வெள்ளிமணி

பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பிந்து மாதவப் பெருமாள்!

26th Nov 2021 07:04 PM |  - பழங்காமூர் மோ.கணேஷ்

ADVERTISEMENT

 

மாதவனை காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப்பட்ட  மாதவன் தனது இரு தேவியர்களுடன் இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு.

தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து  மாதவப் பெருமாள்களை ஐந்து  திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான். 

முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். 

ADVERTISEMENT

தோஷம் வந்த காரணம்:ஆதியில் பிரம்மா தனது சிருஷ்டிக்காக நியமித்த பிரஜாபதிகளுள் ஒருவர் த்வஷ்டா. தேவர்களுள் ஒருவரான த்வஷ்டாவிற்கு ஒரு மகன் பிறந்தான். சாந்த குணமும், தர்ம சிந்தனையும் நிறைந்த அவனுக்கு "விஸ்வரூபன்' என்று பெயர். இவன் மூன்று தலைகளை உடையவன். 

ஒரு சமயம் விஸ்வரூபன், தன் தந்தையிடம் ஆசிபெற்று, கடுந்தவம் இயற்றினான். அந்த தவத்தின் தாக்கமானது, இந்திரனையும், இந்திரப் பதவியையும் ஆட்டம் காணச் செய்தது.

விடுவானா இந்திரன்? விஸ்வரூபனின் தவத்தைக் களைத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அனைத்து முயற்சியும் வீணானது. கோபம் கொண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனை வெட்டி வீழ்த்தி விடுகிறான்.

இதையறிந்த தந்தை த்வஷ்டா, கோபத்தில் ஓர் அபிசார வேள்வியை நடத்தினார். அதிலிருந்து கிளம்பியவன் "விராட்சூரன்' என்னும் அசுரன். இந்திரனை அழித்திட விராட்சூரனை ஏவினார் த்வஷ்டா. இந்திரன் தந்திரமாய் விராட்சூரனுடன் நட்பு பாராட்டி அவனையும் கொல்கிறான்.

இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து உலுக்கியது. இந்திரன் பிரம்மாவை சரணடைந்தான். அவரது ஆலோசனைப்படியே பூவுலகில் ஐந்து இடங்களில் மாதவப் பெருமாள் ஆலயங்களை தேவதச்சனைக் கொண்டு நிறுவினான். நியமத்துடன் பூஜித்து, திருமாலின் திருவருளால் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விமோசனம் பெற்றான்.

அதோடு, இந்த பஞ்ச மாதவப்பெருமாள் ஆலயங்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டுகிறான் தேவேந்திரன். அதன்படியே அருளினார் ஸ்ரீஹரி.

பிரதூர்த்தனின் வேண்டுகோள்: துத்திப்பட்டுக்கு அருகே 4 கி.மீ. தொலைவில் உள்ள "நிமிஷாசல மலை'யில் பிற முனிவர்களோடு தவம் புரிந்து வந்தார் ரோமச மகரிஷி. அப்போது பிரதூர்த்தன் என்கிற கந்தர்வன் முனிவர்களின் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்து வந்தான். ரோமச மகரிஷியையும் மிகவும் இம்சித்தான். 

கோபம் கொண்ட ரோமச மகரிஷி, அவனை புலியாக மாறும்படி சபிக்க.... அவன் புலியாக மாறினான். ஆனால், அவன் புலி உருவில் முன்பை விடவும் அதிகமாக அக்காட்டில் வாழும் உயிரினங்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும் கடும் துன்பங்களைக் கொடுத்தான்.

இதனால் ரோமச மகரிஷி, மகாவிஷ்ணுவை நோக்கி பிரார்த்தனை செய்தார். ஸ்ரீ ஹரியோ, பூவுலகில் தன்னை ஸ்தாபித்த இந்திரனை அனுப்பி வைக்கிறார். இந்திரன் நிமிஷாசல மலையை அடைந்து, ரோமச மகரிஷியை வணங்கி, புலி உருவில் இருந்த பிரதூர்த்தனிடம் போரிட்டு, இறுதியில் அவனை வதம் செய்கிறான். உயிர் பிரியும் தருணத்தில் பிரதூர்த்தன் பாவ மன்னிப்பு வேண்டிட, திருமால் காட்சி தந்து அவனுக்கு நற்கதி அளிக்கிறார். அதோடு ரோமச மகரிஷிக்கும் பிந்துமாதவர் மோட்சமளித்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். 

"இந்தத் தலம் தனது பெயரால் விளங்க வேண்டும்!' என்கிற பிரதூர்த்தனது வேண்டுகோளின்படி, திருமாலின் திருவருளால், இத்திருத்தலம் "பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி "துத்திப்பட்டு' என்றானது. இத்தலத்தின் மகிமையை பிரம்மாண்ட புராணம், சனத்குமார சம்ஹிதையில் உள்ள "பாஸ்கர úக்ஷத்திர மகாத்மியம்' விரிவாக விவரிக்கிறது.

இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் பொங்கல் நாளில், ரோமச மகரிஷி தவமியற்றிய நிமிஷாசல மலையைச் சுற்றி உற்சவர் பிந்துமாதவப் பெருமாள் கிரி வலம் வருகிறார். வைகாசி விசாகத்தில் கஜேந்திர மோட்சத் திருவிழாவும் நடைபெறுகிறது.

அமைவிடம்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது துத்திப்பட்டு கிராமம். பேருந்துகள் நிற்கும் சாலையையொட்டி அழகிய நுழைவுவாயிலுடன் திகழ்கிறது பிந்துமாதவப் பெருமாள் ஆலயம்! 

Tags : velliamani Bindu Madhava Perumal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT