நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும் (துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலணம்) நாராயணர் மண்ணுலகில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவி ருக்மணியாகவும், பூதேவி சத்யபாமாவாகவும் அவதரித்தனர்.
தன் மனைவி சத்யபாமாவின் வேண்டுகோளை ஏற்று, அவள் விரும்பிய கற்பக விருஷத்தை இந்திரனிடம் சண்டையிட்டு இந்திரலோகத்திலிருந்து கொண்டு வந்து அன்பின் பரிசாக சத்யபாமாவிற்குக் கொடுத்தார். அவளோ கிருஷ்ணரை தன் பக்தியின் மேலீட்டால் மரத்தில் கட்டிவைத்து நாரதருக்கு தானமாகத் தந்தாள்.
எப்போதும் சத்யபாமாவிற்கு ஓர் ஆணவம் - "நாம் தான் கண்ணனின் உள்ளம் முழுவதும் நிறைந்துள்ளோம்' என்ற ஒரு கர்வம்.
இதனை எண்ணி சிரித்த மாயக்கண்ணன் ஒரு சித்து விளையாடலை அரங்கேற்றினான். நாரதர் துவாரகையில் தோன்றி தன் கலகத்தைத் துவக்கினார்.
"தாயே, எனக்கென்னவோ கிருஷ்ணரின் உள்ளம் முழுவதும் நிறைந்திருப்பவர் ருக்மணி தான் என்றார்.
அதற்கு சத்யபாமா அதை எப்படி அறிவது என்று கேட்டார்.
அதற்கு "கிருஷ்ணரது எடைக்கெடை துலாபாரம் தந்தால் பக்தியைத் தெரிந்து கொள்ளலாம்' என்றார். உடனே சத்யபாமா தன் செல்வம் அனைத்தையும் துலாபாரத்தில் வைத்து வேண்டினாள். தராசு சம நிலையடையவில்லை. கலக்கம் கொண்டாள். கிருஷ்ணர் சிரித்தார்.
அப்போது நாரதர் ருக்மணியை அழைத்தார்.
"தங்களால் கிருஷ்ண பரமாத்மாவின் எடைக்கு எடை துலாபாரம் தர இயலுமா?' என வினவினார்.
ஒன்றும் பேசாத ருக்மணி கண்ணனை மனதில் நினைத்து ஒரு துளசி தளத்தை எடுத்து வைத்தாள் - தராசு நிமிர்ந்தது. சத்யபாமாவின் ஆணவம் அழிந்தது என முடிகிறது இந்த வரலாறு.
காஞ்சிபுரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் தம்பதி சமேதராய் இவர்களைத் தரிசித்து பேரானந்தம் அடையலாம். பரந்தாமன் கண்ணனை பணிவோம் பரகதியை அடைவோம்.
-எஸ். எஸ். சீதாராமன்