வெள்ளிமணி

எல்லை மீறுவதால் மனக்கசப்பு!

22nd Oct 2021 12:51 PM | ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT

 

மனிதர்கள் அவரவருக்கான எல்லையை மீறும்போதுதான் ஒருவருக்கொருவர் மீது சங்கடம் ஏற்படுகிறது. 

நட்பு, உறவினர்கள், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, அண்டை வீட்டார் என எத்தனை வகையான மனித உறவுகள் இருக்கிறதோ, அத்தனையிலும் அதற்கான எல்லை என்ன என்று பார்க்காமல், அதை மீறுவதால்தான் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு ஏற்படுகிறது.  நட்போ, சொந்தமோ எந்த உறவாக இருந்தாலும், அந்த உறவைக் காரணமாக்கி, அதிக உரிமை எடுத்துக் கொள்வதால் மனதில் விரிசல்கள் ஏற்படுகின்றன.

மூன்று விஷயங்களைத் தவிர்த்தால் நலம் பெறலாம்: 
1. பிறர் பொருளின் மீது ஆசை கொள்ளாதிருத்தல், 
2. பிறரிடம் யாசகம் பெறாமலிருத்தல், 
3. பிறர் பொருளை அவர்களின் அனுமதியின்றி உபயோகிக்காமல் இருத்தல்.
தனக்கு ஒரு பொருள் தேவையா இல்லையா என்று பார்ப்பதை விட்டு விட்டு, அடுத்தவரிடம் இருக்கும் பொருளைப் பார்த்து ஆசை கொள்வதே கஷ்டத்திற்கு வித்திடுகிறது.

ADVERTISEMENT

"ஆசை என்பது ஒருவித வறுமை; அது என்றென்றும் தீராதது!' என நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். சொந்தம் என்ற உறவு முறையை வைத்தோ, நட்பிலோ, பழக்கத்தினாலோ எதையும் யோசிக்காமல் யாசகம் கேட்பது, அவர்களுக்கிடையே உள்ள அன்பைப் பிளக்கும் என்பதை அறிவதில்லை.

பிறரிடம் யாசகம் கேட்பதைவிடத் தாழ்ந்தது எதுவுமில்லை என ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தன்னிடம் வருகிறார் என்று தெரிந்ததும், யார் தன்னிடம் உள்ள பொருள்களை மறைத்து வைக்கிறாரோ, அதை வைத்து, வருபவர் பண்பால் தோல்வி அடைந்தவர் என்று பொருள் கொள்ளலாம். அந்தளவுக்குச் சிலர் அதிகபட்ச உரிமை எடுத்துக் கொள்கின்றனர். 

இஸ்லாம் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்கவில்லை;  மாறாக, மனிதர்கள் தங்களுக்குள்ளும், ஏனைய உயிரினங்களோடும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்துள்ளது. அதைப் பேணுவதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாகும்.

ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வும் மனிதர்களும் என்னை நேசிக்கும்படியான ஒரு செயலை எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார்.  

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உலகப் பற்றற்றத் தன்மையை உண்டாக்கிக் கொள்.  அல்லாஹ் உன்மீது நேசம் கொள்வான்.  மக்களிடம் உள்ள செல்வம், பதவி போன்றவை மீது ஆசை கொள்ளாதே!  மனிதர்கள் உன்மீது நேசம் கொள்வார்கள்!' என  உபதேசித்தார்கள்.

Tags : relationship humans friends
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT