வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் 13 - பந்தணை நல்லூர்  வேணு  புஜாம்பிகை

ஜி.ஏ. பிரபா

"க்ஷிதௌ ஷட் பஞ்சாஸத் - த்வி சஸமதிக - 
பஞ்சாஸ துதகே
ஹுத்úஸ - த்வா சஷ்டிஸ் சதுரதிக - 
பஞ்சாஸ தநிலே' 
-செளந்தர்ய லஹரி  

அம்பிகை பரப்பிரம்ம வடிவமாக இருப்பவள். இவ்வுலகம் அவளிடமிருந்தே தோன்றியது. ஆனந்த வடிவானவள். ஞான ஸ்வரூபம். அனைத்தும் அவளே. உலகுக்கே தாயானவள் அவள். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு குறை, தோஷம் இருக்கிறது. அதை நீக்கும் சக்தி வடிவமாய் அம்பிகை கோயில் கொண்ட தலங்களில் ஒன்றுதான் "பந்த நல்லூர்' என்றழைக்கப்படும் "பந்தணை நல்லூர்'. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ளது.

ஒருமுறை கைலாயத்தில் ஈசனுடன் இருந்தபோது அம்பிகைக்குப் பந்து விளையாடும் ஆசை வந்தது. இதுவும் அவள் சித்தமே. சிவன் ஒரு மந்தஹாசப் புன்னகையுடன் நான்கு வேதங்களையும் இணைத்து பந்துபோலாக்கி அம்பிகையிடம் தருகிறார்.

அம்பிகை மகிழ்வுடன் விளையாடுகிறாள். அதைக்காண தேவர்களும் கூடி விடுகிறார்கள். சூரியனும் அஸ்தமனமாகவில்லை. இதனால் முனிவர்கள் மாலைநேரம் செய்யும் அனுஷ்டானங்களைச் செய்ய முடியவில்லை. இதனை சூரியனிடம் முறையிட அவன் அஸ்தமனமாக மறுத்து, ""வெளிச்சம் இல்லை என்றால் அம்பிகையால் பந்து விளையாட முடியாது. எனவே அம்பிகையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்'' என்கிறான்.

அனைவரும் சிவனிடம் முறையிட, தன்னை நாடிவந்த சிவனையும் தேவி கவனிக்கவில்லை. அதில் கோபம் கொண்ட ஈசன் அன்னையை பசுவாகப் பிறக்கும்படி சாபம் தந்து, பந்தைக் காலால் எட்டி உதைக்க, அது மண்ணுலகில் கொன்றை மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் வந்து விழுந்தது. அந்த இடமே பந்தணை நல்லூர்.

பசுவாக மாறிய தேவி, இங்கு வந்து கொன்றைக் காட்டுக்குள் இருந்த புற்றுக்கு பால் சொரிந்து வழிபட்டாள். அவளுக்குத் துணையாக திருமால் இடையனாக வந்தார். இருவரும் கன்வ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இறைவனை வழிபட்டு வந்தனர்,

ஒருநாள் பசுவின் குளம்படி பட்டு புற்றுக்குள் இருந்த இறைவன் வெளிப்பட்டார். அம்பிகை, திருமால் சுய உருவம் பெற்றனர்.  இறைவி வடக்கு நோக்கித் தவம் இருந்து இறைவனை அடைந்ததால் இங்கு அம்பிகையின் சந்நிதி வேறெங்கும் இல்லாத வகையில் வடக்கு நோக்கி இருக்கிறது.

மூங்கிலைப் போல வளைந்தும் நெளிந்தும், வலிமையுடைய தோள்களில் அவள் தன் குழந்தைகளின் பாரங்களை எல்லாம் சுமக்கிறாள் என்ற பொருள்படும்படி அவளை "வேணு புஜாம்பிகை' என்றும், மெல்லிய தோள்களை உடையவள் என்ற பொருளில் "காம்பணைய தோளி' என்றும் அழைக்கப்படுகிறாள். தனிச் சந்நிதியில் நின்று, வலது கையில் சக்கரமும், இடது கையில் கமண்டலமும் தாங்கி அருள் பாலிக்கிறாள்.

பசுவின் பதியாக வந்ததால் இறைவன் "பசுபதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இறைவன் சுயம்புவாக புற்று வடிவில் காட்சி அளிக்கிறார். அதன் மீது பசுவின் குளம்படியும், பந்து மோதிய வடுவும் 
தெரிகிறது.

பழைமையான மண்டபங்கள் நிறைந்த கோயிலில், இத்தலத்திற்கு வந்து பாடிய அடியவர்களின் பெயரில் வாசல்களும் அமைத்திருக்கின்றனர். 
காம்பிலி நாட்டு மன்னன் பூபதி சூடாமணி. இவரது மகன் பிறக்கும்போதே கண்பார்வை இன்றிப் பிறந்தான். அரசன் இத்தலம் வந்து மண்ணியாற்றில் நீராடி, இறைவனை வணங்கி மகனுக்கு கண் பார்வை வரப்பெற்றான். இங்கு இறைவனை வேண்டி வழிபட்டால் கண் சம்பந்தமான பிரச்னைகள் விலகும்.

"பந்தணை நின்ற எம் பசுபதியாரே' 
என்று சம்பந்தரும், 
"எம்மை ஆளும் பசுபதியாரே' 
என்று அப்பரும் மகிழ்ந்து பாடிய திருத்தலம் இது.     

சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மிகப் பெரியதான பந்தநல்லூர் முப்பத்தி ஐந்தாவது தலமாகும். 

ஏழுநிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முருகன், நவலிங்கங்கள், கஜலக்ஷ்மி,  அன்னபூரணி, சரஸ்வதி இவர்களுடன் நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளனர். சரக்கொன்றை மரம் தலவிருட்சமாகவும், சூரிய தீர்த்தமும் உள்ளது.

அம்பிகை இங்கு தவம் செய்யும்போது அவளுக்குக் காவலாக இருந்த அஷ்டபுஜ பத்ரகாளி சந்நிதியும், முனீஸ்வரர் சந்நிதியும் கோபுர வாசலில் வடக்கு நோக்கி இருக்கின்றன. இங்கு அம்பிகையும், இறைவனும் திருமண வரம் அருள்வதால் இங்கு ஈஸ்வரன் கல்யாண சுந்தர மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். அருணகிரி நாதர் இத்தலத்து முருகனைப் பற்றி திருப்புகழில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

சிவசக்தியின் தத்துவமாக இங்கு அம்பிகை வீற்றிருக்கிறாள். ஒரு பெண் எப்போதும் விழிப்புணர்வுடன், தன்னைச் சுற்றி கவனத்துடன் இருக்க வேண்டும். அவளின் ஆசையானது உலகை அச்சுறுத்தக் கூடாது. உலக உயிர்களின் இயக்கங்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது. அதேநேரம் மனைவியின் ஆசைகளை கணவன் நிறைவேற்றினாலும் அவளைச் சரியான விதத்தில் வழி நடத்த வேண்டும்.

கணவன் தன் மனைவியிடம் கருத்துடன், கனிவுடன், அவ்வப்போது அவளின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று ஈஸ்வரனும், மனைவியானவள் கணவன் கருத்தறிந்து நடந்து அவனின் செயல்களுக்கு உதவ வேண்டும் என்று சக்தியும் உணர்த்துகின்றனர்.

இந்த உலகு சிவசக்தியின் தத்துவமே. ஆணாகிப் பெண்ணாகி அகன்ற பிரபஞ்சமாகி அகிலலோகத்தையும் ஆளுகின்ற பராசக்தி அவள்.
உயிர்களிடம் துவேஷம் பாராட்டாமல் அனைத்து உயிர்களுக்கும் அபயம் அளிப்பவள் அன்னை. எனவேதான் அவளை லலிதா சஹஸ்ரநாமம், துக்க ஹந்த்ரி, சுகப்ரதா, துஷ்டதூரா, தோஷ வர்ஜிதா என்று போற்றுகிறது.  

இக்கோயிலில் மாசிமகம், பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் அழகான அமைப்புடன், அம்பிகையின் பரிபூரண சக்தியுடன் திகழ்கிறது. அவள் தந்த உயிரை, உணர்வை அவளைப் பாடிப் பணிந்தே போற்றப் பயன்படுத்துவோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT