வெள்ளிமணி

குழந்தையும் தெய்வமும்

14th May 2021 06:22 PM

ADVERTISEMENT

 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். ஆனால் தெய்வமே குழந்தைகளைக் கொண்டாடி மகிழ்ந்ததை வேதாகமம் பறைசாற்றுகிறது.
 தேவமகனாய் வந்த இயேசு தான் நிறுவ விரும்பிய அடிமைத்தனம் அகற்றப்பட்ட இறையாட்சியின் அடித்தளம் என்பது குழந்தைகளிடமும் அவர்களையொத்த குணமுடையோரிடமும் இருப்பதாக இயேசு அறிவித்து வந்தார்.
 சிறு குழந்தைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து இறைவேண்டுதல் செய்திடக் கேட்டு அவர்களை அவரிடம் கொண்டு வந்தனர். சீடர்களோ அவர்களை அதட்டினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது!' என்று சொல்லி அவர்களைத் தொட்டு ஆசி வழங்கினார் (மத். 19:13-15).
 குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோரை கொஞ்சம் அதிகமாகவும் அழுத்தமாகவும் சாடினார் இயேசு. "என் மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவதே அவர்களுக்கு நல்லது' என்றார் (லூக். 9:42).
 பிரிவு மனப்பான்மையோடு கூரிடப்பட்டுக் கிடந்த தம் மக்களின் மீட்புக்காக வந்த இயேசுநாதர் அறியாமை மண்டிக்கிடந்த அம்மண்ணில் அறிவு தீபத்தை குழந்தைகளின் இதயத்தில் முதலில் ஏற்ற நினைத்தார்.
 எனவேதான் "இறையாட்சியை சிறு பிள்ளையைப் போல ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என நான் ஊறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்' என்கிறார் கிறிஸ்து இயேசு (லூக். 18:17).
 பரிசேயரும், சதுசேயரும், சட்ட வல்லுநர்களும் பரண்களுக்குள் பதுக்கப்பட வேண்டிய சட்டங்களைப் பலமாகப் பற்றிக்கொண்டும், அதைப்போலவே மதகுருமார்களும் மறைநூல் வல்லுநர்களும் மதத்தின் பெயரால் மக்களை மயக்கி அறிவின் திறவுகோலை அவர்களே வைத்திருப்பதாக இயேசு பெருமான் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தங்கள் ஐம்பதில் திருத்த முடியாத இரும்பு மனங்களை விட்டுவிட்டு, ஐந்தில் இருந்தே வளைக்க முனைந்தார்.
 பவித்ரமான பாலகர்களை, பலருக்கும்... ஏன்! தனது சீடருக்கும் பாடமாக்கினார். ஒருமுறை சீடர்கள் இயேசுவிடம் "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' எனக் கேட்டனர். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி, "நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள். இந்தச் சிறு பிள்ளைகளைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே
 விண்ணரசில் மிகப் பெரியவர்!' என்றார் (மத். 18:1-4).
 ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கவும் அறிவுறுத்தினார். "இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார்!' என்று இயேசு தீர்க்கமாய் மொழிந்தார்.
 நிக்கதேம் என்பாரிடம் இயேசு, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்' என்றார் (யோவா.3:3). மறுபடியும் பிறப்பது என்பது குழந்தையாக மாறுதல் என்பதின் குறியீடாகவே இருக்க இயலும்..!
 -மோசே
 

ADVERTISEMENT
ADVERTISEMENT