வெள்ளிமணி

புண்டரீகனின் மனதை மாற்றிய புனித நதிகள்!

DIN

இந்தியாவின் முக்கிய வைணவத் தலங்களில் சிறப்புடன் விளங்குகிறது மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் பாண்டுரங்க சுவாமி-ருக்மணி திருக்கோயில்.
 இந்து மதத்தில் சைவ, வைணவத் திருத்தலங்கள் பல உள்ளன. ஆழ்வார்களால் பாடல் பெற்றவை 108 திவ்ய தேசங்களாக கருதப்படுகின்றன. தென்னிந்தியாவிலேயே பெரும்பாலான திவ்யதேசங்கள் உள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனப்படும் பந்தர்பூரில் "விட்டல்-ருக்மணி கோயில்' எனப்படும் பாண்டுரங்க சுவாமி கோயில் உள்ளது.
 கிருஷ்ணா நதியின் கிளை நதியான பீமா நதியின் கரையில் அமைந்துள்ளது, 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில். பகவான் கிருஷ்ணர் இத்தலத்தில் பண்டரிநாதனாக எழுந்தருளியதற்கு பின்னணியில் புராண சம்பவம் உள்ளது:
 ஜானுதேவர்-சத்யவதி தம்பதிக்குப் பிறந்தவர் புண்டரீகன். பெற்றோர் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த அவர், திருமணத்துக்குப் பின் மனைவின் பேச்சால், அவர்களை அவமதிக்கத் தொடங்கினார்.
 பெற்றோர் இருவரும் காசிக்கு செல்ல முடிவு செய்த போது, புண்டரீகன் மனைவி நாமும் செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.
 இந்நிலையில், காசிக்குச் சென்ற போது, பெற்றோர் நடந்து சென்றனர். புண்டரீகனும், அவர் மனைவி குதிரையில் சென்றனர். குக்குட முனிவர் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்த போது, அங்கேயும் தனது குதிரைகளைப் பராமரிக்க வேண்டும் என பெற்றோரை துன்புறுத்தினார்
 புண்டரீகன்.
 புனித நதிகள்: குக்குட முனிவர் ஆசிரமத்துக்கு வரும் 3 பெண்கள் வரும்போது அழுக்கான உடைகளில் வருவர். அங்கு துப்புரவுப் பணிகளைச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, அப்பெண்கள் பளிச்சென்ற ஆடையுடன் செல்வர். இவ்வாறு தினமும் நடந்தது.
 இதைக்கண்டு ஆச்சரியமடைந்த புண்டரீகன், அந்த மூன்று பெண்களையும் அணுகி, இதுகுறித்து கேட்ட போது, ""நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளாவோம். மக்கள் எங்களில் நீராடி தங்கள் பாவத்தைத் தொலைக்கின்றனர். அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் தினமும் ஆசிரமத்துக்கு வந்து தூய்மை அடைந்து திரும்புகிறோம்!'' என்று பதில் கூறினர்.
 "அது எப்படி?'' என்று கேட்டான் புண்டரீகன்.

 "தன் பெற்றோரை தெய்வங்களாகப் பாவித்து, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் மறைகின்றன!'' எனக் கூறி மூன்று பெண்களும் மாயமானார்கள்.
 இதைக்கேட்ட அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தி பெற்றோருக்கு சேவை புரிவதைக் கடமையாகக் கொண்டார்.
 புண்டரீகனின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தத் தலைப்பட்டார் பகவான் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரிடம் கோபித்துக் கொண்டு ருக்மணி தனித்திருந்தார். அவரை துவாரகைக்கு அழைத்துச் செல்லும் வழியில், பெற்றோருக்கு சேவை புரியும் புண்டரீகனைக் காண்பிக்க எண்ணி, அவரது குடிலின் வாயில் முன் நின்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் கிருஷ்ணர்.
 வெளியே சேறும் சகதியுமாக இருந்ததால், ஒரு செங்கல்லை வெளியே வீசி "அதன் மீது நில்லுங்கள், பெற்றோரை கவனித்து விட்டு வருகிறேன்'' எனக் கூறினார். பணிவிடைகளை முடித்தபின் புண்டரீகன் திரும்பினார். ஆனால் பொறுமை இழந்த ருக்மணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதை வெளிப்படுத்தினார்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த புண்டரீகன் அவரது காலில் விழுந்து வணங்கினார். "உன் பெற்றோர் சேவையில் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ணர்.
 அதற்கு ""நீங்கள் எழுந்தருளிய இத்தலம் புண்ணிய தலமாகத் திகழ வேண்டும். பக்தர்கள் தரிசிக்க விட்டலனாக அருள் புரிய வேண்டும்!'' என வேண்டினார்.
 அதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் "பீமா நதியில் புனித நீராடி என்னை வழிபடுவோரின் பாவங்கள் மறையும்'' என்றருளினார். "புண்டரீகபுரம்' என அழைக்கப்பட்ட இத்தலம் பின்னாளில் மருவி "பண்டரிபுரம்' ஆனது.
 புரந்தரதாசர்: பாண்டுரங்கரின் பரம பக்தரான புரந்தரதாசர், ஒருமுறை அவரை தரிசிப்பதற்காக பண்டரிபுரம் சென்றிருந்தார்.
 நீண்ட தூர பயணத்துக்குப் பின் மண்டபத்தில் தங்கியிருந்த புரந்தரதாசர், கால் வலிக்காக வெந்நீரில் ஒத்தடம் தருமாறு தனது சீடர் அப்பண்ணாவிடம் கேட்டார். நீண்ட நேரம் கழித்து தாமதமாக வெந்நீருடன் அப்பண்ணா வந்தபோது, கோபம் கொண்ட புரந்தரதாசர் பாத்திரத்தை அவர் முகத்தில் வீசினார்.
 பின்னர் தனது செயலுக்காக வருந்திய புரந்தரதாசர் காலையில் அப்பண்ணாவைத் தேடிச் சென்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் ""நான் நேற்று இரவில் வரவில்லையே!'' என அப்பண்ணா கூறியதைக் கேட்டு அதிர்ந்தார் புரந்தரதாசர்.
 பின்னர் கோயிலுக்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்த போது, சுவாமியின் முகத்தில் கொப்பளங்கள் இருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
 "எனது கால் வலியை போக்க வந்த உங்கள் மீதே வெந்நீரை ஊற்றி விட்டேனே! மீண்டும் உங்கள் அழகு முகத்தைக் காண வேண்டுமே!'' என மன்றாடினார்.
 பின்னர், புரந்தரதாசர் ஒரு தூண் அருகே அமர்ந்து கண்ணீர் மல்க பல்வேறு பாடல்களை இயற்றினார்.
 மூலவர் பாதங்களில் தொட்டு வழிபாடு: கருவறையில் இடுப்பில் கைகளை ஊன்றியவாறு ஒரு செங்கல்லின் மீது நின்று அருள் புரிகிறார் பாண்டுரங்கன். மூலவரின் முகத்தில் கொப்பளங்களின் தழும்புகள் இருப்பதை இப்போதும் காணலாம். ருக்மணி, ராதை, சத்தியபாமாவுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
 பக்தர்கள் நேராகவே பாண்டுரங்கனின் பாதங்களைத் தொட்டு வழிபடலாம். பண்டரிபுரத்தில் ரயில் நிலையம் உள்ளது. சோலாப்பூர், புணே, லத்தூர் உள்ளிட்டவை அருகே உள்ள பெரிய நகரங்களாகும். ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து மூலம் எளிதாக பண்டரிபுரம் செல்லலாம்.
 தரிசன நேரம்: அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
 ஆனி மாத ஏகாதசி, கார்த்திகை ஏகாதசி உள்ளிட்டவை இத்தலத்தின் முக்கிய திருவிழாக்களாகும். தொடர்புக்கு: 02186-224466.
 - பா.சுஜித் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT