வெள்ளிமணி

165. பொருநை போற்றுதும்: சிறப்புகளை தாங்கி நிற்கும் ஊர்கள்

DIN

ராமாயணத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதில் எல்லா ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏதோவொரு வகையான ஆசை உண்டு. இந்த வகையில் பொருநைக்கரைக்காரர்கள் மட்டும் விலக்கா என்ன?  ஆலங்குளத்திற்கு அருகில் உள்ள ஓர் ஊர் "ஒக்கநின்றான்பொத்தை'. இங்கே ராமர் கோயில் உள்ளது.  எனவே "ராமர் மலை' என்றும் அழைப்பார்கள். ராமர் கோயிலையொட்டி, ராமாயணச் சம்பவத் தொடர்பு இங்கேயும் உண்டு. 


மாயமானை அழித்துவிட்டு ராமர் வந்து நின்றபோது, தெய்வங்களெல்லாம் ஒன்றுகூடி அவரை வரவேற்ற இடமே, "ஒக்கநின்றான் பொத்தை' (கடவுளர் ஒருமித்து நின்ற இடம்) என்பார்கள். இதற்குத் தோதாக, இன்னும் சில இடங்களும் உள்ளன.

முதன் முதலில், மானைப் பார்த்த இடம், "மாயமான் குறிச்சி'. அங்கே அது கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தது. பின்னர், மீண்டும், மானூரில்
புலப்பட்டது. ராமரின் அம்பால் தாக்கப்பட்டுக் கால் முறிந்து விழுந்த இடம், "முடவக்குறிச்சி'. முடிவில், மாயமான் அழிக்கப்பட்ட இடம், "பட்டாக்குறிச்சி'. 


சொக்கம்பட்டி என்றழைக்கப்படும் பகுதி, 17-18-ஆம் நூற்றாண்டு வரை "வடகரை' அல்லது "வடகரைப் பாளையம்' என்றழைக்கப்பட்டது. மேற்குப்பகுதிப்பாளையங்களுள், பூலித்தேவனின் நெற்கட்டுஞ்செவ்வலுக்கு அடுத்தபடியாக வலிமையோடு இருந்தது வடகரைப் பாளையம். 

இதனால், யூசுஃப்கானின் கோபத்திற்கும் உள்ளானது. நவாப் மற்றும்  கம்பெனிப்படைகள், இந்தப் பாளையத்தின் கிராமங்களை எரித்து அழித்தன. சுமார் ஏழாண்டுகளுக்கு நவாப்பின்ஆளுகையில் இருந்த பாளையம், 1767-வாக்கில் பாளையக்காரர்களால் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட
போது, "சொக்கம்பட்டி' என்னும் பெயர் மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. 
இப்போதைய பன்புளி (பண்பொழி) என்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பம்புளி அல்லது பம்புளிப் பட்டினம் என்றழைக்கப்பட்டதாம். பண்டைய கம்பெனிப் பதிவுகளில், கம்பளிப்பட்டினம் என்றும் இவ்வூரைப் பதிந்திருக்கிறார்கள். 

குளிர்ச்சிமிக்க சோலைகளுக்கு இடையில் இருப்பதால், பண்டைய தமிழர்கள் "பைம்பொழில்' என்று பெயரிட்டதாக ரா.பி.சேதுப்பிள்ளை (ஊரும் பேரும்) குறிப்பிடுகிறார். அனும நதிக்கரையிலுள்ள "கோட்டைத் திரட்டு' என்னும் இடத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கோட்டை ஒன்று கட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 

பொருநையாளின் துணை நதிகளில் "ராம நதி' ஒன்று. பழங்காலத்தில் இதற்குத் "தத்வசாரை' என்று பெயர் வழங்கப்பட்டதாம். தம்முடைய ஆட்சியில் அயோத்திக்குத் தீங்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்த தீயவன் ஒருவனை ராமர் கொல்ல நேர்ந்தது. 

அந்தப் பாவம் தீர்வதற்காக இங்கு வந்து தத்வசாரையில் நீராடி, அருள்மிகு நித்ய கல்யாணி சமேத அருள்மிகு வில்வ வனநாதரை வழிபட்டாராம். ராமர் நீராடியபின்னர், "ராம நதி' என்னும் பெயர் ஏற்பட்டதாம். 
மேலக் கடையம், கீழக் கடையம், தெற்குக் கடையம் என்னும் மூன்று தனித்தனிப் பகுதிகளை ஆங்கிலேயப் பதிவுகள் குறிப்பிட்டாலும், தெற்குக் கடையமே பிரதான ஊர் என்கின்றனர். 

கடையம் என்னும் ஊருக்குப் புராணச் சிறப்போடு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. இந்தப் பகுதிதான், ராமாயண காலத்தில், தசரதச் சக்கரவர்த்தி வேட்டையாடிய இடம் என்று சொல்லப்படுகிறது. 

இவ்வாறு வேட்டையாடியபோது, யானை தண்ணீர் குடிப்பதாக எண்ணி அம்பு போட்டுவிட, அது சிரவணகுமாரன் என்னும் இளைஞனைத் தாக்கி அவன் இறந்தான் என்னும் கதை எல்லோருக்கும் தெரியும். சிரவணகுமாரன் தொடர்பான சம்பவம் இங்குதான் நடந்ததாகச் சொல்கிறார்கள். சிரவணகுமாரன் மீதுதான் தாம் எய்த அம்பு விழுந்தது என்று தெரிந்தவுடன், அருள்மிகு வில்வ வனநாதரின் கோயிலில் தசரதர் மன்னிப்புக் கேட்டதாகவும் கருதப்படுகிறது. 

கோயிலுக்கு அருகிலுள்ள குகைச் சுனை ஒன்றையும் கோயில் கதவுச் சிற்பங்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். எப்படியாயினும், ராமாயணத் தொடர்பு மகிழ்ச்சி தருகிறது. 

கடையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் பெருஞ்சிறப்புமிக்கவள். ஒருகாலத்தில் இவள் உக்கிரமாக இருந்தாளாம். பின்னர், கலாரூப சாந்தியெல்லாம் செய்து, இவளைத் தெற்கு முகமாக எழுந்தருளச் செய்த பின்னர், உக்கிரம் தவிர்த்து சாந்தஸ்வரூபி ஆனதாக வரலாறு. 

மகாகவி பாரதியாரின் கவிதையிலும் இடம் பிடித்தவள் அருள்மிகு நித்யகல்யாணி. பாரதியாரின் நவராத்திரிப் பாட்டில், "உஜ்ஜயினீ நித்ய கல்யாணி' என்பது முதல் வரி. அருள்மிகு வில்வ வனேச்வரர் திருக்கோயில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்துதான், "காணி நிலம் வேண்டும்' என்று தொடங்கும் பாடலை அவர் பாடியதாகச் சொல்கிறார்கள். 

புதுச்சேரியின் பத்தாண்டுகால வாசத்தை முடித்துக் கொண்டு, 1918-இல், பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்ட நிலையில், கடலூரில் பாரதியார் கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர், 1918 டிசம்பர் முதல் 1920 வரை சுமார் இரண்டாண்டுக் காலம், தம்முடைய மனைவியின் ஊரான கடையத்தில் தான் வாழ்ந்தார். "கடையத்திலேயே தங்கியிருக்க வேண்டும்' என்னும் நிபந்தனையில் தான் கடலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

பூர்வீகமாக இங்கு வாழ்ந்த இனத்தாரின் பெயரால் "கடையர்பட்டி' என்று இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும், இதுவே "கடையம்' என்றானதாகவும் குறிப்பு உண்டு. 

கடையத்துக்காரர்களைக் கடையத்தார் என்றழைக்கும் முறை இருந்திருக்கிறது. சங்கப் புலவர்களில் "கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார்' என்றொருவர் இருந்தார். வெண்ணாகனார் என்பது இவர் பெயர். இவர் கடையத்துக்காரர். எனவே, கடையத்தன். தொண்டை நாட்டிலுள்ள "கள்ளில்' என்னும் ஊருக்குச் சென்று குடியமர்ந்தார். எனவே கள்ளில் கடையத்தன் என்றும் ஆனார். 

அகநானூற்றில் ஒன்றும் புறநானூற்றில் ஒன்றுமாக, இவருடைய பாடல்கள் இரண்டு கிட்டுகின்றன. கள்ளிலையும் விட்டு இவர் பின்னர் மதுரைக்குக் குடிபெயர்ந்ததால், மதுரைக் கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார் என்றழைக்கப்பட்டார். "கடையத்தன்' என்பது இவருடைய தந்தையார் பெயர் என்று சொல்வாரும் உளர். 

இந்தப் பகுதி பஞ்சக் குரோசத் தலங்களில், "சிவசைலம்', "ஆழ்வார்குறிச்சி', "திருப்புடைமருதூர்', "பாபநாசம்' ஆகியவற்றோடு, கடையமும் ஒரு தலமாகும். கடையம் என்னும் சொல்லுக்குக் "கடைசிக் கூத்து', "இந்திராணி ஆடிய உக்கிரக் கூத்து' போன்ற பொருள்கள் உள்ளன. அம்பிகை நித்ய கல்யாணி உக்கிரமாக இருந்தாள் என்னும் தகவலும் "கடைசிக் கூத்து' என்னும் தகவலும் ஒப்பு நோக்கத் தக்கன. அம்பிகைக்கான வீரத்தலங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கக் கூடும். இதுவே ஊருக்கான பெயரையும் கொடுத்திருக்கலாம். 

(தொடரும்..)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT