வெள்ளிமணி

நம்பிக்கை  உடையோரின் கடமை!

8th Oct 2021 01:24 PM

ADVERTISEMENT

 

அந்தந்த கால மக்களுக்கு நற்போதனைகள் புரிந்து நடந்து காட்டி நல்வழிப்படுத்தவே தூதர்களை அனுப்பினான் தூயவன் 
அல்லாஹ். 

உலகில் இன்று நடைமுறையிலிருக்கும் நாற்பத்தியாறு நல்ல செயல்களை முதலில் செய்து காட்டி, இப்ராஹீம் நபி முன்மாதிரியாகத் திகழ்ந்ததை இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும், "நிச்சயமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது!' என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 60-4 ஆவது வசனம்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் "ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது!' என்று 33-21ஆவது வசனம் கூறுகிறது.
அஹ்சாப் போர் நடந்தபொழுது கலக்கம் நடுக்கம் பதற்றமடைந்த மக்களுக்குப் பொறுமையிலும் எதிரிகளோடு விழிப்புணர்வோடு நடந்து, விஞ்சுவதிலும் அஞ்சாத இறைத்தூதரிடம் முன்மாதிரி இருந்ததை இயம்புகிறது இந்த வசனம். 
முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றுவது ஒவ்வொரு நம்பிக்கை உடையோரின் கடமை என்று அல் ஹக்கீமுத் திர்மிதீ (ரஹ்) திருத்தமாய் கூறினார்கள். 

மனிதர்களுக்கு நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அல்லாமல் நாம் அனுப்பவில்லை என்று 34-28 ஆவது வசனம் அறிவிக்கிறது. இந்த வசனத்திற்கு வள்ளல் நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குப் பொது தூதராய் பூமியில் படைக்கப்பட்டார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) விளக்கம் அளிக்கிறார்கள். நூல் புகாரி 335, 438, முஸ்லிம் 905. 

அல்லாஹ் தூதரை நேர் வழிகாட்டியாக சத்திய வழியில் சகல சமயங்களிலும் மிகைத்தவராக அனுப்பினான் என்று 48-28 ஆவது வசனம் உறுதிப்படுத்துகிறது. 
"நிச்சயமாக நீர் மிக மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்' என்ற 68-4 ஆவது வசனத்திற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குணம் திருக்குர்ஆன் திருமொழிகளின் திரு உருவாக இருந்தது என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் கருணை நபி (ஸல்) அவர்களின் இயல்பாகவும் இனிய குணமாகவும்  இருந்தது. 

இன்னும் அல்லாஹ்விற்கும் வழிபடுங்கள். இந்த இரசூலுக்கும் வழிபடுங்கள் என்ற 64-12 ஆவது வசனப்படி இறைதூதர் முஹமது நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்கள் நடந்து காட்டிய வழியில் நாமும் நடக்க, நந்நபி (ஸல்) அவர்கள் பிறந்த "ரபியுல் அவ்வல் மாதம்' 08.10.2021 -இல் பிறக்கிறது; அந்த மாதத்திலும், அவர்கள் பிறந்த "மீலாதுநபி' நாளிலும் உறுதி பூணுவோம்! 

-மு.அ.அபுல் அமீன்
 

Tags : nabi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT