வெள்ளிமணி

மோட்சம் அடைய ...

26th Nov 2021 07:11 PM | -எம்.ஜி. நிர்மலசான்த்

ADVERTISEMENT

இறைவன் பரிவுடனும் அன்புடனும் சேவை செய்வதையே விரும்புகின்றார். சேவையே இறை தொழுகை ஆகும். இயேசுவும் இப் பூமியில் வாழும்போது தன்னை இறைவனின் சேவை செய்யும் ஒரு சேவகனாகவே காண்பித்து வாழ்ந்தார்.
இறை சட்டம் போதிக்கும் ஆசிரியர் ஒருவர் இயேசுவிடம் ""மோட்சம் அடைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று வினவினார். அதற்கு ஒரு சமாரியன் செய்த சேவையைப் பற்றிக் கூறி, அந்த சட்டம் போதிக்கும் ஆசிரியரும் அப்படியே சேவை செய்ய பணித்தார்.
எருசலேமிலிருந்து எரிகோ நகருக்கு ஒருவர் பயணம் சென்றார். வழியில் முட்புதர்கள், பாலைவனத்தைக் கடந்து சென்றபோது, திருடர்கள் அவரைப் பிடித்து அவரது ஆடைகளை உருவி, உடைமைகளை எடுத்துக் கொண்டு, அவரை அடித்து ரத்தக் காயம் உண்டாக்கி, பாதையோரம் குற்றுயிராய் விட்டுச் சென்றனர். 
உயிருக்குப் போராடிய அந்த மனிதர், உதவி வேண்டி குரல் கொடுத்தார். அப்போது, ஓர் ஆலயத்தை நடத்தும் ஆசாரியன் ஒருவர் அவ்வழியே வந்தார். அடிபட்டு குற்றுயிராய்க் கிடந்த மனிதரை கண்டும், உதவி செய்ய மனமில்லாமல் ஒதுங்கிப் போனார் (லூக்கா 1025 -35).  
அதைத்தொடர்ந்து வந்த ஒரு லேபியேனும் கண்டும் காணாமல் விலகிச் சென்றான். சமுதாயத்தில் தாழ்வாய்க் கருதப்படும் சமாரியன் என்பவரை யூதர்கள் வெறுத்தனர். அவர்கள் போலியானவர்கள் என்பர். அப்படிப்பட்ட சமாரியன் ஒருவர் 
அவ்வழியே வந்தார். 
அடிபட்டுக் கிடக்கிற மனிதரை கண்டு அன்பால் மனதுருகி, அருகில் சென்றார். அவரது காயங்களைக் கழுவி மருந்திட்டார். அவருக்குத் தன் ஆடையை உடுத்தினார். உணவும், திராட்சை ரசமும் கொடுத்து தன் வாகனமான கழுதையின் மேல் ஏற்றி, எரிகோ நகர் நோக்கி அழைத்துச் சென்றார். 
வழியில் ஒரு சத்திரத்தில் அவரை தங்க வைத்து, சத்திர உரிமையாளரிடம் வாடகைப் பணம் கொடுத்து விட்டு, ""இவர் முழு குணமடையும் வரை சத்துள்ள உணவு, மருந்துகள் அளித்து பராமரிக்கவும். அதிகம் செலவானாலும் செலவு செய்யவும். நான் திரும்பி இவ்வழியே வரும் போது அதற்குரிய பணத்தை அவருக்காக நானே தருவேன்!'' என்று கூறிச் சென்றார். 
இக்கதையை இயேசு சட்டம் போதிக்கும் ஆசாரியனிடம் கூறி, "சக மனிதருக்கு செய்யும் சேவையே, இறைவனிடம் காட்டும் அன்பாகும். அதுவே மோட்சம் அளிக்கும்!' என்று சொன்னார். 
சமாரியன் "நல்ல சமாரியன்' என்று அன்றும், இன்றும் போற்றப்படுகிறார். என்றென்றும் போற்றப்படுவார். நாமும் சக மனிதருக்கு சேவை செய்வோம்; இறை அன்பைப் பெறுவோம்! இயேசுவின் அருள் நம்மோடு..!

Tags : vellimani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT