வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் 23: திருவாரூர் கமலாம்பிகை

14th May 2021 06:19 PM | ஜி.ஏ.பிரபா

ADVERTISEMENT

 'மகாபத்மாடவ்யாம் ம்ருதித - மல மாயேன மனஸா
 மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத - லஹரீம்'
 - சௌந்தர்ய லஹரி
 திருவாரூரில் வீற்றிருக்கும் கமலாம்பிகை, லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக விளங்குகிறாள். எனவே இங்கு தீர்த்தம் "கமலாலயம்' என்று அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று இதில் நீராடினால் 12 மகாமகம் நீராடிய புண்ணியம் கிடைக்கிறது.
 சக்தி பீடங்களில் இது கமலை பீடம். இரண்டு கால்களையும் மடக்கி, தவக்கோலத்தில் அன்னை, ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள். வலது கால் மீது இடது கால் வைத்து, இடக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி, வலக்கரத்தில் நீலோத்பல மலரை ஏந்தி, மகுடம் தரித்த சிரசில் வளர்பிறை சந்திரன், கங்கை தரித்து கம்பீரமாக வீற்றிருக்கிறாள் அன்னை.
 மை எழுதிய அழகான கண்களை ஆனந்தப் பரவசத்தில் மூடி சிவானந்தத்தில் லயித்து, தென்றலை சுவாசித்து ஆனந்த ரூபமாக விளங்குகிறாள். ஞானத்தின் உச்சியில் சிவயோகத்தில் அனைவரும் போற்றிப் புகழ்பாடும் வடிவில், ஆனந்தக் காட்சி அளிக்கிறாள் தேவி.
 அம்பிகை எதற்காகத் தவம் இருக்கிறாள்?
 "பராசக்தி மகாத்மியம்' அதை அழகாக எடுத்துரைக்கிறது.
 தர்மம் தழைத்திட, சகல உயிர்களும் சர்வமங்கள செளபாக்கியங்களுடன் வாழ, எந்நேரமும் இன்பமுடன் அம்பிகை நினைவில் வாழ்ந்து மகிழ, அன்னை தவம் இருக்கிறாள். தன் குழந்தைகளின் நலனுக்காக யோக தவம் இருக்கிறாள் அம்பிகை.
 அன்னையின் பீடம் "அட்சர சக்தி பீடம்' என அழைக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்தது. இப்பீடத்தின் பிரபையில் முன்பின் 51 அட்சரங்கள், மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளது.
 தியாகேசர் ஆடும் அஜபா நடன வித்தைக்கு அரணாக அமைந்த அம்பிகை. இவள் சுயம்பு உருவம். இவளின் உற்சவமூர்த்தி வடிவம் "மனோன்மணி' என போற்றப்படுகிறது.
 காமத்தை அழித்த கலாவல்லி. எனவே காமகலா ரூபா, வித்யா ஸ்வரூபிணி என்று பலவாறு புகழ்கிறது லலிதா சகஸ்ரநாமம். இவளுக்கு "பைந்தவாசினி' என்ற பெயரும் உண்டு. பைந்தவம் என்பது புருவமத்தி. அம்பிகையை இங்கு நிலைநிறுத்தி தியானித்தால் அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் கிடைக்கும். அனைத்தும் அகன்ற அத்வைத சக்தியாக இருக்கிறாள் கமலாம்பிகை.
 மிக பிரமாண்டமானதும், பழைமையானதும், புராதனமானதுமான இக்கோயில் வளாகத்தில் தனக்கென்று தனிக் கோயிலில் வீற்றிருக்கிறாள் அம்பிகை.
 அர்த்த மண்டபத்தில் ராஜமாதங்கியும், நின்றகோலத்தில் சாமரம் வீசும் அலைமகள், கலைமகள் சிற்ப வடிவில் காட்சியளிக்கிறார்கள். சங்கநிதி, பதுமநிதியே இங்கு துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.
 அன்னையின் கோபுர வாயிலை கடக்கும் போது, மேலே பத்து துவாரங்கள் காணப்படுகின்றன. இது "தசமுத்ரா சமாராத்யா' என்ற நாமத்தைக் குறிக்கிறது. ஈசனும், அம்பிகையும் நிமிஷம் கூட விலகாமல் அன்பர்களின் இதயத்தில் வசிக்கிறார்கள். அவர்களின் சாம்ராஜ்யம் மிகப் பிரம்மாண்டமானது. அதைப் போலவே கோயிலும் மிகப் பெரியது. நாயன்மார்களால் பாடப்பட்டது. இதில் கமலாம்பாள் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. தியாகராஜரின் மகிமைக்கு சிறிதும் சளைக்காத மகிமை பெற்றது அம்பிகையின் வைபவம்.
 அம்பிகையைத் துதித்து முத்துசாமி தீட்சிதர் நவாவரணக் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
 பூலோகத்தில் மணித்வீபமாக விளங்குகிறது தேவியின் தனிக் கோயில். ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலாலயம் பறையூர் என்று திருவாரூர் பேசப்படக் காரணமாக விளங்கும் அம்பிகையின் கோயிலே அனைத்து சக்தி பீடங்களுக்கும் தாய்வீடாக இருக்கிறது.
 இங்கு அம்பிகையை தரிசித்தால் 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
 இங்கு பிறந்தாலே முக்தி என்கிறது புராணங்கள்.
 திருவாரூர் முசுகுந்த சக்ரவர்த்தி, மனுநீதி சோழன் காலத்தில் தலைநகராக விளங்கியது. சப்த விடங்கத் தலங்களில் முக்தி அளிக்கக் கூடிய தலமாக விளங்குகிறது.
 இக்கோயில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்று. இது எப்போது தோன்றியது என்று கூற முடியாது. கோயிலுக்குச் சிறப்பே, கம்பீரமான ராஜகோபுரம்தான். அதேபோல் திருவாரூர் தேர் மிக அழகானது.
 செம்பியன் மாதேவியார் இதை கற்றளிக் கோயிலாக மாற்றினார். பின்னர் குலோத்துங்க மன்னர் காலத்தில் விரிவாக்கப்பட்டது.
 இக்கோயிலில் அஷ்ட துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனைத்தும், ஒரே வரிசையில் தென்திசை நோக்கி அமைந்துள்ளது. அதேபோல் நவகிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பதும் சிறப்பு.
 மாயையினால் ஏற்படும் அஞ்ஞானத்தை நீக்குகிறவள். முனிவர்களால் ஆராதிக்கப்படுபவள். பிரம்ம ஸ்வரூபமாக இருப்பவள் என்று அவளின் அழகை, ரூபத்தை வர்ணித்துப் பாடுகிறார் முத்துசாமி தீட்சிதர்.
 வார்த்தைகளுக்குள் சிக்காத வடிவழகி அம்பிகை. இங்கு அவள் இருவகை உருவங்களுடன் காட்சி அளிக்கிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை. மற்றொன்று கமலாம்பிகை. கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அம்பிகையின் அருகில் தோழி ஒருத்தி தனது தோளில் பாலமுருகனைச் சுமந்திருக்க, முருகனின் சுட்டு விரலைத் தந்து இடது கரத்தில் பற்றியபடி நிற்கிறாள் அம்பிகை. வேறு எங்கும் காணக் கிடைக்காத வடிவம் இது.
 இல்லற வாழ்வில் உள்ளவர்கள், குடும்பத்தில் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, ஆனந்தம் நிலவ நீலோத்பல அம்பிகையை வணங்குகிறார்கள். அவர்களுக்கு தன் இன்னருளைக் குறைவின்றி அருள்கிறாள் அன்னை. யோக வாழ்வை விரும்பும் பக்தர்களுக்கு கமலாம்பிகை அருள் பொழிகிறாள்.
 நீலோத்பலாம்பிகை இம்மை வாழ்விற்கும், கமலாம்பிகை மறுமைக்கும் வழி காட்டும் தத்துவ விளக்கம்.
 இதையே ஆதிசங்கரர் "தாயே! நீயே மாயையாகவும், அதை நீக்கும் கருணை வடிவாகவும் காட்சி அளிக்கிறாய். உன்னை ஒருவன் துதித்தால் அவனின் சகலவித பாவங்களும் விலகி பேரின்பமாகிய உன் பாதத்தை அடைவான் என்பதில் சந்தேகம் உண்டோ?'என்று கேட்கிறார்.
 "பராசக்தி பராநிஷ்டா பிரஜ்ஞான கனரூபிணீ...!' என்று அவளைத் துதிக்க வேண்டியது மட்டுமே நம் கடமை.
 (தொடரும்)
 

ADVERTISEMENT
ADVERTISEMENT