்க்கும்போது லிங்கத்தின் முடியில் கடப்பாரை பட்டு, ரத்தம் வந்ததாகவும், பின், ஈச்சங்கீற்றுகளைக் கொண்டு இடது தலைப்பகுதியில் தைத்ததாகவும் செவிவழிச் செய்தி கூறப்படுகிறது.  இதனால் ஆதியில்  இவ்வூர் தையலூர் என்றிருந்து மருவி "தச்சூர்' ஆனதாம்.

ADVERTISEMENT

கருவறையுள் சதுர ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகிறார் ஸ்ரீ பிச்சீஸ்வரர். தினந்தோறும் அகப்பேய் சித்தர் வழிபடும் மூர்த்தி. அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன. ஆலய வலம் வருகையில், வாம பாகத்தில் தனியே ஆலயம் கொண்டு அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ பிரகந்நாயகி. தலவிருட்சம் - பிச்சி மரம். தீர்த்தம் - கார்கோடக தீர்த்தம்.

சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் துன்பப்படுபவர்கள் இங்கு வந்து சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, நீல நிறப் பட்டாடை அணிவித்து, பால் பாயசமும், அக்கார வடிசலும் படைத்து, வழிபட சிறந்த பலன்களைப் பெற்றிடலாம்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தச்சூர் பிச்சீஸ்வரர் திருத்தலம்.

Tags : vellimani serpent
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT