வெள்ளிமணி

சென்னை காளிகாம்பாள் 

21st May 2021 03:58 PM | ஜி.ஏ.பிரபா    

ADVERTISEMENT

தேவியின் திருத்தலங்கள் 24

'சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவா யுவதிபி: பஞ்சபிரபி 
ப்ரபின்னாபி: சம்போ: நவபிரபி மூலப்ரக்ருதிபி:'
- செளந்தர்ய லஹரி 
அன்னை பராசக்தி தன் பக்தர்களைக் காக்க பல்வேறு வடிவங்கள் எடுக்கிறாள்.
அதில் மிகச் சிறப்பானது காளி வடிவம்.
காளி என்றாலே ஆக்ரோஷ வடிவாக, கோர ஸ்வரூபமாய், கரிய நிற மேனியுடன்தான் கற்பனை செய்கிறோம். ஆனால் அம்பிகை எடுத்த வடிவமே காளி என்பதால் அழகு பொங்கும் வடிவுடனும் காட்சி அளிக்கிறாள் காளிதேவி. கண்களில் கனிவு பொங்க, பக்தர்களின் தீமைகளை அழிக்கும் அந்த ஆக்ரோஷ வடிவில் அழகு பொங்க காட்சி அளிக்கிறாள் மகாதேவி. 
அன்பின் ஆக்ரோஷம் கூட அழகுதானே..!
அன்பில் தொடங்கி, அதில் நிலைபெற்று, அன்பிலேயே முடிகிறது மனித வாழ்க்கை. அந்த அன்பை இன்னும் அழகாக்குகிறது உண்மையும், நம்பிக்கையுமான பக்தி. தனக்கென்று இல்லாமல் தன் குழந்தைகளுக்காக ஆக்ரோஷமாக வடிவெடுக்கும் அன்னையின் அன்பில் நாம் மூழ்கி விட்டால் அதுவே நம்மை முக்திக்கு அழைத்துச் சென்று விடும்.
காளி கருணையே வடிவானவள். தைரியம், சத்ரு ஜெயம், மங்கலம் அருள்பவள். பக்தர்களைக் காக்க ஓடி வருவதால் "பத்ரகாளி' என்றும் அழைக்கப்படுகிறாள்.
தாருகனை வதம் செய்ய, ஈசனின் கழுத்தில் உள்ள விஷத்திலிருந்து தோன்றியவள் காளி என்கிறது புராணங்கள். அவள் காலத்தின் தேவதை. தசமகா வித்யையின் நாயகி. தன்னை வணங்குபவர்களின் துயர் தீர்க்கும் அம்பிகையின் வடிவங்களில் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவளாகத் திகழ்கிறாள். எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கிறாள்.
சென்னை தம்பு செட்டி தெருவில் வீற்றிருக்கும் அன்னை முதலில் இருந்தது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில். வெள்ளையர்கள் ஆட்சியில் இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்ததால் பக்தர்கள் வந்து வழிபாடு செய்ய பல சிரமங்கள் ஏற்பட்டன. எனவே இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டது.
காளியம்மனை மீனவர்கள், விஸ்வகர்மாக்களும் குங்குமம் பூசி வழிபட்டதால் "சென்னம்மா' என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோயில் சிவசக்தி தலமாகவும் விளங்குகிறது. ஆதி சங்கரரின் ஸ்ரீசக்கரம் இங்கு பதிக்கப் பட்டுள்ளது. எனவே, ஸ்ரீ சக்கர நாயகியாகவும் திகழ்ந்து பல்லாயிரம் பலன்களை அள்ளி வழங்கும் அருட்சக்தியாகவும் திகழ்கிறாள் காளிகாம்பாள்.
சிறப்பம்சமாக இங்கு ஸ்ரீசக்கர கிண்ணித்தேர் உள்ளது. வெண்கல கிண்ணங்களால் அமைந்த இந்தத் தேரில் மின்னும் விளக்கொளியில் அன்னை ஜெகஜோதியாக வலம் வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
இங்கு அம்பிகையின் குங்கும பிரசாதத்தில் அவளின் துவார சக்திகளான ஜெய, விஜயர்கள் இருப்பதாக ஐதீகம். எனவே காளிகாம்பாள் குங்குமத்தை நெற்றியில் தரித்துக் கொண்டால் அந்த இரு சக்திகளும் நமக்குப் பக்க பலமாக இருந்து சகல ஆபத்துகளிலிருந்தும் காப்பாள் என்பது சத்தியமான உண்மை.
இங்கே காளிகாம்பாள் அழகிய தோற்றத்துடன், முகத்தில் அமைதியும், கண்களில் கருணையும், உதட்டில் மந்தஹாசப் புன்னகையுடன், தன் பக்தர்கள் மனம் தன்னைக் கண்டவுடன் குளிரும் வண்ணம் எழில் வடிவாகக் காட்சி அளிக்கிறாள். அன்னை ஒரு கண்ணில் சரஸ்வதி தேவியையும், இன்னொரு கண்ணில் மகாலக்ஷ்மியையும் கொண்டு முப்பெரும் தேவியாக இங்கு வீற்றிருக்கிறாள். 
1639 -ஆம் ஆண்டுக்கு முன்பே உருவான மிகப்பெரும் சிவ சக்தித் தலம். கோரமும் இறைவன் வடிவமே என்பதை உணர்த்தவே அம்பிகை குரூரமான காளி வடிவம் கொள்கிறாள். அழிவு இருந்தால்தான் ஆக்கமும்.
மிகவும் புராதனமான கோயில். சத்ரபதி சிவாஜிக்கு, காளிகாம்பாள் அன்னையை வழிபட்ட பின்னரே பல வெற்றிகள் கிடைத்தன என்கிறது தல வரலாறு. பாரதியாருக்கு வாக்கு வன்மையை அளித்தவள். காளி என்றாலும் அழகுற அன்னை காமாட்சியாக வீற்றிருக்கிறாள் அம்பிகை.
மேற்கு நோக்கி, அர்த்த பத்மாசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, மேற்கையில் அங்குசம், பாசம், தாமரை, அபய வரத முத்திரையுடன், மூக்குத்தி, மரகதப் பதக்கம் பொறித்த பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, கங்கணம், பாதச் சிலம்பு மின்ன அமர்ந்திருக்கிறாள் அம்பிகை கண் கொள்ளா வடிவமாக.
அவள் முன் ஆதிசங்கரர் அமைத்த ஸ்ரீசக்கர அர்த்த மேரு அமைந்துள்ளது. அன்னையின் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோஷ்டத்தில் வித்யேஸ்வரி, பிரம்ம வித்யா, வைஷ்ணவி, தாட்சாயணி மற்றும் மகாலட்சுமி உருவங்கள் இருக்கின்றன. இங்கு வந்தாலே காஞ்சி, திருவண்ணாமலையைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.
இங்கு தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. பரிவாரத் தேவதையாக கடல்கன்னி விளங்குகிறாள்.
இங்கு நாளெல்லாம் திருநாளே. நாளும் நம்மைக் காக்க வருபவள் காளிகாம்பாள். குங்கும லட்சார்ச்சனை, திருவிளக்கு வழிபாடு, வைகாசியில் பிரம்மோற்சவம், வஸந்த விழா, வெள்ளி, ஞாயிறுகளில் ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி கொலு, தை மாதம் பொங்கல், பூச் சொரிதல், தெப்பம் என்று நாளும் திருவிழா. 
பராசக்தி தன்னை பல சக்தி வடிவங்களாகத் தோற்றுவித்து உலகின் தீமைகளை அழிக்கிறாள். அதில் ஒரு வடிவமே காளிகாம்பாள். அவள் நீலி, சூலி, காளி என்றே உருவகப் படுத்தப்படுகிறாள்.
பல சிறப்புகளைக் கொண்டது இத்தலம்...
"யாதுமாகி நின்றாய் காளி...' என்ற பாடலை மகாகவி பாரதியார் இங்குதான் இயற்றினார். "உள்ளம் உருகுதய்யா...' என்ற பாடலை "ஆண்டவன் பிச்சை' என்ற பெயருடைய பெண் இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி முன் அமர்ந்துதான் பாடியுள்ளார். 
நாம் அனைவரும் ஏதோ ஓர் ஆசையை மனதில் கொண்டுதான் தாய்ப்பசுவை நோக்கி ஓடும் கன்றாக ஓடுகிறோம். அதை உணர்ந்து, நம் ஊழ்வினைகளை நீக்கி, அல்லல்கள் போக்கி, இகபர செளபாக்கியங்கள் அனைத்தும் அளித்து, தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொள்கிறாள் பரம கல்யாணியான அன்னை 
காளிகாம்பாள்..! 
(தொடரும்) 

ADVERTISEMENT
ADVERTISEMENT