வெள்ளிமணி

சௌபாக்கியம் தரும் சொர்ணகால பைரவர்!

எஸ். வெட்கட்ராமன்

அருள்தரும் அறுபத்து நான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்று பைரவ மூர்த்தி. பைரவ வடிவங்களிலும் 64 வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் வெம்பாக்கம் அழிவிடை தாங்கிசொர்ணகால பைரவர் தனிப்பெரும் சிறப்புடன் திகழ்பவராவார். 

தல வரலாறு: சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வீரசம்புவராயன் என்ற மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது வடக்கே இருந்து யாதவ மன்னன் படையெடுத்து வந்தான். சிவ பக்தனான சம்புவராயன், அப்போரில் சிவபெருமானின் பேரருளால் பெரும் வெற்றி கண்டான். 

தனது படையையும், பட்டினத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூருக்கு "அழிவிடை தாங்கி' எனப் பெயரிட்டு, இந்த வெற்றியை அருளிய காலபைரவருக்கு பெரியதொரு கோயிலையையும் எழுப்பினான். அன்றிலிருந்து அனைவரின் துயர் நீக்கி, பக்தர்களின் சகலவித வெற்றிக்கும் இந்த பைரவரே வழிவகுக்கின்றார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

காலப்போக்கில், மிகவும் பாழடைந்திருந்த இவ்வாலயத்தை 1928-ஆம் ஆண்டில் வட இலுப்பை கிராமத்தைச் சேர்ந்த குமாரசுவாமி தீட்சதர் என்பவரின் முயற்சியால் சீரமைத்து, முதல் கும்பாபிஷேகம் நடந்தேறியது. பின்னர் ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 2019-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

ஆலய அமைப்பு: மூலவர் ஸ்ரீ சொர்ணகால பைரவர் என்று திருநாமம் கொண்டு அருள்கிறார். ஆதிசங்கரரால் பிரதிஷ்டையானவர் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. சுமார் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களில் உடுக்கை, பாசுரம், சூலம், கபாலம் ஆகியவவற்றைத் தாங்கியும், தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடனும், தெற்கு முகம் நோக்கி, நாய்வாகனத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் அதியற்புதத் திருமேனி. 

சிவாம்சம் என்பதால் ஐந்து முகங்கள் மூன்று கண்களுடன் அருள் பாலிப்பதாக ஐதீகம். மூலவரைப் போலவே உற்சவரும் நேர்த்தியாய் அமைந்துள்ள பஞ்சலோகத் திருமேனி. ஸ்ரீ விநாயகர், முருகர், நவகிரகங்கள், வடுக பைரவர் (சிறியது), பெரியவா பாதம் போன்ற சந்நிதிகளும் அழகுற அமைந்துள்ளன. நந்தி, கொடிமரம், பலி பீடம் அமையப் பெற்று ஓர் அழகிய ஆலயமாகத் திகழ்கிறது.

அஷ்ட பைரவ மூர்த்திகள்: ஆலய பிரகாரத்தைச் சுற்றி மகாமண்டபத்தின் மேல் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய அஷ்ட பைரவர மூர்த்திகளை (கபால பைரவர், உன்மத்த பைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவர், குரு பைரவர், அசிதாங்க பைரவர், குரோதன பைரவர், சண்ட பைரவர், பீஷண பைரவர்) அவர் தம் மனைவிகளுடன், வாகனங்களுடன் தரிசிக்கலாம். வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பு இது. 

இதைத்தவிர சிவபெருமானுக்கும், தத்தாத்ரேயருக்கும், ஆதிசங்கரருக்கும் சுதைத் திருமேனி உள்ளது. ராஜகோபுரத்திலும் பல்வேறு பைரவ மூர்த்தங்களின் வடிவங்களைக் காணலாம். மொத்தத்தில் எங்கு திரும்பினாலும் பல்வேறு விதமான பைரவர் சிலைகளை தரிசிக்கும் பேறு பெறலாம். 

எட்டு ஊர் காவல் தெய்வம்: "அழிவிடை தாங்கி மதுரா கிராமங்கள்' என அழைக்கப்படும் அழிவிடைதாங்கி, வயலூர், கோணன்பேட்டை, பைரவபுரம், ஜம்போடை, தக்கான் பாளையம், எடப்பாளையம், பெருமாள் பேட்டை ஆகிய எட்டு கிராமங்களுக்கும் இத்தல பைரவர் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார். ஆண்டு தோறும் நடைபெறும் சிவராத்திரி உட்பட எட்டு திருவிழாக்களை ஒவ்வொரு கிராமத்தினரும் ஒவ்வொன்றிக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்துகின்றனர். அந்நாள்களில் உற்சவ பைரவ மூர்த்தி வீதிவுலாவாக அக்கிராமங்களுக்கு செல்வது வழக்கம்.

வைபவங்கள்: மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலம், எமகண்ட நேரங்களிலும் இவ்வாலயத்தில் நடைபெறும் பைரவ பூஜைகளில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் (நவ. 26, 27-இல்) சிறப்பு அபிஷேகங்கள், ஹோமங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன. 

திருப்பணி: அருள்மிகு ஸ்ரீ சொர்ணகால பைரவர் ஆலய அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படும் இவ்வாலயத்தில் தற்போது முன்மண்டபம், 16 கால் மண்டபம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம். 

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடை தாங்கி கிராமத்தில் உள்ளது இத்திருக்கோயில். காஞ்சிபுரம் மற்றும் செய்யாறிலிருந்தும் பேருந்துகள் மூலம் இக்கோயிலுக்கு வரலாம். 

தொடர்புக்கு: 8838266009 / 9787143750.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT