வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 134

DIN

ராமலிங்க விலாசத்திற்கே மீண்டும் செல்வோம்... 

விலாசத்தை விட்டுச் சிறிது தொலைவு வந்த பின்னர்தான், "தானாபதிப் பிள்ளை மாத்திரம் தங்களோடு வரவில்லை' என்பதை கட்டபொம்மனும் பிறரும் உணர்ந்தனர். 

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் சிவ சுப்பிரமணியப் பிள்ளை. இவரைத்தாம் "தானாபதிப் பிள்ளை' என்றும் அழைத்தார்கள். கட்டபொம்மனின் செயல்கள் பலவற்றுக்கும் மூளையாக இருந்தவர் தானாபதிப் பிள்ளை. எனவே, கம்பெனியாருக்கு இவர்மீது நிறைந்த வெறுப்பும், சமயம் கிடைத்தால் இவரைப் பிரித்து தண்டிக்க வேண்டும் என்னும் எண்ணமும் இருந்ததாகத் தெரிகிறது. 

தானாபதிப் பிள்ளை ராமலிங்க விலாசத்தில் சிக்கிக் கொண்டார் என்பதை உணர்ந்த கட்டபொம்மன், திரும்பச் சென்று அவரைக் காக்கவேண்டும் என்று நினைத்தார். ஊமைத்துரையும் பிறரும் தடுத்தனர். மீண்டும் சென்றால், பெருங்கேடுகள் சூழும் என்று அஞ்சினர். 

ஏற்கெனவே தம்பியும் மற்றவர்களும் தடுத்தும் கேளாமல் வந்ததால் நேர்ந்த இன்னல்களை எண்ணிய கட்டபொம்மன், இப்போதும் அவர்கள் சொல்வதை உதாசீனப்படுத்தக்கூடாது என்றெண்ணிப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் பயணப்பட்டார். 

இதற்கிடையில், தானாபதிப் பிள்ளையைத் தான் பிடித்து விட்டதைப் பற்றிப் பெருமையுடன் கம்பெனி அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார் ஜாக்சன். "பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தானைப் பணிய வைக்கச் சொன்னால், சண்டை - மரணம் என்கிறவரை போய்விட்டதே' என்று சலனப்பட்ட கம்பெனி நிர்வாகிகள், தானாபதியையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு 
வரும்படி ஜாக்சனுக்கு ஆணையிட்டனர். 

நடந்ததையெல்லாம் தம்முடைய நண்பரான டேவிசனுக்குத் தெரிவித்துக் கட்டபொம்மன் வருந்த, பாளையத்தின் வீரம், அருமை பெருமைகளைக் கம்பெனி நிர்வாகிகளுக்கு டேவிசனும் எடுத்தெழுதினார். 
மூன்றுபேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுத் திருச்சியில் நடைபெற்ற விசாரணையில், ஜாக்சன் ஏறுமாறான தகவல்களைக் கூறியபோதிலும், அழுக்கு உடையிலும் அஞ்சாது நின்ற தானாபதியார், அனைத்து விவரங்களையும் துல்லியமாக எடுத்துரைத்தார். 

தானாபதியை விடுதலை செய்த கம்பெனியார், கட்டபொம்மனை அழைத்துவரச் சொன்னதாகத் தெரிகிறது. தானாபதியின் துணிச்சலாலும், டேவிசனின் நல்லுரைகளாலும், கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டதாகவும் கருதலாம். 

கட்டபொம்மன் திருச்சிக்குச் சென்று அளவளாவியதாகவும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்துக் கொள்ளும் அளவுக்கு நட்புறவு நீண்டதாகவும் சில தகவல்கள் நிலவுகின்றன. 
எப்படியாயினும், திறமையற்றவர் என்று அடையாளமிடப்பட்டு ஜாக்சன் திரும்ப அழைக்கப்பட்டார். 1799 ஜூன் 12-ஆம் நாள், ஸ்டீஃபன் ரம்போல்ட் லூஷிங்டன் பாளையக்கார பேஷ்கஷ் கலெக்டராகப் பொறுப்பேற்றார். 

வேறு சில பிரச்னைகள் சூழ வந்தன. தானாபதிப் பிள்ளை தமக்கு நேர்ந்த அவமானங்களால் மனம் புழுங்கியிருந்தார் போலும்! அவருடைய மகன் வேலாயுதம் பிள்ளையின் திருமணம் கைகூடியது. திருமணச் செலவு உபசாரங்களுக்கான பணத்தையும் நெல்லையும் கட்டபொம்மன் கொடுத்தார். இருப்பினும், இன்னும் நெல் வேண்டும் என்ற நிலையில், கம்பெனிக் கட்டுப்பாட்டிலிருந்த ஸ்ரீவைகுண்டம் நெல்பொதியிலிருந்து நெல்லைப் பெறுவதற்குத் தானாபதியார் முயன்றதாகத் தெரிகிறது.  

வரியாகவும் கிஸ்தியாகவும் பெற்ற நெல்லைப் பொதிகளாக்கி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆற்றூர் ஆகிய நான்கு ஊர்களில் பிரிட்டிஷார் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நெல்லை விற்றுப் பணமும் ஈட்டியுள்ளனர். மகன் திருமணத்திற்காக ஸ்ரீவைகுண்டம் நெல்பொதியிலிருந்து நெல் பெறுவதற்குத் தானாபதியார் முயன்றார் என்னும் தகவல் தெரிகிறதே தவிர, உடனிருக்கும் தகவல்களில் குழப்பங்களும் உள்ளன. 

கோலார்பட்டி, நாகலாபுரம், குளத்தூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய பாளையங்களைக் கட்டபொம்மனுக்கும் தெரியாமல் கம்பெனிக்கு எதிராக ஒருங்கிணைக்கத் தானாபதியார் முயன்றார் என்றும், இது குறித்துத் தெரியவந்த லூஷிங்டன் கட்டபொம்மனுக்கு எழுதிய கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார் என்றும், தன்னைச் சிறைபிடித்து அவமானப்படுத்திய கம்பெனியாரை எதிர் அவமானப்படுத்தக் காலம் பார்த்திருந்தார் என்றும், இவற்றால், பகைமையோடு சென்று ஸ்ரீவைகுண்டம் பொதியைக் கொள்ளையிட்டார் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். 

இன்னும் சிலர், நெல் வாங்குவதற்காகச்சென்றார், சென்ற இடத்தில் காவலர்கள் களங்கம் பேசியதால் கைகலப்பு ஏற்பட்டது, இதனால் பெரும் பிரச்னை மூண்டது என்கிறார்கள். இச்சம்பவங்கள் குறித்த அக்காலத்திய பதிவுகள், ஆங்கிலேயப் பதிவுகளாகவே இருப்பதால், முழுமையாக அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை. 

எப்படியாயினும், ஸ்ரீவைகுண்டம் நெல் பொதிக்கலவரத்தில், பொதியின் காவல்காரராக இருந்த பாண்டியத்தேவன் என்பவர் மாண்டுபோனார். அவருடைய மனைவி அலறியடித்துக் கதறியழுது, செய்தியை ஆங்கிலேயத் தளபதிக்குக் கொண்டு சென்றாள். 

பெர்கெட் என்னும் அத்தளபதி, கலெக்டருக்குத் தெரியப்படுத்திவிட்டு, கட்டபொம்மனுக்கும் கடிதம் எழுதினார். "1799 ஜூன் 4-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் நெல் பொதியில் சுப்பிரமணியப் பிள்ளை கொள்ளை செய்துவிட்டார்; உங்கள் நண்பரான அவர் செய்யும் அட்டூழியங்களை நீங்கள் தட்டிக்கேட்பதில்லை; அவர் தீயவர்; கலெக்டர் லூஷிங்டன் எழுதிய கடிதங்களுக்கும் நீங்கள் விடை தரவில்லை' என்னும் புகார்த் தொகுப்பாகவே அக்கடிதம் இருக்க, விஷயமறிந்த கட்டபொம்மன் துடித்துப் போனார். 

ஒட்டப்பிடாரத்தில் தம் இல்லத்திலிருந்த பிள்ளையை அழைத்து வரச் செய்து விசாரித்தார்.  விலைக்கு நெல் வாங்குவதற்குச் சென்ற இடத்தில், "அங்கிருந்த காவலாளிகள் நம்மவரைத் தவறாகப் பேசினர்; அதனால் சண்டை மூண்டது' என்று பிள்ளை விடையிறுக்க, எடுக்கப்பட்ட நெல்லுக்குத் தாமே இழப்பீடு தருவதாகவும் ஆங்கிலேயரிடம் கட்டபொம்மன் 
கூறியதாகத் தெரிகிறது. 

இதற்கிடையில், பாளையக்காரர்களுக்கிடையில் இருந்த சின்னச் சின்ன உரசல்கள், ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டிருந்தன. இருப்பினும், கம்பெனியை எதிர்ப்பது என்பதிலும் வேற்றுநாட்டாரின் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பது என்பதிலும் பெரும்பாலானவர்கள் ஒன்றுபட்டனர். 

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT