வெள்ளிமணி

பிரார்த்தனையும் விடுதலையும்

21st May 2021 03:59 PM

ADVERTISEMENT

 இயேசு ஆண்டவர் உயிர்ப்பித்து வானுலகம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரின் சீடர்கள் இயேசுவின் போதனைகளை போதித்து வந்தனர்.
 அக்காலத்தில் யூதர்கள் ரோம அரசாட்சியின் கீழ் கட்டுப்பட்டிருந்தனர். ஆனாலும், ஆட்சியிலுள்ள நேர்மையற்ற தன்மை மற்றும் ஆட்சியரின் குறைகளைச் சுட்டிக் காட்டினர். இதற்காக இயேசுவின் சீடர்கள் பேதுருவும், யாக்கோபுவும் சிறைபிடிக்கப்பட்டனர்.
 இயேசுவின் சீடர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டால், யூதர்கள் ரோம ஆட்சியை எதிர்க்க மாட்டார்கள் என ஏரோது மன்னர் நினைத்தார். எனவே அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க எண்ணினார்.
 பஸ்கா பண்டிகை காலம் முடிந்தவுடன் விசாரித்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பேதுருவையும், யாக்கோபையும் சங்கிலியால் பிணைத்து, கடுங்காவல் சிறையில் வைத்திருந்தார்.
 பேதுருவும், யாக்கோபும் சிறையில் வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த மற்ற சீடர்கள் அவர்களின் விடுதலைக்காக ஜெபித்தார்கள். அவர்கள் தங்கள் அறையில் இருந்தபடி இரவு முழுவதும் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தனர்.
 சிறையில் பேதுருவும் யாக்கோபும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கடும் காவலில் இருந்தனர். நடுஇரவில் பெரும் ஒளி பிரகாசித்தது. ஒரு தேவதூதன் தோன்றி பேதுருவையும், யாக்கோபையும் தட்டி எழுப்பினான்.
 அப்பொழுது அவர்களின் கை கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. பேதுருவும் யாக்கோபும் தேவதூதனின் பின் சென்றார்கள். சிறைச்சாலையின் முதலாம் கதவு, இரண்டாம் கதவுகள் திறந்துகொண்டன.
 பேதுருவும் யாக்கோபும் சிறையை விட்டு வெளியேறி தெருவில் இறங்கி நடந்தனர். தேவதூதன் மறைந்து போனான்.
 அப்போது பேதுருவும் யாக்கோபும் தாங்கள் தேவதூதனால் சிறையிலிருந்து மீட்கப்பட்டதை அறிந்தனர். நள்ளிரவில் தம் நண்பர்களின் வீட்டை அடைந்தனர். அங்கேயிருந்த மற்ற சீடர்கள் அவர்கள் விடுதலைக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
 கதவு பூட்டப்பட்டிருந்தது. பேதுரு கதவைத் தட்டினார். ரோதை என்னும் சிறுமி கதவு இடுக்கு வழியே பார்த்தாள். ""பேதுருவும், யாக்கோபும் வெளியே நிற்கிறார்கள்!'' என்றாள். கதவு திறக்கப்பட்டது.
 பேதுருவும், யாக்கோபும் தாங்கள் எப்படி கர்த்தரால் காப்பாற்றப்பட்டனர் என்பதனை விவரித்தனர். கடவுள் தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி கூறினார்கள். ஆம்! பிரார்த்தனையினால் விடுதலை கிடைத்தது. நம்மையும் ஆபத்தான காலத்தில் கர்த்தர் காப்பாற்றுகிறார். என்றும் இறையருள் நம்மோடு..!
 -முனைவர் தே. பால் பிரேம்குமார்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT