வெள்ளிமணி

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்!

8th Oct 2021 12:33 PM | இரா. இரகுநாதன்

ADVERTISEMENT


தமிழகக் கோயில்கள் வரலாற்றில் கிருஷ்ணர் வழிபாடுகள் விஜயநகர காலத்துக்குப்  பின்பே அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை,  திருக்கண்ணபுரம் ஆகியவை "பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்' என அழைக்கப்படுகின்றன.

1. கபிஸ்தலம்: கஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயிலில் பள்ளிகொண்ட திருமாலை,  "ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன், கடல் கிடக்கும் மாயன், உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு!' என்று திருமழிசையாழ்வார் கண்ணனாகவே மங்களாசாசனம் செய்கிறார். கபி என்றால் குரங்கு. இங்கு ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார் எனவே "கபிஸ்தலம்' என அழைக்கப்பட்டது. சுவாமி மலையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.  

2. திருக்கோவிலூர்: பத்ம, பிரம்மாண்ட புராணங்கள் இத்தலம் பற்றிக் கூறுகின்றன. ஆழ்வார்கள் முதன்முதலாகப் பாடிய இத்திவ்ய தேசத்தை "கிருஷ்ணன் கோயில்' என்றே வடமொழிநூல்கள் குறிக்கின்றன. 

"கோபாலன்' என்னும் சொல்லே "கோவாலன்' எனத் திரிந்து, ஊருக்கு "கோவாலனூர்' என்றாகி, பின்னர் "திருக்கோவலூர்' என்றானதாகக் கூறப்படுகிறது. "தட்சிண பினாகினி' எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. 

ADVERTISEMENT

மிருகண்டு முனிவர் தவமிருந்து, திருமாலிடம் வாமன-திருவிக்கிரம அவதாரத்தைக் காட்டியருளும்படி கேட்க, அதன்படி திருமால் காட்சியளித்து, அருள் பாலித்த திருத்தலம் இது. கள்ளக்குறிச்சியிலிருந்து 46 கி.மீ. தொலைவில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.

3. திருக்கண்ணங்குடி: திருமால் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து அருள நினைத்தார். வசிஷ்டர், இளகாத  வெண்ணையால்  கிருஷ்ண விக்கிரகம்  செய்து  மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர்,  வசிஷ்டரை சோதிக்க  குழந்தையாக வந்தார்.  வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய்க் கண்ணனை எடுத்து  வாயிலிட்டுக் கொண்டு ஓடினார். 

பதறிய வசிஷ்டர் துரத்த, கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் சென்று பதுங்கினார்.  அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனென்று அறியாமல் அவரை தாம்புக் கயிற்றால் கட்டிப்போட்டு தங்க வைத்தனர். கண்ணனை குடிகொள்ளச் செய்ததால்  இத்தலத்திற்கு "திருக்கண்ணங்குடி' என்று பெயர் வந்தது. 

மூலவர்  தாமோதர நாராயணப்பெருமாள் எனப்படும் லோகநாதப் பெருமாள். இவரை சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைப்பர். தாயார் அரவிந்தநாயகி என்னும் லோகநாயகித் தாயார். இத்திருத்தலம், நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்கும் - கீவளூருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரின் அருகே அமைந்திருக்கிறது.  

4. திருக்கண்ணமங்கை: சூத புராணிகர் இத்தலத்துச் சிறப்பை தமது சீடர்களுக்குக் கூறியதாக பத்மபுராணம் குறிப்பிடுகிறது. 

திருமால் பாற்கடலைக் கடைந்த போது இறுதியில் மஹாலட்சுமி தோன்றினாள். பாற்கடலைக் கடைந்த நிலையில்  இருந்த பெருமாளின் தோற்றம் கண்டு, மிகவும் நாணமுற்ற திருமகள், இத்தலத்திற்கு வந்து எம் பெருமாளைக் குறித்து மெளனத் தவம் இருந்தாள்.

திருமால் அவளை மணம்புரிய மனங்கொண்டு விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்தனுப்பி,  முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை  சூழ, இங்கு வந்து  எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார். மஹாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய  பாற்கடலை விட்டுப் புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் "பெரும்புறக்கடல்' என்பதே பெருமாளின் திருநாமம் ஆயிற்று. கிருஷ்ணருக்கு திருமணம் நடைபெற்றதால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்' என்பர். 

திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் திருக்கண்ணமங்கை திருத்தலம் அமைந்துள்ளது.

5. திருக்கண்ணபுரம்: 108 திவ்ய தேசங்களுள் கீழை வீடு என்பது திருக்கண்ணபுரம் ஆகும். இது கண்ணனின் கீழ்ப்புறத்து வீடாகக் கருதப்படுகிறது. இத்தலத்தினை, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். 

பெருமாள் கருவறையில், ஸ்ரீ தாமோதர கண்ணனாக  தனி சந்நிதி கொண்டிருப்பதைத் தவிர, இவ்வூர் முழுவதும் கண்ணன் தவழ்ந்து விளையாடியதால் இது "கண்ணன்புரம்' எனவும் வழங்கப்படுகிறது.  

மூலவர் கிழக்கு நோக்கிய நீலமேகப் பெருமாள் என்ற பெயரோடு நின்ற திருக்கோலம், உற்சவர் செüரிராஜப்பெருமாள்; தாயார் கண்ணபுரநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்.

"திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே எனது துயர்கள் எல்லாம் பறந்துவிட்டன!' என்று நம்மாழ்வார் விவரிக்கிறார். திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் திருக்கண்ணபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. கோயில் வாசல் வரை பேருந்துகள்  வந்து செல்கின்றன.  

எவ்விதப் பிரார்த்தனையும் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இத்தலங்களில் பெருமாளுக்கு பழம் மட்டும் வைத்து நிவேதனம் செய்தால் வேண்டியது கிடைக்கும் என பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

Tags : Temple friday perumal tamilnadu vellimani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT