வெள்ளிமணி

குணமாக்கியது திடமான நம்பிக்கை!

DIN


தொடுதல்' என்பது பல உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடர்பு சாதனமாகக் கருதப்படுகிறது. உடலைத் தொடுதல், மனதைத் தொடுதல், எண்ணத்தைத் தொடுதல், சிந்தையைத் தொடுதல், இறைவனைத் தன் பக்தியுணர்வால் மனிதன் தொடுதல் ஆகியவற்றில், இறைவனே தன் பக்தனைத் தொடுதல் மிகப் பெரிய பேறு ஆகும். 

தேவன் இயேசு மனிதனைத் தொட்டு தீர்க்க முடியாத நோயை குணமாக்கிய நிகழ்ச்சி வேதாகமத்தில் உண்டு.  இயேசு தம் ஊழியத்தைத் தொடங்கி, தேவாலயங்களில் போதித்து வந்தார். அவர் தம் வார்த்தைகளால் மனிதரைத் தொட்டார். அவரது வார்த்தைகளைக் கேட்டவர்கள் இறைவனிடம் பக்தி வைத்தார்கள்.  

தினமும் திரளான பக்தர்கள் அவர் வார்த்தைகளைக் கேட்கக் கூடினர். அவ்வாறு வந்தவர்களில் ஒரு தொழுநோயாளியும் இருந்தார். அவர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டார். இயேசுவின்  மேல் பக்தி கொண்ட அவர், தன்னை இயேசுவால் குணமாக்க முடியும் என நம்பினார். 

நீண்ட நாள்களாகத் தொழுநோய் அவர் உடலின் உறுப்புகளைத் தினம் தினம் தின்று கொண்டே  வருகிறது. இதனால் வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் துரத்தப்பட்டு வனாந்தர வெளியில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தேவாலயத்தை விட்டு இயேசு வெளியே போகும் போது, அந்தத் தொழு நோயாளி முழங்காலில் நின்று, "இயேசுவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்கும்'' என்று வேண்டினார். 
இயேசு அந்த நோயாளியின் பரிதாப நிலையைக் கண்டார். அவன் பணிவும், தான் இயேசுவிடம் சென்றால் குணமாவேன் என்ற திடமான நம்பிக்கையையும் கண்ணுற்றார். தன்னைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது என்ற நிலையைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். 

அவனருகில் சென்றார். அவன் தொடக் கூடாத தொழுநோயாளியாக இருந்தாலும் அவனைப் பரிவுடன் தொட்டார். "எனக்குச் சித்தமுண்டு, மனதுண்டு, நோய் சுத்தமாகும்'' என்றார். என்ன ஆச்சரியம்? அவன் உடல் பூரணச் சுத்தமாகி குணமானான். புண்கள் இல்லை. அழுகிய, நாற்றமெடுக்கும் உடலைத் தின்னும் நோய் இல்லை. 

இயேசு அவனைப் பார்த்து, ""யாருக்கும் நீ குணமாகியதைச் சொல்ல வேண்டாம். ஜெருசலேம் ஆலயத்துக்குச் சென்று, அங்கிருக்கும்  ஆசாரியனிடம் நீ குணமாகியதைத் தெரியப்படுத்தி காணிக்கை செலுத்து!'' என்றார். 

குணமாகியவனோ எல்லாரிடமும் தன் உடலைக் காண்பித்து, இயேசு தன்னைக் குணமாக்கியதைக் கூறி இறைவனைப் போற்றினான். நம் தெய்வம் எப்போதும் நம் மேல் கரிசனம் உடையவர்; இரங்கும் மனதுடையவர்; நம் வேண்டுதலைக் கேட்பவர்; தம் அடியார் எப்பேர்ப்பட்ட நிலையிலிருந்தாலும் உதவி செய்வார். குணமாக்குவார். வறுமை நீக்குவார். கஷ்டம் போக்குவார். இறைவனிடம் வேண்டி எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்வோம். என்றும் இறையருள் நம்மோடு..! 

-முனைவர் தே. பால் பிரேம்குமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT