வெள்ளிமணி

நாம் சைவர்களா? இந்துக்களா? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

28th May 2021 05:09 PM

ADVERTISEMENT

 உலகம் விந்தையானதாய் மாறியிருக்கிறது. உயிர்ப்பிறவிகளில் உயர்பிறவிகள் என்று சொல்லப்படுபவர்களான மனிதர்கள், தம் ஆணவ முனைப்பால் ஆயிரமான சர்ச்சைகளைக் கிளப்பி, உலகத்தைச் சர்ச்சைகளின் களஞ்சியமாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள். உயர்தல் நோக்கமான உண்மைத் தேடலை விடுத்து, வெற்றுவாதங்களில் வீண் பொழுதுபோக்குதல், மானுடர்தம் வழக்கமாகிவிட்டது. அந்த வழக்கத்திற்கு நம்மவர்களும் விதிவிலக்கல்லராம்.
 மானுடர்களின் வாழ்வே, விடைதெரியா வினாவாக ஆகியிருக்கும் இவ்வேளையில், ஒற்றுமையோடு இருக்க
 வேண்டிய நம்மவர்கள், குழுக்கள் அமைத்து கோளாறியற்றி வருகிறார்கள். இனம், மதம், ஜாதி என இவர்கள் வகுத்த பல் குழுக்களால், ஏலவே பாழ்பட்டுக் கிடக்கிறது நம் தேசம்.
 இந்த இலட்சணத்தில், தமிழர்களில் பெரும்பான்மையோர் பின்பற்றும், வேதநெறி வந்த சமயத்தார் சிலர், தமது சமயத்தின் பெயர் பற்றியே, பிரச்னையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
 தாம் இந்துக்களா? சைவர்களா? என்பதுவே அப்பிரச்னையாம்.
 வழுக்கைத் தலையன் சிரைத்தலைப் பற்றிக் கவலைப்படுமாப்போல், சமய வாழ்வு இளையோரிடம் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், சமயத்தின் பெயர் பற்றி சில பெரியமனிதர்கள் தர்க்கங்கள் நடத்துகிறார்கள். தத்தம் குறைஅறிவு கொண்டு அவர்கள் நடத்தும் சர்ச்சைகளால், உள்ள சமயவாழ்வும் கெட்டுப் போகும் முன்பாக, அவ்விடயத்தைத் தெளிவுறுத்தி முற்றுப்புள்ளி வைக்கவே, இக்கட்டுரையை வரையத் தொடங்குகிறேன்.
 நாம் பின்பற்றும் சமயம், "இந்து சமயமா? சைவ சமயமா?' எனும் சர்ச்சையில், ஒரு சாரார் "அது இந்து சமயமே' என்றும், மற்றொரு சாரார் "அது சைவ சமயமே' என்றும் தர்க்கித்து வருகின்றனர்.
 நாம் பின்பற்றும் சமயத்தின் சரியான பெயரைக் கூடத் தெரியாத, வெட்கக்கேடான நிலையில் நாம் இருக்கிறோம்.
 இந்த சர்ச்சையின் அடிப்படையே கூட, சிலபேருக்கு விளங்காமல் இருக்கலாம். அவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது.
 சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் எனும் ஆறு பிரிவுகள், நம் சமயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
 அதை வைத்தே நாம் பின்பற்றும் சமயம் எது என்பது பற்றியதான, சர்ச்சை பிறந்திருக்கிறது. அச் சர்ச்சை பற்றி ஆராய்வதன் முன், இவ் ஆறு பிரிவுகளுக்குமான வித்தியாசம் யாது? என்பது பற்றி அறிதல் அவசியமாம்.
 சிவனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைச் "சைவம்' என்றும், திருமாலை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தை "வைஷ்ணவம்' என்றும், சக்தியை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைச் "சாக்தம்' என்றும், விநாயகரை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைக் "காணாபத்தியம்' என்றும், முருகனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தைக் "கெளமாரம்' என்றும், சூரியனை முழுமுதலாய் ஏற்றுக்கொண்ட சமயத்தை "செளரம்' என்றும் சொல்வார்கள். விடயம் இவ்வளவே!
 அது என்ன முழுமுதற்கடவுள் என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை. பலதெய்வ வழிபாடுகள் பற்றிச் சொல்லும் ஒரு சமயத்தில், எத்தெய்வம் மற்றைத் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும், முதலாகவும் முழுதாகவும் இருக்கிறதோ, அதுவே அச்சமயத்தின் முழுமுதற் தெய்வமாம்.
 நமது சமயத்தில் பலதெய்வவழிபாடு உள்ளது என்பது வெளிப்படை.
 மேற்சொன்ன சமயங்கள் ஆறிலும்கூட, வெவ்வேறு தெய்வங்களையும் வழிபடும் முறைமை உண்டு. அங்ஙனம் மேற்சொன்ன சமயங்களில் குறித்த ஒன்றில், வழிபடப்படும் வெவ்வேறு தெய்வங்கள் "பதங்களைத்' தரவல்லன என்றும், அவற்றுள் வீடுபேற்றைத் தரவல்ல தெய்வமே, அச்சமயத்தின் முழுமுதற் தெய்வமெனக் கருதப்படுகிறது.
 இவற்றைத் தெரிந்துகொண்டு இனி நாம் சர்ச்சைக்குள் நுழையலாம்.
 உண்மையில், நம் நாட்டில் பெரும்பாலானோர் சிவனையே இஷ்ட தெய்வமாயும், முழுமுதற் கடவுளாயும் வழிபட்டு வருகிறோம்.
 சிவனைப் பரம்பொருளாய் ஏற்றுக்கொண்ட சமயமே சைவசமயமாம்.
 அதனால் நாம் அனைவரும் சைவசமயிகள் தான் என்பதில், ஐயத்திற்கு இடமில்லை. எனினும் நாமும் திருமால், சக்தி, முருகன், கணபதி, சூரியன் எனும் தெய்வங்களையும் வழிபடவே செய்கிறோம்.
 அப்படியிருக்க நாம் பின்பற்றும் சமயத்தை, சைவசமயம் என்று தனித்து எப்படிச் சொல்லலாம்? என்று கேள்வி பிறக்கும்.
 நான் முன் சொன்ன ஆறுசமயங்களும், வேதத்தையே தம் முதல் நூலாய்க் கொண்டவை. அதனால் அவை ஒன்றுக்கொன்று உறவானவை.
 எனவேதான் குறித்த ஒரு கடவுளை, முழுமுதலாய்க் கொண்ட இவ் ஆறு சமயங்களிலும், மற்றைய தெய்வ வழிபாடுகளும் முன் சொன்னாற்போல் கலந்து இருக்கின்றன.
 அப்படியாயின் இது இன்ன சமயம் என்று பிரித்தல் எங்ஙனமோ எனின், முன் சொன்னாப்போல், நாம் எந்த தெய்வத்தை வீடுபேறு தரவல்ல பரம்பொருளாய் ஏற்கிறோமோ, அதைக் கொண்டே முழுமுதற் கடவுள் பற்றிய முடிவு எடுக்கப்படுகிறது.
 அவ் அடிப்படையில் நாம் பிற தெய்வங்களையும் வழிபடினும், சிவனையே முழுமுதல் தெய்வமாய்க் கொண்டு வழிபடுவதால், நம்மில் பெரும்பாலானோரின் சமயம், சைவசமயம் தான் என்று ஐயமின்றி நிச்சயிக்கலாம்.
 இவ்விடத்தில் நான் வாழும் இலங்கை பற்றியும், ஒரு செய்தியைச் சொல்லவேண்டியிருக்கிறது. இலங்கையில் உள்ள திருமால் கோயில்களிலும், ஆரம்ப காலத்தில் விபூதியே பிரசாதமாய் வழங்கப்பட்டு வந்தது.
 நம் சைவசித்தாந்தம், திருமாலை சிவனின் நவபேதங்களில் ஒன்றாகவும், சிவ அம்சம் கொண்ட காத்தல் தெய்வமாகவும் குறிப்பிடுகிறது.
 அவ் அடிப்படையிலேயே இலங்கையிலுள்ள விஷ்ணு கோயில்களும், சைவக்கோயில்களாய்க் கருதப்பட்டன. அதுபோலவே பிறதெய்வ வழிபாடுகளுமாம். சிதம்பரத்திலும் திருமால் சந்நிதானம் அமைக்கப்பட்டதன், அடிப்படையும் இதுவென்றே கருதுகிறேன்.
 எங்கள் நாட்டில் சைவசித்தாந்திகள் என்று, தம்மைப் பறைசாற்றி நிற்கும் சில போலித் தத்துவவாதிகள், மேற் சொன்ன உண்மை தெரியாமல், திருமாலைக் கும்பிட்டாலே அவர்கள் வைஷ்ணவர்கள் என்று, முத்திரை குத்த முனைந்து வருகிறார்கள்.
 அங்ஙனம் அவர்களால் முத்திரை குத்தப்பட்டவர்களில் நானும் ஒருவனாவேன்.
 நெற்றி நிறைய விபூதி பூசியும் அவர்களில் சிலர், என்னைச் சைவனாய் ஏற்க மறுத்து வருகின்றனர். அவர்தம் அறியாமையைப் புறந்தள்ளுவோமாக.
 சைவர்கள் தமது தோத்திர நூலாக திருமுறைகளையும், சாத்திரநூலாக சைவசித்தாந்த சாத்திரங்களையுமே, காலாகாலமாக ஏற்றுப் பின்பற்றி வருகின்றனர்.
 திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங்களும், சிவனையே முழுமுதற் தெய்வமாய் வலியுறுத்துகின்றன. ஆதலால நாம் சைவசமயிகளேயாம். இதில் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை.
 இன்று திருமுறைகளைத் தோத்திரமாகவும், சைவசித்தாந்தத்தை சாத்திரமாகவும் கொள்ளாது, பகவத்கீதை போன்ற நூல்களைத் தோத்திரமாகவும், வேதாந்த தத்துவத்தை தமது சாத்திரமாகவும் கொண்ட, பல சமய அமைப்புக்கள் மெல்ல மெல்ல, நம் மண்ணில் புகுந்து வேரோடத் தொடங்கியுள்ளன.
 அத்தோத்திரமும் சாத்திரமும்கூட தவறானவை அன்றாம். ஆனாலும் சைவ சாத்திர, தோத்திர நூல்களைப் பின்பற்றி, ஒருமித்து வாழ்ந்த மக்களிடையே, வேறுபட்ட சமய அமைப்புக்கள் புகுந்தால், நிச்சயம் அது பூசல்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
 வலிமையாய்ச் சைவவாழ்வை ஏற்றுக் கொண்ட, நம் ஊர்களில் பல வேற்றுத் தத்துவக்காரர்களை, உள் நுழையவிடாமலே வைத்திருந்தன.
 இன்று நம் மண்ணின் பலயீனப்பட்ட சமய அறிவு நிலையால், மெல்ல மெல்ல எல்லாக் கொள்கையினரும், வேறு வேறு அமைப்புக்களின் பெயர்களோடு, உள் நுழையத் தொடங்கிவிட்டனர்.
 அங்ஙனம் உட்புகுந்தால், இத்தத்துவங்களுள் எது உயர்ந்தது என்பதான, சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகி, அவை வீணாக நம் முக்தி வழியை தடைசெய்து நிற்கின்றன.
 அதனால் நாம் முன்பு போலவே, "ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' என்றாற் போல, சைவ சாத்திரத்தையும், தோத்திரத்தையும், மரபுவழி பின்பற்றி சைவர்களாய் வாழ்வதே உயர்ந்ததாம்.
 சைவம் தான் நமது சமயமாயின், இந்து அறநிலையத்துறை என்றும், இந்துக்கல்லூரி என்றும், இந்துமாமன்றம் என்றும், இந்து மிஷன் வைத்தியசாலை என்றும், நம் சமய நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதேன்? என்று கேள்வி பிறக்கும். இக்கேள்விக்கு தெளிவுறப் பதில்காண்பது அவசியம்.
 நான் முன் சொன்ன ஆறுசமயப் பிரிவுகளுக்குள், இந்துசமயம் என்ற பெயரில் ஒரு பிரிவும் இருக்கவில்லை. அப்படியிருக்க இந்துசமயம் என்ற ஒரு பிரிவு, நம் சமயத்திற்குள் எங்கிருந்து வந்தது? கேள்வி பிறக்கும்.
 இவ்விடத்தில் தான், இந்துசமயம் என்ற பெயர்பற்றி நாம் ஆராயவேண்டியிருக்கிறது. இப்பெயர் எவரால் உரைக்கப்பட்டது? இப் பெயர் யார் யாரைக் குறிக்கிறது? என்பது பற்றியெல்லாம், சற்று உள்நுழைந்துதேடுவோம்..!
 (அடுத்த இதழில்...)

ADVERTISEMENT
ADVERTISEMENT