வெள்ளிமணி

பூந்துருத்தி உபசாரம்

DIN

சைவ நெறி தழைத்தோங்கச் செய்ததில் பெரும் பங்காற்றியவர்கள் சமயாசாரியர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் ஈடியிணையற்ற அருளாளர்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அவர்கள் தன்மைக்கு ஏற்ப இறைவன் ஆட்கொண்டுள்ளார். இதில் சம்பந்தரும், நாவுக்கரசரும் (அப்பர்) சமகாலத்தவர்கள். இவர்கள் சந்தித்துக்கொண்ட ஒரு நிகழ்வினைப் பார்ப்போம்.
 திருத்தலங்கள் சென்று, பதிகங்கள் பாடி, உடல் நோக உழவாரப்பணியை மேற்கொண்டு தன் இறை பணியை ஆற்றி வருங்கால் அப்பர் பெருமான் திருவையாற்றில் கயிலைக்காட்சி கண்டபின் அருகில் உள்ள சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருப்பூந்துருத்திக்கு வருகை புரிந்தார். அங்கு கோயில் கொண்ட ஈசனை (புஷ்பவன நாதர்) பாடி போற்றி, ஆலயம் அருகில் ஒரு பெரிய மடத்தை நிறுவினார்.
 சுமார் 9 ஆண்டு காலம் அங்கு தங்கி திருத்தொண்டுகள் பலவும் புரிந்து பல்வகைத் தாண்டகங்களையும், திருவங்க மாலை உள்ளிட்ட பல திருப்பதிகங்களையும் அருளிச் செய்தார். அவர் அங்கு வாசம் செய்த தருணத்தில் தான் ஞானசம்பந்தப்பெருமானை இரண்டாம் முறையாக சந்திக்கும் நிகழ்வு நடந்தது.
 மதுரையம்பதியில் சமணர்களை வாதத்தில் வெற்றிக்கொண்ட சம்பந்தர் திருநாவுக்கரசரை காணும் பெருவிருப்போடு திருப்பூந்துருத்திக்குப் புறப்பட்டார்.
 அவர் வருகையை கேள்வியுற்று, பூந்துருத்தி எல்லையில் அப்பர் எவரும் அறியாவண்ணம் சம்பந்தர் ஏறிவரும் சிவிகையைத் தாங்குவாரோடு தாமும் ஒருவராக உடன் தாங்கி வருவாராயினர்.
 ஊர் எல்லையை அடைந்ததும் அப்பரைக் காணாத ஞான சம்பந்தர், அப்பர் எங்குற்றார்? என வினவ சிவிகையைத் தாங்கி வந்த அப்பர் அதனைக்கேட்ட அளவில், "உம் அடியேன் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்று இங்குற்றேன்' என்று கூறினார். பதறிய, ஞானசம்பந்தரும் உடனே சிவிகையிலிருந்து இறங்கி அப்பரை பணிந்தார். இருவரும் உளங்கலந்து திருக்கோயில் சென்று பணிந்து அப்பர் மடத்தில் அளவளாவி உறைந்தனர் என்று கூறுகிறது பெரியபுராணம்.
 அவர்கள் சந்தித்த இடம் இன்றும் "சம்பந்தர் மேடு' என வழங்கப்பெறுகிறது. பூங்துருத்தியைத் தாண்டி திருவாலம்பொழிலுக்குத் தெற்கே வெள்ளாம் பரம்பூரையடுத்துள்ளது இம்மேடு. அப்பர் எதிர்கொண்டு அழைத்த பாங்கை இப்பகுதியில் "பூந்துருத்தி உபசாரம்' என்று சிலாகித்து கூறுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
 "சம்பந்தர் மேடு' என்று அழைக்கப்பட்ட இடம் விரிவாக்கப்பட்டு மண்டபத்துடன் கூடிய சிறிய ஆலயம் எழுப்பப்பட்டு சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. கருவறையில் அப்பரும், சம்பந்தரும் அருகருகே காட்சியளிக்கின்றனர். பெரிய புராணப்பாடலும் செதுக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் திருப்பூந்துருத்தி தலத்திற்கு சென்று ஈசனையும், அப்பர் மடந்தையும், சம்பந்தர்மேடு வளாகத்தையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.
 மேலும் தகவல்களுக்கு - எ.பத்மநாபன்:9894401250.
 -எஸ். வெங்கட்ராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT