வெள்ளிமணி

சக்தி இல்லையேல் சிவமில்லை

1st Oct 2021 02:47 PM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

"சக்தி இல்லையேல் சிவமில்லை' என்ற தத்துவத்தினை உணர்த்தும் பொருட்டு பார்வதி தேவியை தன் இடப்பக்கத்தில் ஈசன் இருத்தி "உமையொரு பாக'னாகக் காட்சியளித்த உருவமே "அர்த்தநாரீஸ்வரர்' திருக்கோலம். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "தொன்மைக் கோலம் இக்கோலமே' என்பார். 

திருமூலர் இந்தக் கோலத்தை பரஞானம், அபர ஞானம் இரண்டையும் தரவல்ல ஓர் "அற்புதக் கூத்து' என்று போற்றுகிறார்.

"வாமபாகத்தை வவ்வியதே' என்று அம்பாள் இடது பாகத்தை ஆக்கிரமித்துள்ளதை அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர். இன்னும் பல அருளாளர்கள் இந்தக் கோலத்தைப் பாடி பரவசமடைந்துள்ளனர். இக்கோலத்தில் சக்தியைத் தவிர்த்து தம்மை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவருக்கு, ஈசன் காட்சிக்கொடுத்து, அவரை ஆட்கொண்டு, "அம்மையப்பனாகத்தான் வழிபடுதல் முறை!' என்பதை உணர்த்தியருளினார்.

ADVERTISEMENT

கேதாரகௌரி விரதம்: அரிய தவம் செய்து அரனின் இடப்பாகத்தைப் பெற அன்னை பார்வதி தேவி விருப்பங்கொண்டு, இமயமலைச் சாரலில், மலையைச் சார்ந்த வயல் பகுதியைத் (கேதாரம் - வயல்) தேர்ந்தெடுத்து 21,000 ஆண்டுகள் கடுந்தவம், விரதம் மேற்கொண்டு, தன் எண்ணத்தை ஈடேற்றிக்கொண்டாளாம். இவ்வாறு அம்பிகை அனுஷ்டித்த விரதத்திற்கு "கேதாரகௌரி விரதம்' என்று பெயர்.

இந்தப் புராண சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு திகழும் திருத்தலம் திருச்செங்கோடு எனப்படும் கொடிமாடச் செங்குன்றூர். கொங்கு நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானின் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். 

இத்திருத்தலத்தில் மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள கேதார கௌரி அம்மன் கேதாரகௌரி விரதத்தை அனுஷ்டிப்பதாக ஐதீகம். ஆவணி கடைசியில் தொடங்கி 21 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு புரட்டாசியில் பூர்த்தியாகி, மகாளய அமாவாசையன்று உமையொரு பாகனாய் இறைவன் அருள் பாலிக்கும் திருக்காட்சி நடைபெறும்.

முறைப்படி விரத நெறிமுறைகளைப் பின்பற்றி, அம்மனுக்கு காப்புகட்டி மேற்கொள்ளப்படும் இந்த விரதம் "கேதார கௌரி அம்மன் கல்பபூஜை' என்று அழைக்கப்படுகிறது. 

சிவபெருமானுக்கு உரிய விரதமாக இருப்பதால் ஒரு கலசத்தில் சிவபெருமானை எழுந்தருளச் செய்வர்.  கேதார கௌரி அம்மனுக்கு தினசரி அபிஷேகமும், அர்ச்சனை, பாராயண நிகழ்ச்சிகளும் நடைபெறும். விரத பூர்த்தி நாளன்று கலச தீர்த்தத்தால் அர்த்த நாரீஸ்வரர் மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள நந்திக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. மறுநாள் அர்த்த நாரீஸ்வரர் உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்துடன் உமையொருபாகனாக பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும். 

அம்மனுக்கு காப்பு கட்டும் நாளன்றே பெண்களும் தங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டி காப்பு கட்டிக்கொண்டு, 21 நாட்கள் விரதம் இருந்து, தினசரி ஆலயத்தில் கேதார கௌரி அம்மனுக்கு நடைபெறும் வைபவங்களில் பங்கேற்பது இத்தலச் சிறப்பு.

கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் சிற்பமும் உள்ளது.

இத்தலம் பற்றிய பல்வேறு குறிப்புகள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேலும், இங்கு முதலாம் ராஜராஜ சோழன், பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

திருச்செங்கோடு மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் 1,200 படிகள் உள்ளன. வழியில் ஓரிடத்தில் 20 அடி நீளமுள்ள பாம்பு வடிவத்திலேயே படிக்கற்கள் அமைந்துள்ளன. 

மலையின் மேல் 262 அடி நீளமும், 201 அடி அகலமும் உடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் 85 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயில் மட்டும் சிறுகோபுரமாக உள்ளது. மலையின் அடிவாரத்தில் தனியாக கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. 

இவ்வாண்டு செப். 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட கேதார கௌரி விரதம், அக். 5-ஆம் தேதி போதாயன அமாவாசையன்று பூர்த்தியாகிறது. அன்று அதற்குண்டான சடங்குகள் செய்யப்படும். மறுநாள் 6-ஆம் தேதி மகாளய அமாவாசையன்று அபிஷேக, அலங்காரத்துடன் அர்த்த நாரீஸ்வரர் உற்சவமூர்த்தி, பிருங்கி முனிவர்  சகிதமாகக் காட்சி தருவார்.

மகாளய அமாவாசையன்று மாதொருபாகனை தரிசனம் செய்பவர்களுக்கு, தம்பதிகளின் அன்யோன்ய அபிவிருத்தி, குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல் போன்ற பல்வேறு பலன்களும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

அமைவிடம்: நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.


 

Tags : namakkal sivan temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT