வெள்ளிமணி

மோசமான நேரம் கூட நன்மையாகவே முடியும்!

28th May 2021 04:55 PM

ADVERTISEMENT

 கடவுள் நம்பிக்கையும், மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனமும் கொண்ட ஒருவர், தனது நண்பர்களுடன் சிறிய படகில் சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற படகு திடீரென கடலில் மூழ்கியது. இதில் அவர் மட்டும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர், ஆள் அரவமில்லாத ஒரு தீவில் கரை ஒதுங்கினார்.
 ஆனாலும், அவர் அந்த தீவில், யாராவது தன்னைக் காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார். இதற்காக அந்தப் பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்வதற்காக, அவர் தன்னிடம் இருந்த துணியை கொடியாக கட்டி, உயரமான இடத்தில் நாட்டி வைத்தார்.
 ஆனால் நாள்கள் கடந்தன, அவரைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. இருப்பினும், அந்த தீவில் வாழ்வதற்கு, தன்னால் இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டார்.
 அங்கு இருக்கும் வன விலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிறு குடிசை உருவாக்கினார். அங்கு கிடைத்த பழங்கள், மீன்கள் இவற்றைக் கொண்டு தன் பசியாறினார். எப்படியும் இந்த தீவில் உயிர் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது.
 இந்தச் சூழ்நிலையில் அவர் ஒருநாள் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு, தனது குடிசைக்குத் திரும்பினார். அப்போது தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய குடிசை மொத்தமாக தீயில் எரிந்து சாம்பலாகி இருப்பதைப் பார்த்தார். தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது.
 இனி அவ்வளவு தான்... என விரக்தியுடன் அமர்ந்திருந்தார். அப்போது, அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. அதனைக் கண்டு, உதவி கேட்டு தன் கைகளை அசைத்தார். அந்தக் கப்பல் மெல்ல அந்தத் தீவின் கரையோரம் வந்து நின்றது. பின்னர், இவரைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றது.
 கப்பலிலிருந்த பணியாளரிடம், "எப்படி அந்தத் தீவில் வந்து என்னைக் காப்பாற்ற வந்தீர்கள்?' என ஆவலுடன் கேட்டார்.
 "எங்கள் கப்பல் கேப்டன், புகை வருவதை கவனித்து, தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்த போது நீங்கள் கட்டியிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்தப் பக்கம் திரும்பி வந்தோம்' என்றார்.
 இதைத்தான் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது அன்றியும், அவருடைய (தேவனுடைய) தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூர்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என ரோமர் 8:28-இல் வாசிக்கிறோம்.
 எனவே, நமது வாழ்வில் எத்தனையோ சவால்கள், பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். தேவனை நாம் முழுமையாக நம்பியிருந்தால், இது நமது வாழ்வின் மோசமான நேரம் என்று நினைப்பது கூட நன்மையாகவே முடியும்..!
 - ஒய்.டேவிட் ராஜா

ADVERTISEMENT
ADVERTISEMENT