வெள்ளிமணி

அப்பளம் மூலம் ஆன்மிகம்

DIN

 தமது ஆசிரமத்தில், பகவான் ரமணர் ஒருபுறம் படுத்திருந்தார். அங்கேயே எதிர்ப்புறத்தில், அவர் அன்னை அழகம்மையார் அப்பளம் இடுவதில் முனைந்திருந்தார். சிறு வயதில், ரமணர் அப்பளத்தை விரும்பிச் சாப்பிட்டதுண்டு. இப்பொழுதும், மிகவும் கஷ்டப்பட்டு, அதற்கான பொருள்களைச் சேகரித்து, அன்னை, மகனுக்காக இதைத் தயாரிக்கிறார். (அனைத்தையும் விடுத்து, ஆசிரமத்திலேயே வந்து தங்கிய போதிலும், மற்றவர்களைப் போலத்தான், அன்னை அங்கிருந்தார்). சற்றே, சோர்ந்து போனஅவர், மகனை உதவி செய்யுமாறு அழைத்தார்.
 "அம்மா! ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? எனக்கு அப்பளம் தேவையில்லை!' என்றார் ரமணர். ஆயினும், அன்னையார் தம் பணியைத் தொடர்ந்தார். "நீ அந்த அப்பளம் செய்; நானும் வேறொரு அப்பளம் செய்கிறேன்!' என்ற ரமணர், அப்பொழுதே ஒரு பாடலை இயற்றினார்.
 "அப்பளம் இட்டுப் பாரு - அதைச்
 சாப்பிட்டு உன் ஆசையைத் தீரு...'
 என்று தொடங்கும் இப்பாடல், மிகுந்த பொருள் கொண்டது; அப்பளம் தயாரித்துப் பொரித்துண்பதை உருவகித்து, பகவான் கூறியதாவது:
 "ஐந்து கோசங்களால் ஆன இவ்வுடலில், தோன்றும் "நான்' என்னும் அகங்காரமாகிய உளுந்தை, நான் யார்? என்னும் திரிகையில் இட்டு, உடைத்து மாவாக்க வேண்டும்! நல்லோர் கூட்டுறவு தான், பிரண்டைச் சாறு! மனஅடக்கமாகிய சீரகம், புலனடக்கமாகிய மிளகு, உலக வாழ்க்கையினின்றும் விலகலாகிய உப்பு, நல்வாசனை என்ற பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து, மாவை, முறைப்படி, "உள்முகம்' என்ற உலக்கையால் இடித்து, உருண்டைகளாகச் செய்ய வேண்டும்; பிறகு, சமநிலை என்ற பலகையில் சாந்தம் என்ற குழவியினால் தேய்க்க வேண்டும்; கிடைக்கும் அப்பளத்தை, மோன முத்திரை என்ற கலத்தில், ஊற்றப்பட்டு (ஞான நெருப்பினால்) காய்ந்து கொண்டிருக்கும், "சத் பிரமம்'என்ற நெய்யில், பொரித்துத் தின்றால், "அதுவே நான்!' என்று தன் மயமாகலாம்...! பேரானந்தம் அடைந்தின்புறலாம்!'' என்பது அவரது அருள் வாக்கு!
 அன்னையார்க்கு, இதன் மெய்ப்பொருள் விளங்கியிருக்குமோ என்னவோ?
 எங்கும், எதிலும், எப்பொழுதும், இறைவனையே காணும் மகரிஷி, இவ்வாறு நமக்கு அளித்துள்ள ஏராளமான உபதேசங்களில் இது ஒன்று என்றாலும், இதன் உட்பொருளில், சிறிது உணர வேண்டுமென்றாலும், மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! உணர்ந்தால் உன்னதப் பயன் பெறலாம்!
 -முனைவர் எஸ். சுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT