வெள்ளிமணி

தன்னார்வத் தொண்டில் முன்னிலை

26th Nov 2021 07:14 PM | -மு.அ. அபுல் அமீன்

ADVERTISEMENT

 

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் தன்னுயிர் போல எண்ணி, எதிர்பார்க்கும் உதவிகளைத் தேவைப்படும் காலத்தில் தேவைப்படுவோருக்குத் தானே வலிய சென்று செய்வதே தன்னார்வத் தொண்டாகும். 

ஊதியமோ, பிரதி பலனோ எதிர்பாராது வலியச் சென்று வகையாய் உதவுவதே உயரியது. பொதுத் தொண்டைத் தனியொருவருக்குத் தனியாக செய்யலாம். ஓர் ஊருக்கு அல்லது ஊரில் வாழும் மக்களுக்கு, இன்னும் விரிவான எல்லையில் உதவி தேவைப்படுவோர், தொடர் உதவிக்கு உரியவராக இருந்தால், குழுவாகக் கூடி உதவி செய்வதால் தொண்டின் முழு பலனை உரியவர்கள் உரிய முறையில் பெறுவர்.

"எவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போல் ஆவர்' என்று புகல்கிறது புண்ணிய குர் ஆனின் 5 - 32 -ஆவது வசனம். இதனையொட்டி, 2-158 -ஆவது வசனம் "எவர் நன்மையை நாடி தன்னார்வத்தோடு நற்றொண்டு புரிந்தால், அல்லாஹ் நிச்சயமாக நன்றி பாராட்டுபவன் ஆகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்' என்று இயம்புகிறது. 

ADVERTISEMENT

இதனை மேலும் வலியுறுத்தி, 16 - 128 -ஆவது வசனம் "நிச்சயமாக எவர் மெய்யாகவே இறையச்சம் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கிறான்!' என்று இயம்புகிறது.

ஒரு நாள் ஒப்பிலா நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும்பொழுது, சிலர் கிணற்றிலிருந்து நீர் இறைத்து பாத்திரங்களில் ஊற்றியதைக் கவனித்தார்கள். "நீங்கள் செய்யும் நன்மையைத் தொடர்ந்து செய்யுங்கள்!' என்று உதவி புரிய ஊக்கப்படுத்தினார்கள். அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி) நூல் - புகாரி 1635. 

ஹரம் பின் ஹய்யான் என்ற இறைநேசரின் மரணத் தறுவாயில் அவரின் சீடர்கள் மரண சாசனம் செய்யும்படி கோரினர். அப்பெரியார் இறைவனுக்கு அஞ்சி பிறருக்கு நன்மை செய்ய நவின்றார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்கள் தன்னார்வத்தோடு மருத்துவப் பணி புரிந்தனர். நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தனர். அவர்களின் அனுபவத்தால் நோய் தீர தொண்டு புரிந்தனர்.

நடைபாதையில் கிடக்கும் முள்ளை அகற்றுவோரும் தன்னார்வத் தொண்டர்களே. தன்னார்வத் தொண்டர்களும், முன்களப் பணியாளர்களும் அல்லாஹ்விடம் எண்ணற்ற நன்மைகளைப் பெறுவர்; அதே சமயம் சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் பெறுவர். சமூகம் இவர்களை அங்கீகரித்து கெளரவப்படுத்தும்.

தன்னார்வத் தொண்டு, நாட்டுத் தொண்டிற்கு ஓர் உந்துதல் ஆகும். அந்த உந்துதல் நாட்டு முன்னேற்றத்திற்கு முன்னோடியாகும்.

Tags : vellimani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT