வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! 149

டாக்டா் சுதா சேஷய்யன்

இந்திய தேசிய காங்கிரஸின் 22-ஆவது கூட்டம், 1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்றது. சுதேசிப் பொருள்களுக்கான ஆதரவு, அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், காங்கிரஸ் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பலவகை உரசல்கள் இக்கூட்டத்தில் ஏற்பட்டன.

 இருப்பினும், இரு பிரிவினருக்கும் பாலமாக தாதாபாய் நெளரோஜி செயல்பட்டார். இந்தக்கூட்டத்தின் எதிரொலியாக, பிபின் சந்திர பால் என்னும் பெருமகனார், அந்நிய பகிஷ்கரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 1907-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணப் பகுதிகளுக்கு வருகை புரிந்தார்.
 இதே சமயம், லாலா லஜபதி ராய் அவர்கள், பஞ்சாபில் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி, பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். ராயின் கைது செய்தியைக் கேள்விப்பட்டு, மதராஸ் பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, பால் கல்கத்தா திரும்பினார்.

 1907 ஜூலை மாதம், ஜி. சுப்பிரமணிய ஐயர் திருநெல்வேலிக்கு வருகை புரிந்தார். சுதேசியம் குறித்தும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் பட்ட அவதி குறித்தும் பற்பல ஊர்களிலும் உரையாற்றினார். இந்த உரைகள் பெரும்பாலானவற்றின் போது, வ. உ. சி. }யும் உடன் இருந்தார்.
 1907 டிசம்பரில், 23-ஆவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் சூரத் நகரில் நடைபெறும் என்று தீர்மானம் ஆனது.

 மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் (காலங்காலமாக "எக்ஸ்ட்ரிமிஸ்ட்' என்பதைத் தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டாலும், உண்மை நிலை பற்றி, நேஷனலிஸ்ட் என்றும் தேசியவாதி என்றும் வழங்குவதே சரியாக இருக்கும்; சரித்திரபூர்வமாகவும் இருக்கும்) மோதல் வரக்கூடும் என்பதைப் பலரும் எதிர்பார்த்தனர். அதிக அளவில் மக்களை அழைத்து வருமாறு, வங்காளத்திலிருந்த அரவிந்தகோஷ், வ. உ. சி.-க்குத் தந்தியடித்தார். சென்னையை அடைந்த வ. உ. சி., பாரதியாரோடும் மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியாரோடும் கலந்தாலோசித்தார்.

 100 பேராவது சூரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. பாதி பேருக்கான செலவை ஸ்ரீனிவாசாச்சாரியார் ஏற்றுக்கொண்டார்; மீதிப்பேருக்கான செலவை வ. உ. சி. ஏற்றுக் கொண்டார்.
 1907 டிசம்பர் 6-ஆம் தேதி, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற பேராளர் ஆயத்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற வ. உ. சி., தேசியக் கல்வியையும் உள்நாட்டுத் தொழிலகங்களையும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 "பிரிட்டிஷாரின் கல்விச்சாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதைக் காட்டிலும், சுதேசியப்பள்ளிகள் தொடங்கப்படும் வரை காத்திருக்கலாம்' என்றும் மொழிந்தார்.

 சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டதையும், பம்பாய் நகரத்திற்குச் சென்றதையும் பாரதியார் பதிவிடுகிறார்.

 "சென்னப்பட்டணத்து சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து 21-ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை புறப்பட்டதாகவும், தஞ்சாவூர் கே. ராமஸாமி அய்யர், தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை, சென்னப்பட்டணத்திலிருந்து சக்கரைச் செட்டி, துரைசாமி அய்யர், சங்கர நாராயணய்யர், வெங்கடரமணராவ், யதிராஜ் சுரேந்திரநாத் ஆகியோரோடு தாம் சென்றதாகவும்' பதிவிடுகிறவர், "ஏறத்தாழ 1000 பேர், இளைஞர்களும் கல்விமான்களுமாக வந்து வழியனுப்பியதாகவும், அவர்களின் வரவு பாரத ஜாதிக்கு úக்ஷம காலம் வந்துவிட்டது என்பதன் அடையாளம்' என்றும் தெரிவிக்கிறார்.

 புணே நகரத்தை ரயில் அடைந்தபோது, மகாராஷ்ட்ரியர்கள் பலர், ரயில் நிலையம் வந்திருந்து வாழ்த்தி அனுப்பினராம். பம்பாயை அடைந்தவுடன், அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளை வ. உ. சி.-யே செய்ததாகத் தெரிகிறது.

 பாரதியாரின் பதிவு

 "திங்கட்கிழமை காலை பம்பாய் நகரத்தில் வந்திறங்கினோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே உள்ள "ஸர்தார் கிருஹம்' என்ற ஒரு வசதியிலே கொண்டு எங்களை வி.ஓ.சிதம்பரம் பிள்ளை இறக்கிவிட்டார். அவர் வியாபார சம்பந்தமாக அடிக்கடி பம்பாய்க்கு வந்து பழக்கமுடையவராதலால் எங்களுக்குக் காண்பித்த வசதி மிகவும் நல்லதாக அமைந்திருந்தது'.
 சூரத் காங்கிரஸில் ஏக அமளி. மதராஸிலிருந்து சென்றவர்கள், போலீஸ் தடியடியில் தனித்தனியாகப் பிரிந்து, பின்னர் ஒன்று கூடினர். காங்கிரஸ் கூட்டம் முழுமையாக நடைபெறாமலே கலைந்தது என்றாலும், வ. உ. சி.-யின் முழுமையான அரசியல் ஈடுபாடு இங்கிருந்துதான் கிளர்ந்தது எனலாம்.
 மிதவாதிகள் சேர்ந்து "நேஷனல் கன்வென்ஷன்' என்று தனியானதொரு கூட்டமும், சுதேசியவாதிகள் சேர்ந்து "நேஷனல் கான்ஃபரன்ஸ்' என்றொரு கூட்டமும் நடத்தினர்.

 தேவைப்பட்டால், நேஷனல் கான்ஃப்ரன்ஸ் என்பது தனியான கட்சியாகவே தொடங்கப்படலாம் என்றும் தீர்மானித்தனர்.
 நேஷனல் கான்ஃபரன்ஸிற்கு மூன்று செயலாளர்கள்: வங்காளத்தின் பிரதிநிதியாக அரவிந்தகோஷ், மகாராஷ்ட்ரப் பிரதிநிதியாக பால கங்காதர திலகர், மதராஸ் மற்றும் தென்னாட்டுப் பிரதிநிதியாக வ. உ. சிதம்பரம் பிள்ளை.
 சுதேசியத்தின் தனிப் பெரும் தலைவர்களில் ஒருவராக, நாடு முழுவதும் போற்றக்கூடிய பெருந்தகையாக வ. உ. சி. நிமிர்ந்தார்.
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT