நாம் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளித்துக்கொண்டு வாழ வேண்டும். எவரும் நம்மைப் பார்த்து பயப்படாமல் இருக்கும் வகையில் நாம் வாழ்ந்து வர வேண்டும்.
மைத்ரீ உபநிஷதம் - 2
நாம் குடியிருக்கும் வீடு பந்தப்படுத்தும் இடமன்று; பந்தத்திற்கு அது காரணமும் ஆகாது. மனதில் எவன் உலகப்பற்று நீங்கியவனோ, அவன் இல்லறத்தானாயினும் முக்தி எய்துகிறான்.
தேவீ பாகவதம்
ஆத்மாவில் இரண்டறக் கலந்து தியானம் செய்பவர்கள் இருக்கிறார்கள்; பின்னர் அவர்கள் ஆத்மாவிலேயே திளைத்து விளையாடிக்கொண்டு அதிலேயே சந்தோஷமாக இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு யோக சித்தி அதிக தூரத்தில் இல்லை.
காசி காண்டம்
மனித உடலை ஆபரணங்கள் அழகுபடுத்துகின்றன. அதுபோல், தெய்வத்தன்மை வாய்ந்தவர்களை சத்தியம், அடக்கம், அன்பு, தயை, காருண்யம் போன்றவை அழகுபடுத்துகின்றன.
மகான் ஞானதேவர்
உலக மக்களே! நீங்கள் அனைவரும், ""சிவ, சிவ, சிவ'' என்று ஜபம் செய்து, உலக வாழ்க்கையின் தொல்லைகளைப் போக்கிக்கொள்ளக்கூடாதா?
மகான் தியாகராஜர்
காலம் சரியாக இல்லாதபோது, ஆமையைப் போல உறுப்புக்களை (ஐம்புலன்களை) உள்ளே இழுத்துக்கொண்டு அடிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; தக்க தருணம் வந்துவிட்டால் செயலில்
இறங்கிப் பாம்பைப் போல் சீற வேண்டும்.
ஹிதோபதேசம்
விதியும் முயற்சியும் ஒன்றோடொன்று சண்டை போடும் இரண்டு ஆடுகள் போன்றவை; அவற்றில் வீர்யமற்ற ஆடு தோல்வியடைகிறது.
"ஏன் பழைய வினை என்னை ஏவுகிறது?' என்ற எண்ணத்தை முயற்சியினால் முறியடிக்க வேண்டும். தற்போதுள்ள முயற்சியைக் காட்டிலும் அதிக அளவில் உன்னுடைய முயற்சி இருக்க வேண்டும்.
யோகவாசிஷ்டம்
ஒருவர் மாயையை ஜெயித்து ஆத்மஞானம் அடைகிறார். அவரே மாயையின் தோற்றத்தைப் பற்றியும் அழிவைப் பற்றியும் அறிந்தவர் ஆவார்.
மோட்ச கீதை
தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்